Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -49

Sponsored

Shenba Ninnai Saranadainthen -49

அத்தியாயம் –49

 

“அம்மா நான் ஆபீஸ் கிளம்பறேன், வரேன் அத்தை” எனச் சொல்லிக்கொண்டு கிளம்பி செல்பவளை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சித்தார்த்திடம் பேசியதையோ ராஜேஷிடம் தான் சண்டை போட்டதையோ மது தன் அத்தையிடமும் அம்மாவிடமும் சொல்லவில்லை. ஆனால், வீட்டில் இருந்த ஒருவிதமான இறுக்கத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என அறிந்துக்கொண்டனர்.

 

ஆனால், இன்று மது ஆபீஸ் கிளம்பி செல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், மது வேலையே விடப்போவது இவர்களுக்குத் தெரியாது இல்லையா!!!!!

 

ஆபிஸிலும் கீதா, சிவா, லதாவுக்கு மது வந்தது குறித்து ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷம். சித்தார்த் தன் அறையிலிருந்தபடியே மது வந்திருப்பதைப் பார்த்தான். மது வேலையே விட்டுச் செல்லப்போவதை ஜீவா, ரமேஷிடம் கூட சொல்லவில்லை. காலையில் விரைவாகவே வந்து விடுவதும், மாலையில் மது சென்ற பின்னே செல்வதும், மதிய உணவு நேரத்தில் எதாவது காரணம் சொல்லி வெளியே கிளம்பி சென்றுவிடுவதுமாக இருவரும் மூன்று நாட்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

 

அன்று மாலை ஆபீஸ் முடியும் நேரம் சித்தார்த் , ஜீவா, ரமேஷ், இருவரிடமும், நாளை தான் மது ஆபீஸ் வருவது கடைசி நாள் அதனால் அவளுக்குச் சென்ட் ஆப் பார்ட்டிக்கு ஏற்பாடுச் செய்யும் படியும், மதியம் அனைவருக்கும் லஞ்ச் தன்னுடைய செலவு என்று சொல்ல

 

ரமேஷ், அதிர்ச்சியுடன், “என்னடா என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. அவ என்னவோ சமாதானம் ஆகி வரா, நீதான் கொஞ்சம் விலகி போகிறாயோ என்று நாங்கள் நினைக்க நீ இப்படி சொல்கிறாயே” என்றான்.

 

சித்தார்த் ஏதும் சொல்லாமல் இரண்டு கைகளையும் கோர்த்து டேபிள் மேல் வைத்து அதில் தன் நெற்றியை பதித்தபடி அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கவே இருவருக்கும் வேதனையாக இருந்தது.

 

ஜீவா, “ஏண்டா அவ திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தா?”

 

“சித்தார்த் கண்களை மூடியபடியே , “அவ வேலையே விட்டுப் போவதற்குக் காரணமே நான் தாண்டா. ப்ளீஸ் என்னை இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்றவன் எழுந்து வெளியில் சென்றான். அதேநேரம் மதுவும் தன் கேபினிலிருந்து வெளியில் வருவதைப் பார்த்தவன் சித்தார்த் அங்கே நின்றுகொண்டிருந்த சிவாவிடம் ஏதோ கேட்பதை போல நின்று பேசிக்கொண்டிருந்தான். ரமேஷும் ,ஜீவாவும் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

சித்தார்த்தின் செய்கை மதுவிற்கே சற்று கஷ்டமாக இருந்தது. சிவாவிடம் பேசிவிட்டுச் சித்தார்த் அந்த ஹாலைக் கடந்து வெளியில் செல்லும் வரை மது அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று காலையிலிருந்தே மனதில் என்னவோ இனம் புரியாத ஒரு உணர்வு ஆட்கொண்டு அவளை அலைகழித்துக்கொண்டிருந்தது.

 

மறுநாள் காலையில் ஆபீஸ் வந்த சித்தார்த் பதினோரு மணிக்கே முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புகிறேன் என்று  கிளம்பிவிட்டான். மதியம் மூன்று மணிக்கு மதுவிற்குப் பிரிவு உபசார விழா நடந்தது. யாருமே எதிர் பார்க்கவில்லை. கீதா தான் மிகவும் வருத்தப்பட்டாள்.

 

சிவாவும், லதாவும் கூட வந்து பேசினார்கள், ஆனால், மது அனைத்துக்கும் வலிய வரவழைத்த புன்னகை ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு, “என்னால் உங்க யாரையும் மறக்க முடியாது. நாம எப்போதும் நல்ல பிரெண்ட்சா இருப்போம்” என்றாள்.

 

சிவாவும், லதாவும் பேசிவிட்டுச் சென்றதும் கீதா மதுவைப் பார்த்து, “நீ எங்கே போனாலும் சித்தார்த்தை உன்னால் மறக்க முடியாது” எனச் சொல்லிவிட்டுத் தன் பாகை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். மது ஏதும் சொல்லாமல் டேபிளில் தலைகவிழ்ந்து அமர்ந்துக்கொண்டாள்.

 

மதுவை தேடிவந்த ரமேஷ், மது அமர்ந்திருந்ததைப் பார்த்து விட்டு ஜீவாவைப் பார்த்தான். ஜீவா “மதுமிதா” என்று அழைக்க மது வேகமாக நிமிர்ந்தாள். ஜீவாவும், ரமேஷும் நின்றிருந்தனர்.

 

ரமேஷ், “மது நீ ரொம்ப புத்திசாலின்னு நினைத்தேன். ஆனால், நீ இவ்வளவு முட்டாளாக இருப்பாய் என நினைக்கவே இல்லை. சித்தார்த் மாதிரி ஒருவன் கிடைக்க நீ கொடுத்துவைத்திருக்க வேண்டும். அவனோட வலியும் வேதனையையும் அவனுக்குள்ளேயே புதைச்சிகிட்டு நடமாடிக் கொண்டிருக்கிறான். ஆனால், நீ வலிய வரும் ஒரு நல்ல வாழ்க்கையை உதறி தள்ளிட்டு நிற்கிறாய். உன்னோட பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்.”

 

ஜீவா, “கையில் கிடைத்த பொக்கிஷத்தை நழுவவிட்டுட்டு நிக்கிற மதுமிதா! இப்பவும் நீ நழுவவிட்ட அந்தப் பொக்கிஷம் இன்னும் உன் முன்னால் தான் இருக்கு. அதைப் பாதுகாப்பா எடுத்து வச்சிக்கிறதும் போனால் போகட்டும்னு விட்டுட்டுப் போறதும் உன் கையிலதான் இருக்கு” என்றான்.

 

தலைகுனிந்தபடி இருவரும் சொன்னதைக் கேட்டுக்கொண்டவள் வாயைத் திறக்கவேயில்லை.

 

ஒரு பெருமூச்சுடன் இருவரும் சென்றதும் சித்தார்த்தின் அறையைத் திரும்பிப் பார்த்தாள்.

 

அவனைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வும் அவளை ஆக்கிரமிக்க, அந்த் நினைவுகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள எண்ணி வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

 

ஆஃபிஸிலிருந்து வெளியில் வந்த மது நேராக பீச்சில் வந்து அமர்ந்தாள். சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் தன் பேகிலிருந்த புது வேலைக்கான உத்தரவு கடிதத்தை எடுத்துக் கிழித்துப் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

 

வீட்டிற்கு வந்த மது தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ச்ந்துரு, விமலாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளது முக வாட்டத்தைக் கண்ட விமலா, “என்னம்மா ஒரு மாதிரி இருக்க? வேலை அதிகமா?” என்று கரிசனத்தோடு கேட்டார்.

 

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என தயங்கியபடி சொல்ல

 

சந்துரு, “சொல்லும்மா என்ன ரொம்ப முக்கியமான விஷயமா?” என்றார்.

 

மது தயக்கத்துடன், “நான்… நான்.. வேலையை  விட்டுவிட்டேன் அப்பா” என்றாள்.

 

விமலாவும், சந்துருவும் ஒருசேர அதிர்ந்தனர்.” என்னம்மா சொல்ற வேலையை  விட்டுட்டியா? எங்ககிட்ட கூட சொல்லாமல் ஏன் இந்த திடீர் முடிவு?” என கேட்டதும்

 

“எனக்குப் பிடிக்கவில்லை அதான் விட்டுட்டேன்” என்றாள்.

 

விமலா கோபத்தோடு, “மது நாங்க உன்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்னபோதெல்லாம் எனக்கு ஒரு மனமாற்றம் தேவைன்னு சொல்லி நீயாதானே வேலையில் சேர்ந்த. இப்போ திடீர்னு பிடிக்காமல் போக என்ன காரணம்? வேலைக்குப் போக பிடிக்கலையா? இல்லை அங்கே இருப்பவர்களை பிடிக்கலையா?” என கேட்க விமலா கேட்டது புரிந்தும் என்ன பதில் சொல்வது என மது தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

 

“சரி விடு விமலா. அவளுக்குப் போக பிடிக்கவில்லை விட்டுட்டா. அதை ஏன் பெரிசுபடுத்துகிறாய்?”

 

“நீங்க சும்மா இருங்க. வரவர நம்மை மதிப்பதே இல்லை. எல்லாம் அவ இஷ்டத்துக்குத்தான் நடந்துகொள்கிறாள்” எனச் சொல்ல

 

மது மறுப்பாக” அப்படியெல்லாம் இல்லை அம்மா” எனச் சொல்ல

 

“என்ன அப்படியெல்லாம் இல்லை. இன்னைக்கு உன்னை நான் நேரடியாக கேட்கிறேன் சொல்லு. ஏன் சித்தார்த்தை வேண்டாம்னு சொல்ற? என கேட்டதும் “இப்போ எதுக்கு அம்மா அந்த பேச்சு. நடுவில் சம்மந்தமே இல்லாமல்” என எரிச்சலுடன் கேட்டாள்.

 

“இதோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் உன் அண்ணன் வந்திடுவான் வந்து அவனே கேட்கட்டும்” எனச் சொல்லும்போதே கார் வந்து நிும் ஓசை கேட்டது.

 

“இதோ வந்தாச்சு, போ போய் நீயே கதவைத் திற” என்றார். கடவுளே இந்த நேரம் பார்த்தா இவங்க வரணும் என எண்ணிக்கொண்டே கதவைத் திறந்தாள். ஈஸ்வரன், ராஜி இருவரும் கல்லூரியில் அனைவருடனும் சுற்றுலா சென்றிருக்க அவர்களை தவிர மற்ற நால்வரும் வந்திருந்தனர். வித்யா இன்னும் மதுவிடம் சரியாக பேசுவதில்லை. மதுவின் “வாங்க” என்ற வரவேற்புக்கு தீபக், “என்ன அல்லிராணி, வாய் தான் வாங்கன்னு வரவேற்குது, முகம்,ஏண்டா இவங்க வந்தாங்கன்னு கேட்பது போலிருக்கு என்ன விஷயம்?”

 

அதற்குள், “வாங்கப்பா, அப்பா அம்மா எப்படியிருக்காங்களாம்?” என கேட்டுக்கொண்டே தோட்டத்திலிருந்து வீட்டிு வந்தனர்.

 

ராஜேஷ் அப்போதுதான் உள்ளே நுழைந்தான். மதுவிற்கு அவனைப் பார்க்கவே சங்கோஜமாக இருந்தது, “மது எப்படிடா இருக்க?” என வாஞ்சையுடன் கேட்டதும், “நான் நல்லாயிருக்கேண்ணா” என கண்களில் நீர் தளும்ப கூறினாள்.

 

அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க தீபக், “ரெண்டு நாள் லீவ் தானே எங்கேயாவது அவுட்டிங் போகலாமா?” என கேட்க ஆளுக்கொரு இடத்தைச் சொன்னார்கள். மது மட்டும் பேசாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.

 

மேகலா மதுவைப் பார்த்து, “என்ன மது, உனக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே” என கேட்டதும்

 

விமலா “இனி, மதுக்கு எபோதுமே லீவ் தான். அவதான வேலையை விட்டுட்டு வந்துவிட்டாளே” என்றார்.

 

ராஜேஷ் , “ஏன் வேலையே விட்ட மது?” என கேட்டும் மது ஏதும் சொல்லாமல் கலவரத்துடன் அமர்ந்திருந்தாள். “இன்னைக்குக்கூட சித்தார்த் கிட்ட பேசினேனே அவன் என்னிடம் ஒண்ணுமே சொல்லவில்லையே? மது நீ செய்யும் வேலையெல்லாம் வர வர எனக்குப் பிடிக்கவே இல்லை.அப்படி உன் மனதில் என்னதான் இருக்கு? இப்படி கேட்பது எதற்கும் பதிலே சொல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தால் என்ன அர்த்தம். அன்னைக்கு வீட்டுக்கு வந்த சித்தார்தோட அப்பா அம்மாவிடம் வாய் கிழிய பேசின இல்ல இப்போ என்ன வாயே திறக்க முடியலையா? சொல்லு” என அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தினான்.

 

மது கோபத்தோடு, “எனக்குப் போக இஷ்டம் இல்லை அவ்வளவுதான். ஒரு வேலையை விட்டுவிட்டு வந்ததற்கா இவ்வளவு கேள்வி? நீங்க இதை சாக்கா வச்சி என்ன பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாதா?” என்றாள்

 

தீபக், “மது ஒரு குடும்பம்னு இருந்தா அதில் இருக்கும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைப்பது இயல்பு தானே. நாங்களெல்லாம் எங்க குடும்பத்தோடு இருக்கும் போது நீயும் அப்படியிருக்கவேண்டும் என நினைப்பதில் தவறு என்ன இருக்கு?” என்றான்.

 

“வேண்டாம், நான் இப்படியே இருந்துவிட்டுப் போறேன்”

 

“ஏய் மது, அறிவு இருந்து தான் பேசறியா? ஏம்மா, இப்படியிருக்க? எங்களோட ஏக்கத்தை புரிஞ்சுக்கவே மாட்டியா? நீ புருஷன் ,குழந்தைகள்னு உன் குடும்பத்தோடுச் சந்தோஷமா இருப்பதைப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா?” எனச் சொன்னதும்.

 

தன் கண்ணீரை அடக்கியபடி, “வேண்டாம்னா உன் தங்கைக்கு அந்த குடுப்பினை இல்லைன்னு நினைத்துக்கொள். எனக்கு நீங்க இத்தனைப் பேர் இருக்கீங்க. யாராவது எனக்கு மூணு வேளை சாப்பாடுப் போட மாட்டீங்களா?உங்களுக்குப் பிறக்க போகும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு உங்க எல்லோருடனும் சந்தோஷமா இருந்துவிட்டுப் போகிறேன்” என்றாள்.

 

ராஜேஷ் வெறுப்புடன், “குழந்தைகளா அது எப்படி வரும்? உனக்காக, உனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை அமையும் வரை நமக்கு குழந்தை வேண்டாம்னு இருக்கா வித்யா. அவளை விடு அவளாவது உனக்கு மாமா பொண்ணு . ஆனால், மேகலா, அவ என்ன பாவம் பண்ணினா அவளுக்குத் தலையெழுத்தா? கல்யாணம் இதுநாள் வரைக்கும் ரெண்டு பேரும் தனிதனியாக தான் இருக்காங்க. தெரியுமா உனக்கு? இதேல்லாம் யாருக்காக உனக்காக உன் மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பவர்களை நீ எவ்வளவு வேதனைப் படுத்துகிறாய் என்று புரிந்துக்கொள்” என்றான்.

 

மதுவின் நெஞ்சே வெடித்துவிடும் போலயிருந்தது. விமலாவும், சந்த்ருவுமே இதைக் கேட்டு உறைந்திருந்தனர்.

 

“ஏன் எல்லோரும் என்னைக் கொல்லாமல் கொல்றீங்க. நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இந்த ஜென்மத்தில் மனதில் நிம்மதியே இல்லாமல் இருக்கேன். நீங்களும் சேர்ந்து ஏன் என்னை வதைக்கிறீங்க” என முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

 

“மது நம்ம மூணு குடும்பத்து சந்தோஷமும் உன் கையில் தான் இருக்கு. நீ உன் கல்யாணத்திற்குச் சம்மதம்னு ஒரு வார்த்தைச் சொல்லு. உன்னோட அந்த ஒரு வார்த்தைக்காக எத்தனைப் பேர் ஏங்கிகிட்டு இருக்காங்க?புரிஞ்சுக்கோடா” என தீபக் சொல்ல

 

ராஜேஷ், “மது! சித்தார்த்துக்கு என்ன குறை? படிச்சிருக்கான்; அழகாயிருக்கான்; புத்திசாலி; நல்லவன் எல்லாத்துக்கும் மேலே உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். இதுக்கு மேல என்னடா வேணும்?”

 

“நான்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன் இல்ல ஏன் என்னைப் போட்டுத் திரும்ப திரும்ப வதைக்கிறீங்க” என்றவள் தன் அறைக்குச் செல்ல படியேற சென்றவளை வேகமாக சென்று கையை பிடித்து திருப்பிய ராஜேஷ் சீற்றத்துடன், “லூசா நீ, கிளிபிள்ளைக்குச் சொல்றா மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா உன் விருப்பப்படியிருக்க. அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் உனக்கு” என்றவன்

 

அவளை இழுத்துச் சென்று விமலா, சந்துரு எதிரில் நிற்கவைத்து, “இவங்க யாரு? உனக்கும், இவங்களுக்கும் என்ன சம்மந்தம்? அர்ஜுனைப் பெத்து வளர்த்து ஆளாக்கி பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைக்கணும் என்ற நேரத்தில் மொத்தமா அவனை இழந்துட்டு நிற்கிறாங்க. அவங்களே மனசை தேற்றிக்கொண்டு இல்லயா? தன் பிள்ளை உன்னை ஆசைபட்டான்னு அவன் சொன்ன ஒரு சொல்லுக்காக, அவனோட விருப்பத்தை நிறைவேற்ற உன்னை அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டு உனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கணும்னு நினைக்கிறாங்களே, அவங்களை பற்றி ஒரு நாளாவது நினைத்து பார்த்தாயா? அவங்களோட கெஞ்சல் கொஞ்சமாவது உன் காதில் விழுதா? நீ செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போறாங்க. சொல்லப்போனா நீ இழந்தது ஒன்றுமே இல்லை. ஆனா அவங்க வாழ்க்கையோட மொத்த சந்தோஷத்தையும் அர்ஜுனோட இழப்போடுச் சேர்த்து இழந்துட்டு நிக்கிறாங்க” எனச் சொன்னதும்

 

“நீ என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம். வீணாக என்னால் சித்தார்தோட வாழ்க்கையே நரகம் ஆகிடும். உன் பிரெண்டோட வாழ்க்கையே நாசம் ஆகிடும் அது தான் உனக்கு வேண்டுமா?” என்றாள் கோபத்தோடு.

 

தீபக், “மது எல்லாவற்றிற்கும் நம் மனசு தான் காரணம். என் கல்யாணம் நடக்க நான் போட்ட கண்டிஷனை நீ இன்னும் மறந்து இருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நான் சொன்னதை செய்வேன் மது. யோசி ரெண்டு நாள் நல்லா யோசி நல்ல முடிவா எடு. சித்தார்த் வீட்டுக்கு நல்ல பதிலா சொல்லு” எனச் சொல்ல

 

“ஐயோ…! என்னை ஏன் புரிஞ்சிக்கமாட்டேன்றீங்க? எனக்குக் கல்யாணம் வேண்டாம், சித்தார்த்தோட வாழ்க்கை என்னால் கெட வேண்டாம். சித்தார்த் சந்தோஷமா இருக்கணும். என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அவருக்குப் பிரச்சனை தான். என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்து அவரோட வாழ்க்கையை சூனியமாக ஆக்கிடாதீங்க” என்றவள் வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

நடந்த அனைத்தையும் நடுவில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த  ச்ந்துரு, விமலா இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர். விமலா கண்கலங்க அதைக்கண்ட தீபக் அவரிடம் வந்து “ஆன்ட்டி, ப்ளீஸ் அழாதீங்க. அவ கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்லுவா. நாங்க கிளம்புகிறோம், வரோம் அங்கிள்” என்று விடைபெற்றுக்கொண்டு அனைவரும் கிளம்பினர்.

 

அடுத்து வந்த நாட்களில் மது தனக்குள் சுருண்டுகொண்டாள். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தாள். ராஜேஷ் வந்து பேசிவிட்டுச் சென்ற நான்கு நாட்களுக்குப் பிறகு விமலா ஒருநாள் மயங்கி விழுந்துவிட ஹைபெர் டென்ஷன் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்லயிருக்கணும் என டாக்டர் அறிவுறுத்த அதன்படி சந்த்ருவும், மதுவும் எப்போதும் விமலாவின் அருகிலேயே இருந்தனர்.

 

மது நேரத்திற்குத் தேவையானதை செய்துகொண்டு விமலாவின் அறையிலேயே இருந்தாள். ஆனால், விமலா மதுவைப் பார்க்கும் போதெல்லாம் வேதனையோடுத் தன் மகனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை எங்கே காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்காமலேயே இறந்து விடுவோமோ என மருகிட உடல் நலம் மேலும் குன்றத்தொடங்கியது.

 

ஒருநாள் இரவு விமலாவிற்குப் பிபி அதிகமாகி தன் சுயநினைவை இழக்க சந்துருவும், மதுவும் அவசரஅவசரமாக அவருக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தனர். அவரை ICU வில் அட்மிட் செய்துவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் சந்த்ருவும் மருந்து வாங்க சென்றுவிட மது நெற்றியை பிடித்தபடி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருக்க,

 

“அண்ணி! நீங்க எங்கே இங்கே? ” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் நின்றிருந்த அஷ்வந்தைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிவிட்டு, “யாரும் எதுவும் சொல்லமாட்டேன்றாங்க அஷ்வந்த் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்றாள்.

 

“கவலைப்படாதீங்க அண்ணி! இங்கே அப்பாவோட பிரெண்ட்தான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்  நான் போய் அவரைப் பார்த்து பேசிட்டு வரேன்” என ஆறுதல் சொல்லிவிட்டு, டாக்டரின் அறையை நோக்கி நடந்தவன் சித்தார்த்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு டாக்டர் குழு சேர்ந்து விமலாவைப் பரிசோதித்து வைத்தியம் செய்துக்கொண்டிருந்தனர். சந்துரு வந்ததும் விஷயத்தைச் சொல்ல கேட்டுக்கொண்டு டாக்டர்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அதேநேரம் சித்தார்த் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.

 

சந்துரு நின்றுகொண்டிருக்க, மது அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து சஷ்டி சொல்லிகொண்டிருந்தாள். அருகில் வந்த சித்தார்த், மதுவின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவனின் நெஞ்சம் கனத்தது. அவளைத் தன் மீது சாய்த்து ஆறுதல் கூற துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு சந்த்ருவிடம் சென்று பேசினான்.

 

தேவகி மதுவின் அருகில் அமர்ந்து, “மது!” என அழைக்க கண்ணை திறந்து பார்த்த மது “ஆன்ட்டி” என்றபடி அவர் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். அவள் முதுகை ஆதரவுடன் தட்டிக்கொடுத்த தேவகி அவளுக்கு ஆறுதல் சொல்லிகொண்டிருந்தார். அந்த ஆறுதல் வார்த்தையில் சற்று தெளிந்த மது நிமிர்ந்து பார்க்க சித்தார்த் சந்த்ருவுடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

தேவகி எடுத்துவந்திருந்த பாலை ஊற்றி இருவருக்கும் கொடுத்துவிட்டுவந்து மதுவிற்கும் ஒரு டம்ளரை கொடுத்தார்.”எனக்கு வேண்டாம் ஆன்ட்டி” என்றவளை, “நைட் சாப்பிட்டு கூட இருக்கமாட்ட மணி பன்னெண்டு ஆகுது இந்த பாலையாவது குடிம்மா வயிற்றை காயபோடாதே” எனச் சொல்ல

 

“இல்ல ஆன்ட்டி, அம்மாவுக்கு இப்படி ஆக நான் தான் காரணம். என்னையே நினைத்து தான் அவங்களுக்கு இந்த நிலைமை அவங்களுக்கு ஏதாவது ஆனால், என்னால் யார் முகத்திலும் விழிக்க முடியாது” என அழுதவளை ஆறுதலுடன் அணைத்துக்கொண்டார்.

 

“மது நல்லதையே நினைப்போம். ஒண்ணும் ஆகாது கவலைப்படாதே நல்லபடியா அவங்க குணமாகி நாளைக்கு இந்த நேரம் உன்னோட பேசுவாங்க பார்த்துகிட்டே இரு. இந்தா முதலில் இந்த பாலை குடி” என கொடுக்கவும் மதுவும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.

 

“ஆன்ட்டி நீங்களும் கொஞ்சம் குடிங்க” என்றாள். “இல்லம்மா எனக்கு இந்த நேரத்தில் வேண்டாம் நீ குடி”

 

முழுதாக ஒருமணி நேரம் டாக்டர்களும் அஷ்வந்தும் தேவையான பரிசோதனை அதற்குண்டான வைத்தியம் என செய்துவிட்டு வெளியில் வந்தனர். டாக்டர் சந்த்ருவிடம் “ஒண்ணும் பயப்பட வேண்டாம், செகண்ட் அட்டாக். மயக்கம் கொடுத்து ரெஸ்ட்ல வைத்திருக்கிறோம், ரொம்ப கோபமோ டென்ஷனோ வராமல் பார்த்துக்கோங்க” எனச் சொல்லிவிட்டுச் சித்தார்த்திடமும் தேவகியிடமும் பேசிவிட்டுச் சென்றார்.

 

மது அஷ்வந்தைப் பார்த்து, “ரொம்பத் தேங்க்ஸ் அஷ்வந்த் நீங்க மட்டும் இல்லைனா என்ன நடந்து இருக்குமோ?” என்றாள் கண்கலங்க. “ஐயோ என்ன அண்ணி இதுக்குப் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. நீங்க எனக்குத் தேங்க்ஸ் சொல்லனும்னா அதை வேறு மாதிரி சொல்லுங்க. சரி நான் கிளம்பறேன் நாளைக்குக் காலேஜ் போகணும்” என்றான்.

 

தேவகி மதுவிடம், “வாயேன் மது உன்னை உங்க மாமா வீட்டில் விட்டுவிட்டுப் போகிறேன்” என்றார்.

 

“இல்லை ஆன்ட்டி மாமா வீட்டில் யாரும் இல்லை. அண்ணனும் அத்தானும், கும்பகோணம் போயிருக்காங்க. மாமாவும் அத்தையும் டூர் போயிருக்காங்க. எல்லோரும் நாளைக்குக் காலையில் தான் வருவாங்க. போன் செய்யாமல் SMS மட்டும் அனுப்பி இருக்கேன்.” என்றாள்.

 

“சரி அப்போ நானும் உனக்கு துணையாக இங்கேயே இருக்கேன்” என்றார்.

 

“அம்மா நீங்க கிளம்புங்க. நைட்ல நீங்க இங்கே கண்விழிக்கவேண்டாம். நான் இங்கே இருந்துவிட்டு காலையில் வருகிறேன். ஏதாவது தேவை என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன். அஷ்வந்த் நீ அம்மாவை கூட்டிகிட்டு காரை எடுத்துக்கொண்டு  போ” என்றதும்

 

மது அவசரமாக, “வேண்டாம் ஆன்ட்டி நாங்களே இருந்துக்கொள்கிறோம். இப்போ ஒண்ணும் அவசியம் இல்லையே” என்றாள்.

 

சித்தார்த் மதுவை முறைத்து பார்க்க, தேவகி, “இருக்கட்டும் மது ஏதாவது அவசரம்னா என்ன செய்வது. நீ இரு சித்தார்த்” எனச் சொல்லிவிட்டுச் சந்த்ருவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.

 

சித்தார்த்தும் கார் வரை வந்து அம்மாவை அனுப்பிவிட்டு டாக்டரிடம் சென்று பேசிவிட்டு வந்தான். சந்த்ருவிடம், “அங்கிள் பக்கத்து ரூமை நமக்குத் தங்கிக்க சொல்லி இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்றான்.

 

சந்துரு , “இல்லப்பா நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்”என்றார்.

 

அவர் அருகில் வந்த மது, “அப்பா நீங்க ரொம்ப நேரம் கண்முழிக்காதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் இங்கே உட்கார்ந்துகொள்கிறேன்” என்றாள்.

 

சித்தார்த் , “ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. ஆன்ட்டி மயக்கத்தில் தானேயிருக்காங்க. இப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கே உட்கார்ந்து என்ன செய்வீங்க. ICU ல அவங்க பாத்துப்பாங்க” என்று சொல்ல அரை மனதாக இருவரும் சென்றனர்.

 

 

மது அங்கிருந்த கட்டிலில் சந்த்ருவைப் படுக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவள் அருகில் வந்த சித்தார்த், “மது நீ போய் அந்த பெஞ்சில் படுத்துக்கோ” என்றான்.

 

மது நிமிர்ந்த அவனைப் பார்க்காமலேயே, “வேண்டாம். நான் இங்கேயே உட்கார்ந்துகொள்கிறேன்” என்றாள்.

 

“சொல்வதைக் கேளு மது. நீ போய்ப் படு. சோர்ந்து போயிருக்க. நான் இங்கேயே உட்கார்ந்து அப்படியே தூங்கிடுவேன். உனக்குப் பழக்கம் கிடையாது” என  சொல்ல எழுந்த மது அந்த பெஞ்சில் சென்று படுத்துக்கொண்டாள்.

 

சோஃபாவில் அமர்ந்த சித்தார்த் எதிரில் இருந்த டீபாயில் காலை நீட்டி கண்களை மூடிக்கொண்டான். ஆனால், உறக்கம் மட்டும் வரவில்லை. கண்களைத் திறந்து மதுவைப் பார்த்தவன் ஏசி குளுமையால், புடவை முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு காலை குறுக்கிக்கொண்டு , லைட் வெளிச்சத்தில் கண்கள் கூசியதால் கண்களை கைகளால் மறைத்தபடி படுத்திருந்தாள். எழுந்து சென்று ஏசி யைக் குறைத்துவிட்டுக் கட்டில் மேல் இருந்த ஒரு பெட்ஷீட்டை எடுத்து அவள் தூக்கம் கலைந்து விடாமல் மெல்ல போர்த்திவிட்டு இரவு விளக்கை போட்டுவிட்டு லைட்டை ஆப் செய்துவிட்டு வந்து சோஃபாவில் அமர்ந்தான்.

 

இவை அனைத்தையும் தூங்குவது போல கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தச் ச்ந்துரு கவனித்ததை சித்தார்த் கவனிக்கவில்லை. காலையில் எழுந்த மது தன் மீது போர்த்தி இருந்த பெட்ஷீட்டை பார்த்தாள். சித்தார்த்தைப் பார்த்தாள், அவன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். எழுந்து சென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டு ICU அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

 

சற்றுநேரத்தில் காலடி ஓசை கேட்டது நிமிர்ந்து பார்க்க தீபக்கும், ராஜேஷும் வந்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட மது எழுந்தாள். என்னவாயிற்று என கேட்டவர்களுக்கு நடந்ததைச் சொன்னாள். தீபக், “வீட்டுக்கு வந்ததும் தான் மெசேஜ் பார்த்தோம். உடனே வந்துட்டோம். அப்பாவுக்கும் போன் செய்து சொல்லிவிட்டேன். ட்ரைன் வந்தாச்சு இன்னும் பதினைந்து நிமிடத்தில் வந்திடுவார்கள்” என்றான்.

 

சந்த்ருவும், சித்தார்த்தும் எழுந்து வெளியில் வர ராஜேஷும், தீபக்கும் முதலில் சந்த்ருவை விசாரித்துவிட்டு, சித்தார்த்திற்குத் தன் நன்றியை கூறினர். தீபக் சொன்னது போல ஈஸ்வரும், ராஜியும் ஸ்டேஷனிலிருந்து நேராக ஹாஸ்பிட்டல் வந்துவிட்டனர். தன் அத்தை மாமாவைப் பார்த்தும் மதுவிற்குச் சற்று தைரியமாக இருந்தது. அருகில் வந்த ஈஸ்வரனை , “மாமா” என்று அழைத்த மதுவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சந்த்ருவிடம் சென்று பேசிவிட்டு வந்தவர், மதுவின் அருகில் வந்து நின்று மதுவை வெறுப்போடு பார்த்தார்.

 

தயக்கத்துடன், “மாமா” என்றவளை “சீ… அப்படி கூப்பிடாதே. நான் வளர்த்த பொண்ணா நீ. எனக்கு அப்படி சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. அவன் ஒருத்தன் போனது போதாதா? நீ இருந்து இன்னும் எத்தனைப் பேரை சாகடிக்க போற. என் மூஞ்சியிலேயே முழிக்காதே” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட, தன் கண்களை மூடி உதட்டைக் கடித்துக்கொண்டு  தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள்.

 

அருகில் வந்த ராஜி, “மதும்மா மாமா ஏதோ கோபத்தில் சொல்லிட்டாருடா. கவலைப்படாதே” எனச் சொல்ல தீபக் கோபத்தோடு, “ஏம்மா அப்பாக்கு எப்போ என்ன பேசுவதுன்னு தெரியாது. அவளே பயந்து போயிருக்கா இந்தநேரத்தில் அவளை வாய்க்கு வந்தபடி பேசிட்டுப் போறாரு. இதுக்கா நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அவசரமா வந்தீங்க” என கடிந்துக்கொண்டான்.

 

அனைத்தையும் கேட்டுக்கொண்டே மது அந்த அறைக்குள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்தவள் தாங்க முடியாமல் தன் கைகளில் முகத்தை பொத்திக்கொண்டு அழுதாள். தன் மொபைலை எடுக்க உள்ளே வந்த சித்தார்த் அவள் அழுவதைத் தாங்க முடியாமல் “மது ப்ளீஸ் அழாதே. அவர் ஏதோ கோபத்தில் சொல்லிட்டார். அதை பெரிசு படுத்தாதே” என்றான்.

 

கண்களை துடைத்துக்கொண்ட மது, “இது எங்க குடும்ப விஷயம் நீங்க தலையிடவேண்டாம்” என முகத்தில் அடித்தாற்போல சொல்ல சித்தார்த் வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு  திரும்ப வாசலில் ராஜேஷ் கண்களில் கோபத்தோடு நின்றுகொண்டிருந்தான். ராஜேஷையும் அழைத்துக்கொண்டு சித்தார்த் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

 

அன்று காலை தேவகியும், ராம மூர்த்தியும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். இரண்டு நாட்கள் ICU வில் இருந்த விமலாவை ரூமுக்கு மாற்றினார்கள். ரூமுக்கு வந்ததும் முதலில் விமலா மதுவை தான் அழைத்து பேசினார். மது அழுதாள். ஈஸ்வரன் வந்து பார்த்தார். அன்றிலிருந்து ஈஸ்வரன் வரும் நேரம் மது அங்கே இருப்பதில்லை. முடிந்தவரை அவர் கண்ணில் படாமல் ஒதுங்கி இருந்தாள்.

 

தேவகியும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். சித்தார்த் தினமும் இருவேளையும் வந்துவிட்டுச் சென்றான். பத்து நாட்கள் ஹாஸ்பிட்டலில் இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 

இந்தப் பத்து நாட்களாக மது ஆழ்ந்த யோசனையிலேயே இருந்தாள். வீட்டிற்கு வந்ததும் ஒருநாள் விமலா சந்த்ருவிடம், “நம்ம மது இந்த கல்யாணத்துக்கு ஒதுக்கவேமாட்டா போல. அவ கல்யாணத்தைப் பார்க்காமலேயே நான் செத்துபோய்டுவேன் போல” எனச் சொல்ல சந்துரு அவருக்கு ஆறுதல் சொன்னார். அந்தப் பக்கம் வந்த மதுவின் காதில் இந்த வார்த்தை விழுந்ததும் துடித்துவிட்டாள். இரண்டு நாட்கள் ரொம்பவுமே யோசனையிலிருந்தாள். அன்று இரவு ஒரு முடிவுடம் உறங்கினாள்.

 

மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்று வந்தவள் சந்த்ருவிடமும், விமலாவிடமும் வந்தாள். விமலா குங்குமத்தை எடுத்து மதுவின் நெற்றியில் வைத்தார். மது தயக்கத்துடன் நிற்க, விமலா, “என்னம்மா தயங்கி தயங்கி நிற்கிறாய்” என்றார்.

 

“அம்மா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதான் எப்படி சொல்வதுன்னு தெரியலை.” என்றாள்.

 

“அப்படி என்னம்மா விஷயம்” என கேட்க. தயக்கத்துடன், “நான் உங்க விருப்பபடியே சித்தார்த்தைக் கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதிக்கிறேன்” என்றாள்.

 

விமலா ஆச்சர்யத்துடன், “மதும்மா உண்மையாவா சொல்ற. நல்லா யோசித்து தானே சொல்ற. உனக்கு மனப்பூர்வமா சம்மதம் தானேடா. இல்லை எனக்காக உன் மனதை மாற்றிக்கொண்டது போல நடிக்கிறாயா?” என்றார்.

 

மது பதட்டத்துடன், “இல்லை அம்மா உண்மையாக தான் சொல்கிறேன். எனக்குச் சம்மதம்” என்றாள்.

 

விமலா சந்தோஷத்துடன், “பார்த்தீங்களா என் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டா. எனக்குத் தெரியும் அவ கண்டிப்பா தன்னோட மனசை மாத்திப்பான்னு. சீக்கிரம் முதலில் ராஜி வீட்டுக்குப் போன் பண்ணுங்க. சித்தார்த் வீட்டுக்குப் போய் என்னைக்குப் பேசுவதுன்னு கேளுங்க. ஐயோ..! என்னால் சந்தோஷத்தைத் தாங்க முடியலையே” என சந்தோஷப்பட்டவரை சந்துரு கட்டுப்படுத்திவிட்டு ஈஸ்வரனுக்குப் போன் செய்து உற்சாகமாக விஷயத்தைச் சொன்னார்.

 

அனைத்தையும் பார்த்துக்கொண்டே தன் அறைக்குச் சென்ற மது கதவை மூடிவிட்டுக் கதவில் சாய்ந்தபடியே நின்று குலுங்கி குலுங்கி அழுதாள். அன்று மாலை அமர்ந்து லாப்டாப்பில் அர்ஜுனுடன் தான் எடுத்துக்கொண்ட போடோக்களை ஒருமுறை பார்த்துவிட்டு அந்த நினைவுகளைக் கடைசி முறையாக நினைத்துக்கொண்டு அனைத்து போட்டோக்களையும் வீடியோக்களையும் அழித்தாள். அர்ஜுன் தனக்கு வாங்கிக் கொடுத்த அனைத்து பொருட்களையும் ஒரு பாகில் போட்டு கொண்டு வந்து சந்த்ருவிடம்

 

“அப்பா இது எல்லாம் உங்க பிள்ளை எனக்காக வாங்கிக்கொடுத்தது. இனி, இதை உபயோகிக்கும் உரிமை எனக்கு இல்லை. அதனால் எல்லாவற்றையும் கொண்டு வந்திருக்கேன் இந்தாங்க, இது அவரோட செயின்” என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றாள். அவள் செல்வதையே சந்துரு பார்த்துக்கொண்டிருந்தார்.

 

அன்றே ஈஸ்வரன் சித்தார்த் வீட்டிற்குச் சென்று நேரில் விஷயத்தைச் சொல்லிவிட்டு அப்போதே நிச்சயத்திற்கு நல்ல நாள் பார்த்துக்கொண்டு வந்துவிட்டனர். அலுவலகத்தில் இருந்து வந்த சித்தார்த்தை அஷ்வந்தும் ,நேத்ராவும் சேர்ந்து கிண்டல் செய்துகொண்டிருக்க. தேவகி மது கல்யாணத்திற்குச் சம்மதித்துவிட்டாள் என்ற விஷயத்தைச் சொல்ல சித்தார்த் சந்தோஷப்பட்டாலும், லேசான தயக்கம் இருந்தது.

 

தன் அறைக்கு வந்த சித்தார்த் ராஜேஷுக்குப் போன் செய்ய, தீபக் சித்தார்த்தை பீச்சுக்கு வரச்சொல்ல சொல்லும்படி கூற, ராஜேஷும் சொன்னதும் உடனே கிளம்பி வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினான். பீச்சிக்கு வந்ததும் தீபக், “ஹலோ மாப்பிள்ளை வாங்க வாங்க கையை கொடுங்க. நினைத்ததை நடத்தி முடிச்சிட்டீங்க” எனச் சொல்லி சிரிக்க.

 

கை கொடுத்த சித்தார்த், “அவ எல்லோருடைய வற்புறுத்தலுக்காக தான் சம்மதித்திருப்பா” என்றான்.

 

ராஜேஷ், “இருந்தாலும் கல்யாணம் வேண்டாம்னு இத்தனை நாள் சொன்னவ இப்போது சொல்லி இருக்க மாட்டாளா? எதுக்குச் சம்மதிக்கணும்” என்றான்.

 

“உன் தங்கைக்கு என் மேல் ஒரு பர்சன்ட் கூட காதல் கிடையாது. நான் தான் அவளை நினைத்து உருகிக்கிட்டு இருக்கேன். அவ மனசில் நான் இல்லை” என்றான்.

 

“ஹலோ மாப்பிள்ளை சார். என்ன சொல்றீங்க நீங்க, அவ உங்க மேல வச்சிருக்க காதல் தான் சார் இந்த கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வச்சிருக்கு. புரியாமல் பார்த்த சித்தார்த்தைப் பார்த்து சிரித்தபடியே அவ உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறா சித்தார்த்” என்றான்.

 

ராஜேஷ், “சும்மா ஏதாவது சொல்லாதடா. அதுக்கு என்ன ஆதாரம்?” என்றான்.

 

“இந்தா இதைப் பாரு, புரியலைன்னா கம்ப்யூட்டர்ல போட்டு என்லார்ஜ் பண்ணி பாரு புரியும்” என்றான்.

 

” என்னடா இது ஒண்ணும் சரியா தெரியல” என்றான் ராஜேஷ்.

 

“ஹ்ம்ம்…உன் அருமை தங்கை அன்னைக்கு உன்னிடம் அடிவாங்கிக்கிட்டுச் சமாதானம் படுத்த நான் பீச்சுக்குக்கூட்டிகிட்டுப் போனேன் இல்லையா அப்போ என்கிட்ட பேசிகிட்டே சித்தார்தோட பேரை மணலில் எழுதி வச்சிருந்தா. கிளம்பும் போது நான் பார்த்துட்டு ஒரு ஸ்நாப் எடுத்து வைத்தேன்” எனச் சொன்னதும் சித்தார்த் வாங்கி பார்த்தான். அவன் மனதில் சந்தோஷ அலை பரவியது.

 

“அதுமட்டும் இல்லை இவ்வளவு நாள் கல்யாணம் வேண்டாம்னு அவளை பத்தி தானே ஏதாவது காரணம் சொல்லுவா. ஆனால், இந்த முறை நாம பேசும்போது சித்தார்தோட வாழ்க்கை பாழாகிடும், நரகம் ஆகிடும்னு முழுக்க முழுக்க சித்தார்த்தையே மையமா வச்சி தான் பேசிகிட்டு இருந்தா” எனச் சொன்னதும் ராஜேஷும் அதை ஆமோதித்தான்.

 

தீபக் சித்தார்த்தின் அருகில் வந்தவன், “சித்தார்த் அவ உன்னை விரும்புவது இன்னும் அவளுக்கே புரியலை. நீதான் அவளுக்குப் புரியவைக்கணும். ஏதோ ஒரு காரணம் தான் அவளுக்குப் புரியவிடாமல் தடுக்குது. இல்லை எந்த காரணத்திற்காகவோ அவ பயப்படறா, அவ ஏதாவது சொன்னாலும் நீ கொஞ்சம் பொறுத்துபோ சித்தார்த். அவ மனசு பூ மாதிரி. அவ கோபமா எதாவது பேசினாலும் நீ கொஞ்சம் தணிந்து போ. உன்னோட நடவடிக்கையால் தான் நீ அவ மனதில் இருப்பதை அவளுக்குப் புரியவைக்க முடியும். இப்போ அவ அரைமனதாக சம்மதம் சொல்லி இருந்தாலும் கூடிய சீக்கிரம் உன்னை புரிந்துக்கொள்ளுவாள்” எனச் சொன்னதும்

 

சித்தார்த், “நீ எனக்குச் சொல்லணுமா தீபக், மதுவை நான் பார்த்துக்கொள்கிறேன்” என மனம் நிறைய சந்தோஷத்துடன் சொன்னான்.

 

ஈஸ்வரனும் ராஜியும் நிச்சயத்திற்குத் தேதி குறித்துவிட்டு நேராக மது வீட்டிற்கு வந்தனர். மது ஈஸ்வரன் எதிரில் வரவே இல்லை. அவரே எழுந்து சென்று கிச்சனில் நின்றுகொண்டிருந்தவளை சென்று பார்த்து, “மதும்மா” என்றதும் மது “மாமா” எனச் சொல்லி அழ “சாரிடா கண்ணா உன்னை நான் அது போல பேசி இருக்க கூடாது. உன்னிடம் அப்படி பேசிவிட்டாலும் என் மனம் இத்தனை நாளாக சரியே இல்லை. சரி போனது போகட்டும். நீ ஒரு சந்தோஷமான செய்தி சொல்லி இருக்க உனக்கு என்ன வேண்டும்?” என்றார்.

 

“சொல்றேன் மாமா” என்றவள் அவருடன் ஹாலுக்கு வந்தாள். “நான் கல்யாணம் செய்துக்கொண்டு  போனதும் அப்பாவும் அம்மாவும் இந்த வீட்டில் தனியாக இருப்பாங்க. அவங்களுக்குத் தனிமை ரொம்ப கொடுமையா இருக்கும். அதனால் இனி, அவங்க ரெண்டு பேரையும் நீங்க நம்ம வீட்டிலேயே வைத்துக் கொள்ளவேண்டும். இதற்குச் சம்மதம் என்றால் என் கல்யாணத்திற்கு நானும் சம்மதிக்கிறேன்” என்றாள்.

 

நிறைய வாக்குவாதத்திற்குப் பிறகு விமலாவும், சந்துருவும் சம்மத்தித்தனர். மளமளவென வேலைகள் நடந்தது. மது தன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. சந்தோஷத்தை காட்டவும் இல்லை அதேநேரம் சோகத்திலும் புரளவில்லை.

 

மது  திருமணத்திற்குச் சம்மதித்தது, அனைவருக்குமே மகிழ்ச்சி. சித்தார்த்தே சுபாவிற்குப் போன் செய்து சொன்னதும் ,முதலில் சுபாவால் நம்பவே முடியவில்லை. மறுநாளே குடும்பத்துடன் கிளம்பி வந்துவிட்டனர். வீடே சந்தோஷத்தில் மூழ்கி இருந்தது. விஷயம் கேள்விப்பட்டு கீதாவும், சுரேஷ் தன் குடும்பத்துடனும் வந்து பார்த்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

 

நிச்சயத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கபட்டிருந்தனர். நிச்சயத்தன்று சித்தார்த்தை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உண்டு இல்லை என ஆக்கிக்கொண்டிருந்தனர். நல்ல நேரத்தில் தாம்பூல தட்டு மாற்றப்பட்டு நிச்சயம் உறுதி செய்யப்பட்டது. முதலில் மது சித்தார்த்திற்கு மோதிரம் போட, அடுத்து சித்தார்த் மதுவிற்கு மோதிரம் போட்டுவிட்டு கையை விடாமல் பிடித்திருக்க மது சங்கடத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

 

மது தன் கையை இழுக்க சித்தார்த்தோ வேண்டுமென்றே அவள் கையை பிடித்து தன் விரலால் அவள் உள்ளங்கையில் லேசாக சுரண்ட மதுவிற்குள் மின்சாரம் பாய கையை வேகமாக இழுத்துக்கொண்டாள். சித்தார்த் சிரித்துக்கொண்டே நிமிர்ந்து பார்க்க நண்பர்கள் கூட்டம் மொத்தமும் சேர்ந்து அவனைப் பார்த்து சிரிக்க சித்தார்த் அசடு வழிய சிரித்தான்.

 

அஷ்வந்த் , “அண்ணா, இதெல்லாம் ரொம்ப ஓவர். நாங்க இத்தனைப் பேர் இருக்கோம் இப்படியா டைரக்டா ரெண்டு பேரும் கையை பிடித்து இழுத்து விளையாடுவீங்க. அங்கே பாரு அண்ணி எப்படி வெட்கபடறாங்க” என சிரிக்க

 

மது ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தாள். மேகலாவும், வித்யாவும், “ஏய் மது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருடி. முகத்தை என்னவோ தின்ன எதோ போல வச்சிருக்க” எனச் சொல்லியும் மதுவால் லேசான புன்னகை கூட செய்யவில்லை.

 

சுரேஷ், “மது வெட்கபடுவதை இப்போவே நல்லா பார்த்துக்கோங்க. கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே ரெண்டு பேரும் ஆப்போசிட்டா ஆகிடுவாங்க. விட்டா அண்ணன் மதுக்குக்கூஜாவே தூக்குவார்” என சிரித்தான்.

 

“டேய் என் பொண்டாட்டிக்கு நான் கூஜா தூக்காம வேற யாருடா தூக்குவா, என்ன கீதா உங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படிதானே” என கேட்க கீதாவோ, “இப்போவே அப்படிதான் அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் மட்டும் என்ன மாறிடவா போகுது” எனச் சொல்ல இப்போது அனைவரும் சுரேஷை பார்த்து சிரித்தனர்.

 

அனைத்து பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தாலும் ,மதுவின் மனதில் கொஞ்சம் கூட சிரிப்பே இல்லை. தன் வருங்காலத்தை எண்ணி பயம் தான் நிறைந்திருந்தது. சித்தார்த் மதுவையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளது மனம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. கண்களில் காதலை தேக்கி விரைவிலேயே உன் மனதை உனக்குப் புரிய வைத்து உன்னை எப்போதும் சந்தோஷத்தோடு வைத்துக்கொள்வேன் மது என எண்ணிக்கொண்டான். வீடே மகிழ்ச்சி கடலில் இருந்தது. மணமக்களைவிடசுற்றி இருந்த அவர்களின் சுற்றத்தின், மனமெல்லாம் நிறைந்திருந்தது.

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *