Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -46

Sponsored

Shenba Ninnai Saranadainthen -46

அத்தியாயம் —46

 

 

ஸ்ரீராமின் ஹோமிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும் மதுவின் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை. மது வருவதற்கு முன்பே ஸ்ரீராம் விமலாவிற்குப் போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தான். வெளியில் சென்றுவந்தச் ச்ந்த்ருவிடம் விமலா ஸ்ரீராம் சொன்ன அனைத்தையும் சொல்ல, சந்துரு அமைதியாக கேட்டுக்கொண்டார்.

 

“மது அவ மனசுல என்னதான் நினைச்சிகிட்டு இருக்கா? இன்னைக்கு அவ வரட்டும். நான் எல்லாத்தையும் பேசிடபோறேன். இனியும் என்னால் அவ மனசு மாறுவான்னு காத்துகிட்டு இருக்க முடியாது” என கோபமாக சொல்ல.

 

“விமலா நீ வீணா கோபப்பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே. ஸ்ரீராம் தான் சொன்னானே விட்டு பிடிக்க சொல்லி அதையும் கடைசியா செய்து பார்ப்போமே” என்றார்.

 

“என்னத்த விட்டு பிடிக்கிறது இதுக்கு மேலயும் பொறுமையா எப்படியிருக்க முடியும்? நானும் இப்போ மாறுவா, அப்போ சம்மதிப்பான்னு எவ்வளவு நாளைக்குக் காத்துகிட்டு இருக்க முடியும். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை. அதை அவ என்னைக்குப் புரிஞ்சிக்க போறா?” என கண் கலங்க சொல்ல

 

“புரியும் விமலா முடிந்து போனது வாழ்க்கை இல்லை, இனி, நடக்க போவது தான் நிஜம்னு அவ புரிஞ்சிப்பா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” எனச் சொல்லி விமலாவின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.

 

ஆட்டோவிலிருந்து  இறங்கிய மது கோபத்துடன் கேட்டை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். இத்தனை நாளில் மதுவின் முகத்தில் இப்படி ஒரு கோபத்தைக் கண்டதில்லை. ஹாலில் அமர்ந்திருந்தச் ச்ந்த்ருவைப் பார்த்தும் ஒரு கணம் தயங்கிய மது, “அப்பா மதியம் சாப்பிட்டீங்களா? மாத்திரை போட்டுகிட்டீங்களா?” என கேட்டவளைப் பார்த்த சந்த்ருவின் கண்கள் பாசத்தை வெளிப்படுத்த “நான் சாப்பிட்டேன்டா, மாத்திரை எல்லாம் போட்டாச்சி” என்றார்.

 

“அம்மா எங்கே அப்பா?” என்றதற்கு, “தூங்கிட்டு இருக்காம்மா நீ என்ன ஈவ்னிங் வருவேன்னு சொன்ன மதியமே வந்துவிட்டாயே?” என கேட்டதும், ஒரு கணம் முகம் சுருங்க அதை சீர் படுத்தியபடி “தலைவலி அதான் வந்துவிட்டேன்” என்றவள் விமலாவின் அறைக்குச் சென்று தூங்குவதை எட்டி பார்த்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.

 

“நீ சாபிட்டியாம்மா?” என்றவரின் குரலுக்கு, “எனக்குப் பசி இல்லை அப்பா அப்புறம் சாப்பிடுகிறேன்” எனச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

 

அவள் செல்வதையே பார்த்திருந்தச் ச்ந்த்ருவின் மனம் எங்களுக்காக இப்படிப் பார்த்து பார்த்து செய்கிறாயே, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் என நாங்கள் நினைப்பது தவறா? அதை நீ என்று புரிந்துகொள்வாய்? என வருந்திய படியே அர்ஜுனின் படத்தைப் பார்த்து இப்படி ஒரு பொண்ணு கூட உனக்கு வாழ கொடுத்துவைக்கலையே என ஒரு பெருமூச்சுடன் தங்களின் அறைக்குச் சென்றார்.

 

அறைக்கு வந்த மது இன்று ஸ்ரீராம் கேட்ட கேள்விக்குத்தான் தேவை இல்லாமல் அவனை எடுத்தெறிந்து பேசியதை நினைத்து வருத்தப்பட்டாள். இது எல்லாத்துக்கும் காரணம் அந்த சித்தார்த் தான் என கோபம் முழுதும் அவன் மீது திரும்பியது. அடுத்துவந்த இரு நாட்களும் அறையிலேயே அடைந்திருந்தாள்.

 

திங்கட்கிழமை கிளம்பி ஹோமுக்குச் சென்றவளுக்கு ஸ்ரீராமின் முகத்தைப் பார்ப்பதற்கே தயக்கமாக இருந்தது, இருந்தாலும் தான் செய்த தவறுக்குத்தான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீராமின் எதிரில் சென்று நின்றாள். அவளைப் பார்த்து சிரித்த ஸ்ரீராம் சாதாரணமாக பேசியதைப் பார்த்து மதுவும் மன்னிப்பு கேட்டு கொண்டாள். அந்த வாரம் வேகமாக விரைய ராஜேஷும், தீபக்கும் தங்கள் ஹனிமூனை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தனர்.

 

ஈஸ்வரன் , சந்த்ருவிடம் பேசி ஞாயிற்றுக்கிழமை சித்தார்த் வீட்டு விசேஷத்திற்குத் தங்கள் வீட்டிலிருந்தே சென்றுவிடலாம் என முடிவு செய்ய ,சந்துரு, விமலா, மது மூவரும் சனிக்கிழமை அன்றே கொட்டிவாக்கம் வந்துவிட்டனர். பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, மது வித்யாவையும்,மேகலாவையும் கிண்டல் செய்துகொண்டிருந்தாள். மேகலாவும் ,வித்யாவும் வெளிக்கு சிரித்துக்கொண்டாலும், இருவரும் ஏதோ செய்தியைக் கண்களாலேயே பரிமாறிக்கொண்டனர்.

 

மறுநாள் காலையில் மது எழுந்து குளித்துவிட்டு வெளியில் வந்த போது, அனைவரும் எங்கேயோ கிளம்ப தயாராக இருப்பது தெரிய , அங்கே வந்த மேகலா, சுடிதாரில் நின்றுகொண்டிருந்த மதுவைப் பார்த்து, “என்ன மது நீ கிளம்பாமல் சுடிதார்ல நின்னுகிட்டு இருக்க?”

 

“எங்கே கிளம்பனும்” என புரியாமல் கேட்ட மதுவைப் பார்த்து, “ஏண்டி நீ இந்த உலகத்தில் தான் இருக்கியா? இல்லையா? இன்னைக்கு சித்தார்த் வீட்ல விசேஷம்னு தெரியாது? இல்லை அது கூட மறந்து போச்சா?”

 

மதுவிற்கு அப்போதுதான் அவர்கள் வந்து சென்ற பின் தான் அந்த அழைப்பிதழை பார்க்கவே இல்லை என்றும், அதற்காக தான் தன்னை இங்கே அழைத்து வருவதாக கூட யாரும் சொல்லவில்லையே என்ற எண்ணமும் வந்தது. சொல்லாமல் கூட்கிட்டு வந்தா நான் கிளம்பி வந்துவிடுவேனா? என எண்ணியபடி”அங்கேயெல்லாம் நான் வரல நீங்க எல்லோரும் போய்ட்டு வாங்க” எனச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

 

மதுவின் பதிலைக் கேட்ட மேகலா வித்யாவை அழைத்தாள், “வித்யா இங்கே வாடி, இந்த மதுவை கொஞ்சம் கவனிக்கணும் வா” என வித்யாவை அழைத்துக்கொண்டு மதுவின் அறைக்குச் சென்றாள். மது ஊஞ்சலில் அமர்ந்து அம்புலிமாமா புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள்.

 

உள்ளே வந்த வித்யாவும், மேகலாவும் இதைப் பார்த்ததும் எரிச்சலின் உச்சத்திற்கே சென்றனர்.”கழுதைக்கு ஆகறா மாதிரி இருபத்தி மூணு வயசாகுது, இப்போதான் சின்ன குழந்தை போல அம்புலிமாமா படிச்சிகிட்டு இருக்கா. எழுந்து கிளம்பி வாடி. நாங்க எல்லோரும் தயாராகிவிட்டோம்” என வித்யா கத்தாத குறையாக சொன்னாள்.

 

இருவரையும் பார்த்த மது, “என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து திட்டினா வந்திடுவேனா? இந்தக் கதையெல்லாம் வேண்டாம் கிளம்பினவங்க எல்லோரும் போயிட்டு வாங்க நான் வரலை”

 

“பைத்தியமாடி நீ அவங்க அவ்வளவு தூரம் வந்து அழைத்துவிட்டுப் போயிருக்காங்க, நீ என்னடான்னா வரலைன்னு சட்டம் பேசிகிட்டு இருக்க. சரி அவங்களுக்காக வேண்டாம் உங்க அண்ணனுக்காகவாவது வா.”

 

“நான் தான் வரவில்லை என்றேனே. அப்புறம் என்ன என்னை ஏன் கட்டாயபடுத்துறீங்க? என் மனதுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யமாட்டேன்னு தெரியும் இல்ல?” என்று காட்டமாக கூற.

 

இவகிட்ட இப்படி பேசினால் சரிபடாது என எண்ணிய மேகலா, “தெரியுமடீ நீ ஏன் வரமாட்டேன்னு சொல்வதற்கு என்ன காரணம்னு எனக்குப் புரிஞ்சி போச்சி”

 

“என்னடி புரிஞ்சிகிட்ட சொல்லேன். நானும் நீ புரிந்துகொண்ட விஷயத்தை தெரிந்துகொள்கிறேன்” என எரிச்சலுடன் சொன்னாள்.

 

“நீ உன் மனதில் எதை வைத்துக்கொண்டு இப்படி வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கேன்னு சொன்னால் மட்டும் நீ ஒத்துக்கவா போற… ஆனாலும் சொல்றேன் கேட்டுக்கோ, உனக்கு சித்தார்த் மேல ஒரு ஈடுபாடு வந்திடுச்சின்னு நினைக்கிறேன், உனக்கே இப்போ உன்னைப் பார்த்து பயம் அதான் அவங்க வீட்டுக்குப் போகணும்னு சொன்னதும் உன்னால் வர முடியல….” என்ற மேகலாவைப் பார்த்து

 

“போதும் நிறுத்துடி…விட்டா பேசிகிட்டே போற. உனக்குப் பிடிக்காத ஒருத்தரோட பேரை சொல்லுன்னு சொன்னால் யோசிக்காமல் சொல்லுவேன் சித்தார்துன்னு. என் மனதில் எந்த விகல்பமும் இல்லை” என சத்தம் போட

 

மதுவின் பதிலில் வித்யாவும், மேகலாவும் திகைத்து நின்றனர். இவளுக்கு சித்தார்த் மேல் இவ்வளவு வெறுப்பா? சித்தார்த்தின் நல்ல மனதை இவள் எப்போது புரிந்துகொள்வாள்? ஏற்கெனவே கோபமாக இருந்தவளை மேலும் சித்தார்த் பேரை சொல்லி மேலும்  தூண்டிவிட்டோமோ என எண்ணிய மேகலா, “உன் மனதில் எந்த விகல்பமும் இல்லைன்னு நாங்க எப்படி நம்புவது?” என்றாள்.

 

“நீங்க நம்புனா நம்புங்க, நம்பாவிட்டால் போங்களேன். எனக்கென்ன” என வெறுப்போடுச் சொன்னாள்.

 

“அது எப்படி மேடம் முடியும்? சந்தேகம்னு உன் பேர்ல வந்ததால் அதைத் தவறுன்னு நீ தானே எங்களுக்குப் புரியவைக்கணும். நிரூபிங்க மேடம் நான் சொன்ன விஷயம் தவறுன்னு நிரூபிங்க மது மேடம். அப்போ நான் ஒத்துக்கறேன். உன் மனதில் எந்த விகல்பமும் இல்லைன்னு எங்ககூட விசேஷத்துக்கு வந்து நிரூபி” எனச் சொல்லிவிட்டு மதுவையே பார்க்க, மறுக்க நினைத்த மது யோசித்தபடி ஊஞ்சலில் இருந்து எழுந்தாள்.

 

இவ்வளவு தூரம் கேட்கும் போது நான் போகாமல் இருந்தால் தான் பிரச்சனை. சொன்னது போல போய்விட்டு வந்தால் நாளைக்கு சித்தார்த் பற்றி என்னிடம் பேசுவதற்கு யோசிப்பார்கள் என்ற  எண்ணத்தோடு, “சரி வரேன்” எனச் சொல்லிவிட்டுத் தயாராக தொடங்கினாள்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் சித்தார்த் வீட்டிற்குச் சென்று சேர்ந்தனர். மது கேட்டின் அருகில் வரும்போதே வரவேற்பில் நின்றிருந்த சித்தார்த் மதுவை கவனித்துவிட்டான். வெண்பட்டு நிற புடவையில் கால்முளைத்த மேகமாக நடந்து வருபவளைப் பார்த்து தன்னை மறந்து ரசித்தவன், அந்த அழகை தன் இதயத்தில் கல்வெட்டாக பதித்துக்கொண்டான்.

 

வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த மதுவின் கோபமனநிலை மாறி ஒருவிதமான தவிப்பும், படபடப்புமே மிஞ்சி இருந்தது. அமைதியாக வந்துகொண்டிருந்தவள் வரவேற்பில் பட்டுவேட்டி சட்டையில் நின்றிருந்த  சித்தார்த்தை விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தவளை நேத்ராவின் அழைப்பு திசைதிருப்ப, நேத்ராவைப் பார்த்து புன்னகை புரிந்தாள். அதன் பிறகு சித்தார்த் இருந்த பக்கம் மறந்தும் திரும்பவில்லை.

 

பெரியவர்களை வணங்கி வரவேற்றவன், ராஜேஷ், தீபக்கின் கைகளை பற்றி குலுக்கிவிட்டு இருவரையும் அழைத்து சென்றான். ஆண்கள் அனைவரும் தனியாக சென்று அமர்ந்துக்கொள்ள, நேத்ரா மற்றவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

ஜீவா, ரமேஷ், சுரேஷ் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனம் வந்தவர்களின் மீது சென்றது. ரமேஷ் ஆச்சர்யமாக, “மது வரமாட்டான்னு நினைத்தேன், வந்திருக்காளே?” என்றான்.

 

சுரேஷ், “அவ வரமட்டேன்னு சொன்னால் யார் விடுவது? கூட்டிகிட்டு வந்திருப்பாங்க. எனச் சொல்லிக்கொண்டே திரும்பியவன் மதுவின் பார்வை தன் மீது சற்று எரிச்சலுடன் விழுவதைக் கவனித்துவிட்டு, ஐயோ என்னைத்தான் பார்க்குறா. நான் போய் பேசிட்டுவரேன்” என மதுவின் அருகில் சென்றான்.

 

“என்ன மது எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா?” என்றவனைப் பார்த்து, “பார்த்தா எப்படி தெரியுது?” என்றாள் வெடுக்கென.

 

“என்ன மது ரொம்ப சூடா இருக்கே, பேசும்போதே அனல்பறக்குதே, என்ன கோபம் உனக்கு?” என கேட்க

 

சுற்றி இருப்பவர்கள் தன்னைக் கவனிப்பது போல தோன்ற தன் முகத்தை சற்று சிரிப்பது போல வைத்துக்கொண்டு “நீ வந்த வேலையே மட்டும் பார்த்துகிட்டுப் போ. வலிய வந்து பேசற வேலையெல்லாம் வசிக்காதே” என கடுப்புடன் சொன்னாள்.

 

சுரேஷ் மதுவை வினோதமாக பார்த்தான்.”சரி மது உன்னோட மூட் இப்போ சரி இல்லை நான் பிறகு பேசறேன்” என்றவன் சோர்ந்த முகத்துடன் விலகி செல்ல, சுரேஷின் முகத்தைப் பார்த்த மதுவிற்குக் கஷ்டமாக இருந்தது. தன் இயல்பு நிலையே மாறிவிடுமோ என அஞ்சினாள். இதற்கெல்லாம் காரணம் அந்த சித்தார்த் தான் என தேவை இல்லாமல் அவள் மனம் சித்தார்த்தை திட்டிக்கொண்டிருந்தது.

 

நேத்ரா தேவகியிடம் சொல்ல அவர்களும் தம்பதி சமேதராக வந்து வரவேற்றனர். சுபாவும், மீராவும் வந்து உபசரித்தனர்.

 

தேவகி, “வாங்க வாங்க. நீங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என்னம்மா மது எப்படியிருக்க?”

 

மது சிரித்துக்கொண்டே தலையை மட்டும் ஆட்டினாள்.”வாங்க டிபன் சாப்பிடலாம் ” என அழைத்தார்.

 

ராஜி, “இருக்கட்டும் பங்ஷன் முடியட்டும்” எனச் சொல்ல

 

“முதலில் சாப்பிடுங்க பங்ஷன் ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கே” என்றவர் தூரத்தில் நின்றிருந்த அஷ்வந்தை அழைத்தார். அஷ்வந்த் வருவதைப் பார்த்த மதுவிற்கு சிரிப்பு வர, சிரித்தபடி திரும்பிக்கொண்டாள். ஆனால், மதுவின் சிரிப்பைக் கவனித்த அஷ்வந்த், “என்னங்க என்னைப் பார்த்து இப்படி சிரிக்கிறீங்க. ஜோக்கர் மாதிரி இருக்கேனா?” என்று கேட்க

 

“இல்லை இல்லை சாரி. இத்தனை முறை பாண்டிலும் ஜீன்சிலும் பார்த்திருக்கேன், இப்போ வேட்டி சட்டையில் பார்த்ததும் ஒரு அவஸ்தையோடு நடந்து வந்தீங்களா அதுக்குத்தான் சிரிச்சிட்டேன்” எனச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க

 

“நானே கொடுமையேன்னு இந்த வேட்டியைக் கட்டிகிட்டு இருக்கேன் எப்போ அவிழ்ந்து கீழே விழுமோன்னு தெரியலை, சொன்னா வெட்ககேடு அதுக்குப் பயந்து உள்ளே பாண்ட் கூட போட்டுகிட்டு இருக்கேன் “எனச் சொல்ல அனைவரும்  அடக்க முடியாமல் சிரித்தனர்.

 

“போடா இவனே, பாண்ட் போட்டிருக்கானாம் பாண்ட். ராம ராஜன் ,ராஜ்கிரண் மாதிரி ட்ரௌசர் போட்டுக்கோ அது போதும்” என சுபா சொல்ல மதுவின் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆகியது.

 

“சரி சரி வாங்க வந்து  சாப்பிட்டுவிட்டு பொறுமையாய் உட்கார்ந்து சிரிங்க. இப்போ வாங்க” என அழைத்துக்கொண்டு சென்று சாப்பிட்டு முடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக்கொண்டான். சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருக்க அந்தப் பக்கம் வந்த சித்தார்த் மது தன்னை மறந்து சிரிப்பதைப் பார்த்தவன், தான் நேரில் சென்று நின்றால் அவளுடைய இந்த சிரிப்பு மறைந்துவிடும் என்று எண்ணியபடியே ஏக்கத்துடன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பி சென்றான். இவை அனைத்தையும் மீரா வேலையோடு வேலையாக கவனிக்க தவறவில்லை. சாப்பிட்டுவிட்டு கீழே வந்த அனைவரும் பெண்கள் அமர்ந்திருந்த பக்கமாக அமர்ந்தனர்.

 

நேத்ரா அவசரமாக வந்து மதுவை, “நீங்க கொஞ்சம் வாங்களேன் என் பிரெண்ட்ஸ்க்கு உங்களை அறிமுகபடுத்தணும், “என கையை பிடித்து அழைத்துசென்று அறிமுகப்படுத்த அனைவரும் அவளைப் பார்த்து ஒரு மாதிரி சிரிப்பது போல் தோன்ற, சங்கடத்துடன் நின்றிருந்தாள்.

 

அங்கே வந்த சுபா மதுவை அவர்களிடமிருந்து தனியாக அழைத்து வந்தாள், “ரொம்பத் தேங்க்ஸ். நல்ல நேரத்திற்கு நீங்க வந்து என்னைக் காப்பாத்திட்டீங்க” எனச் சொல்ல சுபா மதுவை வித்யாசமாக பார்த்தாள். என்ன அப்படிப் பார்க்குறீங்க?” என கேட்க.

 

“ஏன் மது முன்னெல்லாம் என்னை வாய் நிறைய அண்ணின்னு கூப்பிடுவ, இப்போ என்ன ஆச்சு உனக்கு? அன்னைக்கு வீட்டுக்கு வந்தபோதும் அப்படி தான் வாங்க, போங்கன்னு சொல்ற. நான் உன்னை எந்த விஷயத்திலாவது வருதப்படவைத்தேனா?” என கேட்க மதுவின் நிலை தர்மசங்கடத்தில் இருந்தது.

 

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்….ணி” எனச் சொன்னாள். சித்தார்த் மீது இருந்த கோபத்தை அவன் குடும்பத்தாரிடம் காட்ட அவளால் முடியவில்லை.

 

சிரித்த சுபா, “சரி இந்தா இந்த தட்டில் கொஞ்சம் கற்கண்டு எடுத்துக்கொண்டு வா, அந்த ரூம்ல தான் இருக்கு” என தட்டை கொடுக்க தயங்கிய மதுவிடம் “அண்ணிக்காக இதை செய்யமாட்டியா?” என்றதும் சிரித்துக்கொண்டே தட்டை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குச் சென்றாள்.

 

மது கதவைத் திறந்து உள்ளே செல்ல அங்கே சித்தார்த் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டே திரும்பிப் பார்க்க, அவனை அங்கே எதிர்பார்க்காத மது அதுவும், பட்டுவேட்டி சட்டையில் மொபைலில் பேசியபடி திரும்பியவனைக் கண்ட மதுவிற்கு அந்த நேரம் சித்தார்த் மறைந்து அந்த இடத்தில் அர்ஜுன் தெரிய, அவள் கண்கள் இருட்டிக்கொண்டுவர தட்டை நழுவவிட்டு விட்டுத் தள்ளாடியவளை, சித்தார்த் ஓடிவந்து தாங்கிக்கொண்டான்.

 

“மதூ… மதூ… என்னாடா ஆச்சு உனக்கு” என கவலையுடன் அவள் கன்னத்தில் தட்டியபடி சுற்றி பார்த்தவன் வெளியே போய் யாரையும் அழைத்து வர முடியாது வீணான குழப்பம் தான் ஏற்படும் என்று நினைத்தபடியே சுற்றி பார்த்தவனின் கண்களில் அருகில் இருந்த பன்னீர் பாட்டில் தெரிய அவளை தன் மார்பின் மீது சாய்த்து அணைத்தபடியே பாட்டிலை திறந்து சிறிது பன்னீரை எடுத்து அவள் கண்களை துடைத்துவிட்டு மீண்டும் அவள் கன்னத்தைத் தட்ட, மது மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.

 

தான் யாருடைய அணைப்பிலோ நிற்பது புரிய நிமிர்ந்து பார்த்த மதுவை, “என்ன ஆச்சு மது ஏன் திடீரென மயக்கம் வந்தது” என கவலையுடன் ஒலித்த சித்தார்த்தின் குரல் அவள் மனதில் பதியவில்லை. இரண்டாவது முறையாக தான் அவனுடைய கையணைப்பில் இருக்கிறோம் என்ற அந்த வெறுப்பில் , “சீ…..” என சித்தார்த்தைத் தள்ளிவிட்டுச் சடாரென விலகினாள்.

 

சித்தார்த்திற்கோ கோபம் சுறுசுறுவென ஏறியது. தன் கைகளை இறுக மூடிக்கொண்டுத் தன் கோபத்தை அடக்கினான். கண்களை இறுக மூடித்திறந்தவன் வேகமாக அந்த அறையைவிட்டு வெளியே சென்றான். சித்தார்த்தின் கோபத்தைக் கண்ட மதுவிற்குப் பயத்தை கொடுத்தாலும் அந்த நேரத்தில் அவன் முகம் ஒரு சிறு வேதனையில் சுருங்கியத்தையும் கண்டுக்கொண்டாள்.

 

அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவள் மனம் வறண்ட பாலைவனமாக காட்சியளித்தது. சித்தார்த் மீது எந்த தவறும் இல்லையே. நான் விழ இருந்த நேரத்தில் தானே என்னை தாங்கி பிடித்தார். எனக்கு எதற்கு இப்படி கோபம் வரவேண்டும்? என எண்ண, மறு நொடியே நான் மயங்கி விழுந்தால் இவனுக்கு என்ன வந்தது? யாரையாவது கூப்பிட வேண்டியது தானே. மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பு. இப்படியெல்லாம் செய்து என் மனதில் வரலாம் என்று நினைக்கிறான் போல அது மட்டும் இந்த ஜென்மத்தில் நடக்க போவதில்லை என அவள் மனமே இரு பிரிவாக பிரிந்து அவளுடன் வாதாடிக்கொண்டிருந்தது. அந்த போராட்டத்துடனே அறையைவிட்டு வெளியே வந்தாள்.

 

மது அந்த அறைக்குள்  சென்ற சில நிமிடங்களில் சித்தார்த் கோபத்தோடுச் சென்றது. இப்போது மது சோர்ந்த முகத்துடன் வருவது வரை வித்யா, மேகலா மட்டும் அல்ல அந்த அறையில் சித்தார்த் இருப்பது தெரிந்து வேண்டுமென்றே மதுவை அனுப்பி வைத்த சுபா, அந்த திட்டத்தை சொன்ன மீராவும் கவனித்தனர்.

 

நல்ல நேரம் தொடங்க சஷ்டியப்தபூர்த்தி நல்லபடியாக நடந்து முடிந்தது. அவர்கள் குடும்பத்தினரை தொடர்ந்து அனைவரும் அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர். விமலாவும் ராஜியும் இவர்களையும் சென்று ஆசிவாதம் வாங்கிக்கொள்ள சொல்ல. ராஜேஷ், தீபக் சென்று வந்ததும், மது சென்று காலில் விழுந்து வணங்க, தேவகி மதுவின் நெற்றியில் குங்குமம் வைத்து “சீக்கிரமே கண்ணுக்கு நிறைந்த புருஷன் வரணும்” என ஆசிர்வதிக்க ,விதிர்த்த மனதுடன் நிமிர்ந்தவளின் கண்கள் அங்கே நின்றிருந்த சித்தார்த்தின் விழிகளை சந்திக்க அவன் விழிகளில்  ஒருவித எதிர்ப்பார்ப்பு தெரிவதை உணர்ந்த மது இமைகளை தாழ்த்திக்கொண்டு அங்கிருந்து சென்று விமலாவின் பின்னால் மறைந்தார் போல அமர்ந்துக் கொண்டாள்.

 

விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் , சித்தார்த்தின் அலுவலகத்தில் பணிபுரிவர்கள், என அனைவரும் கிளம்பி சென்றதும் ராஜேஷும் கிளம்ப,தேவகி,வற்புறுத்தி இருக்க சொல்ல எப்படியும் இன்று சித்தார்த், மது திருமணம் பற்றி பேசுவார்கள் என எண்ணி அனைவரும் இருந்தனர்.

 

ஜீவா, ரமேஷ் குடும்பத்தினர், இரு சம்மந்திகள், ஸ்ரீராம், மது குடும்பத்தினர் மட்டும் இருக்க அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மதுவிற்கு எப்போது அங்கிருந்து கிளம்புவோம் என இருந்தது. மது மட்டும் எதிலும் ஒட்டாமல் தனியாக அமர்ந்திருந்தாள்.சுபாவும், மீராவும் இடையிடையே மதுவை பேச்சில் இழுக்க முயல, அந்த நேரத்திற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு மது அமர்ந்திருந்தாள்.

 

அஷ்வந்த், “வாங்க எல்லோரும் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ளலாம்” எனச் சொல்ல, அதன்படி போட்டோ எடுத்து முடித்ததும் சித்தார்த்தின் குடும்பம் மட்டும் தனியாக ஒரு போடோ எடுத்துக்கொண்டனர். தேவகியும், ராமமூர்த்தியும், சோஃபாவில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் ஹரி,சுபா, சித்தார்த், அத்வைத், மீரா, நின்றிருக்க, குழந்தைகள் நால்வரும் கீழே அமர்ந்து கொண்டும், நேத்ராவும்,அஷ்வந்தும் தன் பெற்றோரின் இருபுறமும் நின்றுகொண்டும் ஒரு போட்டோ எடுத்து முடித்ததும், நேத்த்ரா, ஸ்ரீராமுடன் பேசிக்கொண்டிருந்த மதுவை நோக்கி சென்று, “வாங்க எங்க கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கோங்க” என அழைக்க

 

“அதுதான் ஏற்க்கெனவே நிறைய போடோலயிருக்கேனே நேத்ரா” எனச் சொல்ல.”அது எங்க மொத்த பாமிலியும் இல்லையே வாங்க ப்ளீஸ்” என மதுவின் கையை பிடித்து இழுக்க

 

விமலாவும், “போ மது எவ்வளவு ஆசையா வந்து கூப்பிடுறா, போம்மா” எனச் சொல்ல மது நிமிர்ந்து பார்க்க சித்தார்த் அவளையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, ஒரு கணம் துடிக்க மறந்த இதயம் மீண்டும் துடிக்க படபடத்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நேத்ராவுடன் சென்றவள் நேராக மீராவின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

 

மதுவிடம் நேத்ரா சென்று பேசிக்கொண்டிருக்கும் போதே அஷ்வந்த் போட்டோ கிராபாரிடம் சென்று, ஏதோ சொல்லிவிட்டு வந்து அமர்ந்தான். மது மீராவின் அருகில் நின்றதும் போட்டோகிராபர் “மேடம், நீங்க நடுவில் வந்து நில்லுங்க, இல்லைனா கலர் கான்ட்ராஸ்ட் நல்லா வராது” எனச் சொல்ல

 

மது வெளிப்படையாக தன் முகத்தில் எரிச்சல் தெரிய சித்தார்த் தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தான் முன்பே சொல்லி இந்த ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும் என மனதிற்குள் அவனை திட்டியபடி, சித்தார்த் மேல் இடிக்காமல் சுபாவை நெருங்கி நின்றாள். போடோகிராபரோ இன்னும் சேர்ந்து நிற்க சொல்லி சித்தார்த்தின் தோளோடுத் தோள் உரச நிற்க வைத்த பின்தான் போடோவே எடுத்தார். பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி நின்றிருந்த மது போட்டோ எடுத்து முடித்ததும் விறுவிறுவென அங்கிருந்து சென்று ராஜியின் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டு, “அத்தை கிளம்புங்க வீட்டுக்குப் போகலாம், எனக்குத் தலைவலியா இருக்கு” என்றாள்.

 

“இரும்மா பெரியவங்க அவ்வளவுதூரம் சொல்லி நம்மை இருக்க சொல்லி இருக்காங்க. நாம நடுவில் கிளம்பினா நல்லாயிருக்காது. கொஞ்சம் பொறு கிளம்பலாம்” எனச் சொல்லிவிட்டு மற்றவருடன் பேச ஆரம்பித்தார்.

 

மதுவின் கடுகடுப்பை  கண்ட சித்தார்த் அஷ்வந்தை அழைத்து திட்டிக்கொண்டிருந்தான்

“ஏண்டா இப்படிச் செய்ற, அவ ஏற்க்கெனவே உச்சாணி கம்பில் ஏறி உட்கார்ந்து இருக்கா. மேல மேல அவ மேருப்பை வளர்க்கிரா மாதிரி ஏன் நடந்துக்கறீங்க? இப்போ மொத்தமா அவ கோபம் எல்லாம் என் மேல தான் இருக்கும். என்னவோ நான் தான் எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்றா மாதிரி” என சற்று கோபத்தோடுச் சொல்ல

 

அஷ்வந்த், “உச்சாணி கொம்பில் ஏறினா எப்படியும் ஒரு நாள் இறங்கி வந்து தானே ஆகணும். விடுங்க பிரதர். காதல்ன்னா சும்மாவா.அவனவன் காதலுக்காக செருப்படியே வாங்கறான், ஆனால்,  அண்ணி ரொம்ப டீசென்ட். வெறும் முறைப்போட நிறுத்திக்கிறாங்க” எனச் சொல்லி சிரித்துக்கொண்டே அழைத்து சென்றான்.

 

மது எழுந்து சென்று ஜன்னல் அருகே நின்றுகொண்டு வெளியே குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். தேவகி ராஜியை பார்த்து, “தீபக் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிட்டீங்க, அடுத்து மதுவோட கல்யாணம் தானே, மதுவுக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறீர்களா?” என கேட்க ஜன்னல் அருகில் நின்றிருந்த மது திரும்பி ராஜியை பார்க்க அவரோ மகிழ்ச்சியுடன், “பார்க்கணும், ஆரம்பிக்க வேண்டியது தான். அவளுக்கும் முடிச்சிட்டா எங்க கடமை முடியும்” எனச் சொல்ல மதுவோ  கலங்கிய மனதுடன் நின்றிருந்தாள்.

 

“நாங்களும் எங்க சித்தார்த்துக்குப் பார்க்கணும். இவ்வளவு நாளா பிடி கொடுக்காமல் இருந்தான். இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்கான்” எனச் சொல்ல மது அடுத்த பேச்சு என்னவாக இருக்கும் என யூகித்து அங்கேயே இருந்தால் கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவோமோ என அஞ்சி வீட்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டாள்.

 

அதன் பிறகு அனைவரும் கூடி பேசி நாளை நாள் நன்றாக இருப்பதால் தாங்கள் பெண்  கேட்டுவருவதாக சொன்னதோ, அதற்கு ஈஸ்வரன்,சந்துரு உட்பட மொத்த குடும்பமும் மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்னதோ ஏதும் தெரியாமல் மது கனத்த மனதுடன் வெளியில் நின்றுகொண்டிருந்தாள்.

 

ராஜேஷிற்குத்தான் மதுவின் இந்த செய்கை கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அவன் ஈஸ்வரனிடம் ரகசியமாக “மாமா மதுவிடம் இப்போது ஏதும் சொல்ல வேண்டாம்  நாளைக்கு வரும் போது அவளே தெரிந்து கொள்ளட்டும் இல்லாவிட்டால் அவளை சமாளிக்க முடியாது” எனச் சொல்ல அவரும் சரி என ஒத்துக்கொண்டார்.

 

ஸ்ரீராம் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப, நேத்ராவின் விழிகள் ஸ்ரீராமையே தொடர்ந்தது.

 

நிறைந்த மனதுடன் ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் கிளம்ப சித்தார்த் வீட்டிலும் அனைவரும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். ஆனால், சித்தார்த்தின் மனதில் மட்டும் ஒரு கலக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. கிளம்பும் போதும் அனைவரிடமும் சொல்லிக்கொண்ட மது சித்தார்த்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவன் விழிகள் தன்னைக் காதலுடன் வருடுவதை கூட உணர விரும்பாமல் இருந்தாள். அவளது இதயக்கதவு தனக்காக திறக்காதா? என்ற ஏக்கத்துடன் பார்த்திருந்தான்.

 

 

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?

இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே!

ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *