Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -50

Sponsored

Shenba Ninnai Saranadainthen -50

அத்தியாயம் –50

 

 

நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சித்தார்த் சற்று தாமதமாக ஆபீஸ் சென்றான். சித்தார்த் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். சித்தார்த் புன்னகையுடன் அவர்களின் வரவேற்பிற்கு நன்றி கூறினான்.

 

“மது வேலையை விட்டுப் போனதும் நாங்களெல்லாம் என்னவோ ஏதோ என்று நினைத்தோம், ஆனால், கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உங்க காதலை வெளியே யாருக்கும் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்து விட்டீர்களே?”

 

“நிச்சயத்திற்குத்தான் எங்களை எல்லாம் கூப்பிடவில்லை அட்லீஸ்ட் கல்யாணத்துக்காவது சொல்வீங்களா” என ஆளாளுக்கு கேட்க.

 

சித்தார்த் சிரித்துக்கொண்டே, “சாரி பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கும் யாரையும் கூப்பிட முடியாது. ஆனால், எல்லோருக்கும் ரிசப்ஷனுக்கு அழைப்பு உண்டு. அனைவரும் குடும்பத்தோடு வந்து உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதத்தையும் கொடுக்கணும்” எனச் சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

 

பின்னாலேயே வந்த ரமேஷும், ஜீவாவும், ” என்னடா மாப்பிள்ளை லீவ் போட்டுட்டுக் கனவுலகத்தில் இருப்பேன்னு பார்த்தா ஆபீஸ் வந்து நிக்கிற”

 

“கனவுலகத்தில் இருக்கணுமா, கனவு காணத்தான் நைட் இருக்க. பகல்ல பிழைப்ப பாருங்கப்பா” என்றான் சிரிப்புடன்.

 

“டேய் ஜீவா சித்தார்த் முகத்தில் எக்ஸ்ட்ரா பிரகாசம் தெரியுது இல்ல” எனச் சொல்ல

 

ஜீவாவும், “ஆமாம்டா ரமேஷ், இவ்வளவு நாள் சீரோ வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது, இப்போ தான் தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரியுது” எனச் சொல்லவும்

 

“ரெண்டு பேரும் என்னைப் போட்டு ஓட்றதுன்னு முடிவோட இருக்கீங்க. போங்கடா போய் வேலையை பாருங்க.” என்றான். “வேலையா அது எங்கேடா போகுது, இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சநேரம் கழித்து வேலையை தொடங்கினால் ஒண்ணும் தப்பில்லை”என்ற ஜீவா “ஆமாம் என்னடா கல்யாணத்துக்கு யாரையும் கூப்பிடமாட்டேன்னு சொல்லிட்ட?” என கேட்க

 

“கல்யாணத்தை கொஞ்சம் சிம்பிளா பண்ணிக்கலாம்னு தான். கோவில்ல கல்யாணம், அங்கிருந்து நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு, ஈவ்னிங் ரிசப்ஷன். இது தான் பிளான்” என்றான்.

 

“நீயே முடிவு பண்ணிட்டியா அம்மா அப்பாகிட்ட சொன்னாயா? என்ன சொன்னாங்க ? மது வீட்டில் ஒத்துக்கிட்டாங்களா?” என ரமேஷ் கேட்டதும்

 

சிரித்துக்கொண்டே, “அம்மா அப்பாவுக்குச் சொல்லிட்டேன். இந்த முடிவு எடுக்க காரணமே மது தான். கல்யாணம் கிராண்டா செய்தா அவளுக்கு மனசு கஷ்டமா இருக்கும் அதான் இந்த முடிவு” என்றான் புன்னகையுடன்.

 

“என்னடா இதுக்குள்ள வரப்போற பொண்டாட்டிக்குச் சப்போர்டா” என்றான் ஜீவா.

 

“சப்போர்ட் இல்லடா அவ மனசை காயபடுத்தாம இருக்க தான். கல்யாணத்துக்கே அரை மனதா தான் சம்மதம் சொல்லி இருப்பா. அதனால் தான் அப்படி முடிவெடுத்தேன். மதுவோட எண்ணமும் அதுவாக தான் இருக்கும். அம்மாவும், அப்பாவும் கல்யாணத்துக்கு நாள் குறித்துவிட்டு இன்னைக்கு ஈவ்னிங் மது வீட்டுக்குப் போய்பேசறேன்னு சொல்லி இருக்காங்க.”

 

“உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்குடா. நீ கண்டிப்பா மதுவோட மனசை மாற்றுவாய் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என ரமேஷ் சித்தார்த்தை அணைத்துக்கொண்டான்.

 

மது தன் வீட்டிலும் அதையே தான் சொல்லிக்கொண்டிருந்தாள்.”கல்யாணத்தை சிம்பிளா வச்சிக்கலாம்னு சொல்லுங்க மாமா” என்றதும்.

 

“அது எப்படிடா? அவங்க என்ன பிளான் வச்சிருக்காங்களோ? அதுமட்டும் இல்லை நம்ம வீட்டில் ரெண்டுக் கல்யாணம் அவங்க வீட்டில் ரெண்டுக் கல்யாணம் எல்லாம் நல்லா கிராண்டா செய்துவிட்டு உன் கல்யாணத்தை மட்டும் எப்படிமா சிம்பிளா பண்ணமுடியும்?”

 

“ப்ளீஸ் மாமா” என கெஞ்சியவளைப் பார்த்த ஈஸ்வர் அவள் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, “சரிடா அவங்க வரட்டும்,  பேசுவோம். அவங்க சரி என்று சொன்னால் தான் நீ சொல்வது போல நடக்கும். இல்லாவிட்டால் நாம தான் கொஞ்சம் மாத்திக்கணும்” என்றார். மதுவும் அரை மனதாக ஒத்துக்கொண்டாள்.

 

ஆபிஸிலிருந்து சற்று முன்பாகவே கிளம்பிய சித்தார்த் நேராக புடவை கடைக்குச் சென்று இலைபச்சையிலிருந்த சிம்பிள் பட்டு புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து நகை கடைக்குச் சென்றவன், அந்த புடவைக்கு ஏற்ற நிறத்தில் எமரல்ட் செட் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் காட்டினான்.

 

தன் மகன் வாங்கி வந்ததைப் பார்த்த தேவகி, “ரொம்ப நல்லாயிருக்குப்பா. ஒண்ணு செய் நீயும் கிளம்பி வா. உன் கையாலேயே கொடுத்துவிடேன்” என்றார்.

 

“வேற வினையே வேண்டாம். இதை கொண்டுபோய் கொடுங்க. ஆனால், நான் தான் வாங்கிக்கொண்டு வந்தேன்னு சொல்லாதீங்க” என்றான்.

 

சித்தார்த் சொல்வதை கேட்டுக்கொண்டே வந்த சுபா, “என்ன பயம்டா உனக்கு மதுவிடம்? இப்போவே உன்னை ஆட்டி படைக்கிறா பார்த்தியா? நான் அப்போதே நாலு வருஷத்துக்கு முன்பே சொல்லவில்லை, உனக்கு வரப்போற பொண்டாட்டி உன் காதை பிடித்து திருகுவான்னு” என்றாள் சிரித்துக்கொண்டே.

 

“சுபா நேரமாகுது கிளம்பு வந்து பேசிக்கலாம். மீரா தயாரான்னு பாரு கிளம்பலாம்” என கிளப்ப.

 

சுபா சித்தார்த்திடம், “சரி இந்த புடவையை பார்த்துவிட்டு உன் ஹனி என்ன சொல்றான்னு கேட்டுகிட்டு வந்து அதை அப்படியே உன்னிடம் சொல்றேன் ஓகே” என கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றாள்.

 

மது வீட்டில் மேகலாவும், வித்யாவும் சேர்ந்து “மது இந்த புடவை கட்டு, இந்த நகையைப் போட்டுக்கோ மேட்சா இருக்கும்” என ஆளாளுக்குப் போட்டு குழப்ப, மது அமைதியாக கட்டிலில் அமர்ந்துகொண்டிருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மதுவிற்குப் பூ எடுத்துக்கொண்டு வந்த ராஜி, “மது இன்னுமா நீ ரெடி ஆகல அவங்க கிளம்பிட்டாங்க. இன்னும் பத்து நிமிடத்தில் வந்திடுவாங்க. சீக்கிரம் ரெடி ஆகும்மா.” என்றார்.

 

“அத்தை இவங்க ரெண்டு பேரையும் முதலில் இங்கே இருந்து இழுத்துக்கொண்டு  போங்க. நானே கிளம்பி வரேன்” என்றாள்.

 

“நீங்க ரெண்டு பேரும் கீழே போய் கிச்சன் வேலையை பாருங்க போங்க” எனச் சொல்லி இருவரையும் கீழே அனுப்பிவிட்டு மதுவிடம் திரும்பியவர், மது அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து, “மதும்மா உனக்கு கொஞ்சம் கஷ்டமாதாண்டா இருக்கும். எங்களுக்குப் புரியுது. அவங்க வரும் போது முகத்தை கொஞ்சம் சிரித்தது போல வச்சிக்கடா. சரியா” என வாஞ்சையுடன் சொன்னவரை பார்த்து சரியென சொல்ல.

 

“என் ராஜாத்தி, சீக்கிரம் கிளம்பிவாடா” எனச் சொல்லிவிட்டு கீழே சென்றார். சிலநொடிகள் கண்ணை மூடிக்கொண்டு நின்றிருந்தவள் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு கிரேப்சில்க் ஒன்றை எடுத்து கட்டிக்கொண்டு, தயாராக ஆரம்பித்தாள்.

 

 

சிறிது நேரத்தில் கார் வந்து நிற்க தன் பெற்றோருடன், அத்வைத் குடும்பமும், சுபா குடும்பமும் வந்து இறங்கினர். அனைவரும் வாசலுக்கே வந்து வரவேற்க மது மட்டும் தன் அறையிலேயே இருந்தாள். அவளுக்கு அவர்களைப் பார்க்க தயக்கமாக இருந்தது. அன்று அவ்வளவு வேகமாக அனைவரையும் எடுத்தெறிந்து பேசியது நினைவிற்கு வந்தது.

 

சுபா, “சித்தி மது எங்கே?” ராஜி, “அவ ரூம்லயிருக்காமா. போய் பாரேன். வித்யா அக்காவை கூட்டிகிட்டுப் போம்மா” என்றார். மீராவும்,சுபாவும் வித்யாவுடன் செல்ல மது அறையில் நின்றுகொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்த மது சத்தம் கேட்டுத் திரும்பி இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

 

மீரா, “என்ன மது எப்படியிருக்க?” என கேட்க

 

“நான் நல்லாயிருக்கேன் நீங்க எல்லோரும் எப்படியிருக்கீங்க?” என்றாள்.

 

மதுவின் காதருகில் சென்று”நைட்ல தூக்கம் வருதா? தூக்கத்தில் கனவு வருதா?” என கேட்டுவிட்டு குறும்புடன் சிரிக்க.

 

மது என்ன சொல்வது என தெரியாமல் நிற்க

 

சுபா, “அண்ணி மூணு கேள்வி கேட்டாங்க போல ஆனால், வந்தது, ஒரே ஒரு பதில்தானா. சரி விடு. நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம். நீ எப்போ எங்க வீட்டுக்கு வரப்போற அப்படின்னு எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம்” எனச் சொன்னதும், மது வேண்டாவெறுப்பாக ஒரு புன்னகை புரிந்துவிட்டுத் தலையைக் கவிழ்ந்துக்கொண்டாள்.

 

மீரா, “சரி வா மது கீழே போகலாம். எல்லோரும் நம்ம வீட்டில் இருப்பவர்கள் தானே அப்புறம் என்ன வெட்கம் வா” என அழைத்தாள்.

 

மது , “அக்கா, அண்ணி” என தயக்கத்துடன் அழைக்க.

 

இருவரும் நின்று திரும்பி மதுவைப் பார்த்தனர்.”உங்க ரெண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அன்னைக்கு நான் உங்க ரெண்டு பேரையும் எடுத்தெறிந்து பேசிட்டேன். சாரி ப்ளீஸ்” என கெஞ்சலாக கேட்க.

 

மீரா சிரித்துக்கொண்டே, “இவ்வளவு தானா, நாங்க என்னவோ ஏதோன்னு நினைத்தோம்.அதை நாங்க மறந்தே போய்ட்டோம்” என்றாள்.

 

சுபா ஆதரவுடன் மதுவின் தோளை தொட்டு, “என்ன மது இன்னும் அதையே நினைத்து குழப்பிக்கொள்கிறாயா? பெரியவங்க முன்னால் அப்படி பேசினோம் இப்போ எப்படிப் போயிருப்பதுன்னு பீல் பண்றியா? அதுக்குத்தான் நிச்சயதார்த்தம் அன்னைக்குச் சோர்ந்து போயிருந்தியா?” தயக்கத்துடன் நின்றிருந்தவளைப் பார்த்த மீரா, “நீ உன் மனதில் இருந்ததைத் தானே மது சொன்ன. இதில் தப்பு என்ன?நாங்க யாரும் உன்னைத் தப்பாக நினைக்கவில்லை போதுமா, வா” என மதுவை அழைத்துக்கொண்டு கீழே வந்தனர்.

 

அனைவரும் மதுவிடம் நலம் விசாரிக்க மதுவும் தன்னை சாதரணமாக இருப்பது போல காட்டிக்கொண்டாள். மீரா தேவகியிடம் சித்தார்த் கொடுத்தனுப்பிய பார்சலை கொடுக்க தேவகி மதுவிடம் கொடுத்தார், “இந்தா மது இது உனக்கு. பிரித்து பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லும்மா.” என கனிவாக சொல்ல.

 

“எதுக்கு ஆன்ட்டி… என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு அத்தை… இப்போ இந்தக் கிப்ட் எல்லாம்.”

 

சுபா, “மது அது வேறு, இது வேறு… இது சம்திங் ஸ்பெஷல். பிரித்து பார்த்து உன்னோட கமெண்டை சொல்லு. உன்னோட கமெண்டுக்காக ரொம்ப நேரமா வெய்ட்டிங்” என ரகசியமாக சிரிக்க. சம்திங் ஸ்பெஷல் என்றதிலே மற்றவர்கள் புரிந்து கொண்டனர். அனைவரும் ஒரு புன்சிரிப்புடன் இருக்க மது மட்டும் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருந்தாள்.

 

“மது பிரித்து பாரும்மா. பிடிச்சிருக்கா சொல்லு” என தேவகி கேட்டதும், மது கிப்ட் ராப் செயபட்டிருந்த அந்த பார்சலை பிரித்தாள். உள்ளே ஒரு ஜுவெல் பாக்சும் , ஒரு புடவையும் இருந்தது. மது தயங்கியபடியே முதலில் புடவை இருந்த பெட்டியை பிரித்தாள். உள்ளே அழகிய இலைபச்சையிலிருபக்கமும் பார்டர் இல்லாமல் கோல்டன் கலர் சரிகையில் சற்று இடைவேளிவிட்டு மயில் பிரிண்ட் செய்யப்பட்டு அழகாக இருந்தது. மதுவிற்குப் பார்த்தவுடன் பிடித்துவிட அவள் முகத்தில் அது புன்னகையாக வெளிப்பட்டது.

 

மீரா, “என்ன மது பிடித்திருக்கா.” என்று கேட்க. “ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு அக்கா. எனக்காக இவ்வளவு அழகா செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்திருக்கீங்க அத்தைத் தேங்க்ஸ்” என்றாள்.

 

சிரித்த தேவகி, “போய் கட்டிக்கிட்டு வாயேன் மது பார்ப்போம் எப்படியிருக்கு என்று” என்றதும் எழுந்த மதுவிடம், ஜுவெல் பாக்சையும் கொடுத்து அனுப்பினார். மது அருகில் வந்த சுபா மது அதிலேயே ரெடிமேட் பிளவுஸ் ஒண்ணும் இருக்கு” எனச் சொல்லி அனுப்பினாள்.

 

மதுவும், புடவையைக் கட்டிக்கொண்டு நகைகளை போட்டுக்கொண்டு வந்தாள். தேவகி மதுவின் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்துவிடடு,ராஜாத்தி மாதிரி இருக்கேடா கண்ணம்மா” என்றார்.

 

சுபா தன் மொபைலில் மதுவை போட்டோ எடுத்து சித்தார்த்தின் மொபைலுக்கு அனுப்பிவைத்துவிட்டுச் சித்தார்த்திற்குப் போன் செய்தாள். ஐந்தாறு ரிங் போனதற்குப் பின் எடுத்து எரிச்சலுடன், சுபா, நான் முக்கியமான மெயில் அனுப்பிகிட்டு இருக்கேன். நீ அப்புறம் பேசு” என போனை வைக்க முயல.

 

“டேய் இருடா, உன் பர்சனல் மொபைலுக்கு ஒரு இமேஜ் அனுப்பி இருக்கேன் அதைப் பாரு” என்றாள்.

 

“ஏய் … எனக்கு வேலை இருக்கு நான் அப்புறம் பார்த்துக்கொள்கிறேன். நீ  போனை வை” என்றவன் போனைக் கட் செய்துவிட்டு வேலையில் மூழ்கினான்.

 

அடுத்த இரண்டாம் நிமிடம் மீண்டும் மொபைல் ஒலிக்க, எடுத்த சித்தார்த் எரிச்சலுடன், “நான் தான் அப்புறம் பார்க்கிறேன்னு சொல்றேன் இல்ல சுபா” என்றதும்.

 

“போடா நீயும் உன் வேலையும். இப்போ போய் நீ அந்த இமேஜை பாரு அதுக்குப் பிறகுத் திட்டலாமா வேண்ண்டாமன்னு முடிவு பண்ணி சொல்லு. நம்ம மீதி சண்டையை வீட்டுக்கு வந்து வைத்துக்கொள்ளலாம்” என்றாள்

 

“உன்கிட்ட பெரிய தொல்லையா போச்சுடி. இரு பார்த்துட்டுச் சொல்றேன், என்றவன் தன் மற்றொரு மொபைலை எடுத்து இமேஜை ஓபன் செய்து பார்க்க, அதில் மது தான் வாங்கிகொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டு நகைகளை அணிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்த சித்தார்த் சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டான். இந்த முறை சித்தார்த்தே சுபாவிற்குப் போன் செய்து , “சுபா, ப்ளீஸ்…ப்ளீஸ்… ஒரு க்ளோசப் ஷாட் எடுத்து அனுப்பேன்” என கெஞ்ச

 

சுபாவோ, “முடியாது போடா. நீ போய் உன் மெயிலை அனுப்பு” என கோபித்துக்கொண்டது போல சொல்ல , ” அக்கா.., அக்கா… ப்ளீஸ்… உன் தம்பிக்காக இதை கூட செய்யமாட்டியா, ஒன்னே ஒண்ணு. ப்ளீஸ்ஸ்…..” என கெஞ்ச, “பிழைத்துப்போடா சிறுவா” எனச் சொல்லிவிட்டு மதுவை ஒரு க்ளோசப் ஷாட் எடுத்து அனுப்பினாள்.

 

போட்டோவைப் பார்த்த சித்தார்த் உதட்டில் புன்னகை இருந்தாலும் அந்த கண்களில் அந்த புன்னகையின் பிரதிபலிப்பு சற்றும் இல்லாமல் ஒரு வெறுமை மட்டுமே இருந்தது. ஆனால், அதுவும் ஒரு வகையில் அழகாய் தோன்ற மளமளவென மெயிலை அனுப்பிவிட்டு மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பி சென்றுவிட்டான்.

 

மேகலா, “மது இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு” எனச் சொல்ல, மது “தேங்க்ஸ்” என்றாள்.

 

மீரா, “யாரோட செலக்ஷன், நம்ம மாப்பிள்ளை சாரோட செலக்ஷன் ஆச்சே சும்மாவா…. பொண்ணையே சூப்பரா செலக்ட் பண்ணவருக்குப் புடவை செலக்ட் பண்றதா கஷ்டம்” என ரகசியத்தை போட்டு உடைக்க, அதை கேட்ட மதுவின் முகம் சுருங்கியது. அதைக் கண்ட மேகலா உடனே மதுவின் தோளை தொட்டு அழுத்த மது தன்னை நிதானபடுத்திக்கொள்ள கைகளை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனாலும் சுபா, மீராவின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை.

 

பொதுவாக பேசிக்கொண்டிருந்த பெரியவர்களின் பேச்சு கல்யாணத்தைப் பற்றி திரும்பியது.

 

ராமமூர்த்தி, “சம்மந்தி இன்னும் பதினைந்து நாளில் ஒரு முகூர்த்தம் அருமையா இருக்கு. அதை விட்டால் இன்னும் ரெண்டு மாசத்துக்கு முகூர்த்தம் அவ்வளவு நல்லதாக இல்லை. நீங்க என்ன சொல்றீங்க?” என்றதும்

 

ராஜேஷ் அவசரமாக, “வர்ற முகூர்த்தத்திலேயே வச்சிக்கலாமே, மாமா. அதன் பிறகு என்றால் நானும் ஆபீஸ் போய் ஜாயின் பண்ணனும். அப்புறம் லீவ் கிடைப்பது கஷ்டம். தீபக்கும் இப்போ லீவ்ல தான் இருக்கான். அப்புறம் அவனுக்கும் லீவ் போட முடியாது. அதனால் தான் சொல்கிறேன்” என ஓரக்கண்ணால் மதுவைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

 

ராஜேஷின் அவசரமான பேச்சை கேட்ட மது நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தாள். லீவுக்காகவா சொல்ற நீ உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னோட மனசு மாறி எதாவது சொல்லிவிடுவேனோன்னு உனக்குப் பயம் என நினைத்துக்கொண்டாள். அனைவரும் கல்யாண பேச்சில் மூழ்கிவிட மதுவிற்கு தொண்டையை அடைப்பது போலயிருந்தது. இன்னும் பதினைத்து நாள் தான் இங்கே இருக்க முடியுமா? என என்னும் போதே அழுகை வரும் போல தோன்றியது.

 

தேவகி, “அப்புறம் ஒரு விஷயம், கல்யாணம் கொஞ்சம் சிம்பிளா பண்ணா நல்லாயிருக்கும்னு சித்தார்த் சொல்கிறான். ஈவ்னிங் ரிசப்ஷன் கிராண்டா வைத்துக்கொள்ளலாம். நீங்க என்ன சொல்றீங்க?” என்றார்.

 

சந்துரு புன்னகையுடன், “நாங்களும் இதை எப்படி சொல்வதுன்னு தான் யோசித்துக்கொண்டிருந்தோம். மதுவும் அதே தான் சொன்னா. பரவாயில்லை ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்திலே ஒரே மாதிரி யோசித்து இருக்காங்க.” என சிரிக்க மதுவிற்கோ எரிச்சலாக வந்தது.

 

சித்தார்த் சொன்னானாம் சித்தார்த். அப்படியே என மனசுலயிருப்பதைச் சொல்றானாம். எனக்காக எல்லாத்தையும் செய்வது போல எல்லோரிடமும் நடிக்க வேண்டியது என மனசுக்குள் திட்டிக்கொண்டிருந்தாள்.

 

திருமணம் அடுத்த முகூர்த்தத்தில் நடத்திவிடுவது , அன்று மாலையே கிராண்டாக ரிசப்ஷன் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அனைவரின் பேச்சும் கல்யாணத்தைப் பற்றி இருக்க. மதுவிற்கு அங்கு அமர்ந்திருப்பது ஒருவித இறுக்கத்தை கொடுக்க மது தேவகியிடம், “அத்தை நான் என் ரூமுக்குப் போகட்டுமா?” என கேட்டதும். தேவகி “சரிம்மா”என்றார்.

 

அங்கிருந்து எழுந்து தன் அறைக்கு வந்தவள் மனம் முழுவதும் ஒருவிதமான பயம் சூழ்ந்திருந்தது. இவ்வளவு நாள் இருந்த சொந்தங்களை விட்டுவிட்டுச் செல்லப்போகிறோம், புது சொந்தங்கள், புது இடம், அவர்களுடன் எப்படி பொருந்தப்போகிறோம்?  என்ற எண்ணமே அவள் மனதில் சுழன்றுகொண்டிருந்தது.

 

ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டே வந்தவளுக்கு, கடைசியாக சித்தார்த்தை நினைத்ததும் பயத்தில் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இனி, நாளெல்லாம் அவனோடு ஒரே அறையில்….. கடவுளே நினைக்கும் போதே நெஞ்சம் கனத்து மூச்சு முட்டியது. எப்படி… எப்படி…. அவனுடன் ஒரே அறையிலிருக்க போகிறோம். நூறு பேருக்கு முன்பாக மோதிரம் போடும்போதே தன் விரலால் உள்ளங்கையில் சுரண்டினான். இனி, தனியறையில் என்னவெல்லாம் செய்வானோ… என எண்ண எண்ண தான் அவசரப்பட்டுவிட்டோமோ என ஒரு எண்ணம் தோன்றியது.

 

இதையெல்லாம் எண்ணி பயந்து கொண்டிருந்தவளின் பின்னால் வந்த மேகலா மதுவின் தோளை தொடவும், மது, “ஆஆ …. “என கத்த மதுவை விட மேகலா பயத்துடன் நின்றுகொண்டிருந்தாள். திரும்பிப் பார்த்த மது அங்கே மேகலாவை கண்டதும், நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, “நீயா…?” என்றாள்.

 

மேகலா, “வேற யாருடி வருவாங்க? நீயான்னு ஒரு கேள்வி வேற. ஏண்டி திடீர்னு இப்படி கத்தின. எனக்குப் பயத்தில் உடம்பே நடுங்கிடுச்சி. அப்படி என்ன நினைப்புலயிருந்த?” என்று கேட்டுக்கொண்டே தன் முகத்தை துடைத்துக்கொண்டாள்.

 

“அதுவந்து கல்யாணத்துக்கு அப்புறம் நானும், சித்தார்த்தும்…..” என்றவள் சட்டென நிறுத்திவிட்டு மேகலாவைப் பார்க்க மேகலா ஒருமாதிரி மதுவைப் பார்த்து சிரித்தாள். “ஒஹ்.. கனவா . நான் போறேன் நீ உட்கார்ந்து நல்லா கனவு காணு” எனச் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே செல்ல, “ஏய் நீ நினைக்கிறாமாதிரி ஒண்ணுமில்ல” எனச் சொல்லிகொண்டிருக்க அதை கேட்க மேகலா அங்கே இல்லை.

 

‘இவ ஒருத்தி நடுவில் வந்து அவளா ஒன்றை கற்பனைப் பண்ணிக்கிட்டுப் போறா” எனச் சொல்லிக்கொண்டே தன் உள்ளங்கையை பார்க்க,சித்தார்த் தன் விரலால் தீண்டியது ஞாபகம் வர, அப்போதும் உடலில் ஒரு குறுகுறுப்பு தெரிய புடவை முந்தானையால் தன் கையை இறுக கட்டிக்கொண்ட போதும் அந்த குறுகுறுப்பு அடங்கியது போல தெரியவில்லை.

 

கீழே இறங்கிவந்த மது ஆர்த்தி, அருந்ததியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அனைவரும் அங்கேயே இரவு உணவைமுடித்துகொண்டு புறப்பட்டனர்.

 

மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் சென்ற சித்தார்த் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு பாக்கிங்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான். அது வரைக்கும் கூட வீட்டிற்கு யாரும் வந்து சேரவில்லை. தன் அறைக்கு வந்த சித்தார்த் அந்த பாக்கிங்கை பிரிக்க சற்றுநேரத்திற்கு முன்பு சுபா அனுப்பிய மதுவின் க்ளோசப் படம் பெரிதாக்கப்பட்டு லமினேஷன்

செய்து எடுத்துவந்திருந்தான்.

 

போட்டோவை கையிலெடுத்தவன் போடோவில் மதுவின் கன்னத்தை மெல்ல வருடியவாரு , “ஐ லவ் யூ மை லிட்டில் ஏஞ்சல்” என்றவன் தன் வார்ட்ரோபை திறந்து ஏற்கெனவே தீபாவின் திருமணத்தில் எடுத்த மதுவின் போட்டோவை மாட்டிவைத்திருந்த இடத்திற்குப் பக்கத்தில் இந்தப் படத்தையும் மாட்டிவைத்தான்.

 

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஆளாளுக்குக் கல்யாண வேலையில் பிஸியாக இருக்க சித்தார்த் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தான். ஆனால், மதுவோ அதற்கு நேர்மாறாக, தவித்துக்கொண்டிருந்தாள்.

 

கல்யாண புடவை சித்தார்த்தின் செலக்ஷன் தான். மதுவை முதன் முதலில் பார்த்த போது கட்டி இருந்த அதே சிகப்புநிற நிறத்தில் நேவி ப்ளூ பார்டரில் அதே போன்ற டிசைனை அவனே வரைந்து கொடுத்து அதே போல நெய்து நேரில் சென்று பார்த்து வாங்கிக்கொண்டு வந்தான். அந்த புடவைக்கு ஏற்றார் போல ரூபி முத்து செட் ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்தான். அனைவருக்கும் புடவை பிடித்து திருப்திகரமாக அமைந்தது.

 

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வர காலையில் சித்தார்த் மாப்பிள்ளை கோலத்தில் தயாராகி வீட்டிலிருந்து கிளம்பி வடபழனி கோவிலை அடைந்தனர். முதல் நாள் இரவெல்லாம் மதுவிற்கு ஏதோ குழப்பமும், பதட்டமும் தோன்றி தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். ஆவலுடன் படுத்துக்கொண்டிருந்த விமலா அவளது அலைப்புருதலைக் கவனித்துக்கொண்டிருந்தார். விடியும் நேரம் தான் களைப்பில் உறங்க ஆரம்பித்தாள்.

 

அசந்து தூங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்துக்கொண்டே அவள் தலையை பாசத்துடன் தடவிகொடுத்துவிட்டுக் கண்கலங்க எழுந்து சென்று கிளம்புவதற்காக எல்லோரையும் தயாராக சொல்லிகொண்டிருந்தார். அனைவரும் எழுந்து கிளம்பிக்கொண்டிருக்க ராஜி வந்து மதுவை எழுப்பினார்.

 

குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு முகூர்த்த புடவையை அனைவரும் ஆசிர்வாதம் செய்து கொடுக்க புடவையைக் கட்டிக்கொண்டு மணக்கோலத்தில் வந்தவளை அனைவரும் மனநிறைவுடன் பார்த்து கொண்டிருக்க, ராஜேஷ் கண்கலங்க தன் தங்கையை பார்த்தான். தன் பெற்றோரின் படத்தை வணங்கியவள், பக்கத்தில் இருந்த அர்ஜுனின் படத்தை வணங்கிய போது வந்த அழுகையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு பெரியவார்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வணங்கி எழுந்தாள்.

 

அனைவரும் கிளம்பி கோவிலுக்குச் சென்று சேரும்போது, அவர்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்திருந்த சித்தார்த் குடும்பத்தினர்,வந்தவர்களை வரவேற்றனர். நேத்ரா ஒடிவந்து மதுவின் கையை பற்றிகொண்டாள். முதலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிறகு மணவறைக்கு அழைத்து சென்றனர்.

 

மதுவிற்குக் கால்கள் பின்ன கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலயிருந்தது. சமாளித்துக்கொண்டு ஒருவழியாக வந்து சேர்ந்தாள். மணவறையில் சித்தார்த்தின் பக்கத்தில் அமரவைத்தனர். சிகப்புபட்டில் எழில் ஓவியமாய் தன் அருகில் வந்து அமர்ந்தவளைப் பார்த்த சித்தார்த் தன்னுடைய வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும் ஒன்றாக அடைந்தது போல மகிழ்ந்தான்.

 

மது, சித்தார்த்தின் குடும்பம், ரமேஷ் குடும்பம், கீதா, ஜீவா, ஸ்ரீராம், இருவீட்டுச் சம்மந்திகள் என அனைவரும் குழுமி இருக்க, வேத மந்திரம் முழங்க நல்ல நேரத்தில் மதுவின் சங்குக் கழுத்தில் சித்தார்த்தின் வலிய கரங்கள் மங்கள நாணை பூட்ட அனைவரும் மனநிறைவுடன் அட்சதை தூவி வாழ்த்த திருமணம் நல்லபடியாக முடிந்தது. அனைவரின் மனமும் நிம்மதியிலும் சந்தோஷத்திலும் இருக்க மதுவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சித்தார்த்தின் கைகளில் பட்டுத் தெறிக்க சிறுவேதனையுடன் மதுவைப் பார்த்தான்.

 

மதுவின் நெற்றியில் திலகமிட அருகில் வந்தவன் அவள் காதுகளில் மட்டும் விழும் குரலில், “மது கன்ட்ரோல் யுவர் ஸெல்ப் டா” எனச் சொல்ல மது நாசுக்காக தன் கண்களை துடைத்துக்கொண்டாள்.

 

அதன் பின் நடந்த ச்டங்குகளில் ஒருவிதமான இயந்திரதனத்துடன் தான் நடந்துகொண்டாள். அவளது கண்ணீரை கண்ட சித்தார்த் அவளை ஏதும் சீண்டவில்லை. சடங்குகள் முடிந்ததும் கிளம்பி ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று திருமணத்தைப் பதிவு செய்துகொண்டு ஸ்ரீராமின் ஹோமிற்குச் சென்று காலை உணவை அங்கிருந்த குழந்தைகளுடன் அருந்திவிட்டுச் சித்தார்த்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

ஆரத்தி சுற்றி மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருக்க மது சித்தார்த் பக்கத்தில் அமர்ந்திருந்த போதும் இருவருமே ஏதும் பேசிக்கொள்ளவில்லை. சற்றுநேரம் கழித்து சித்தார்த் எழுந்து சென்று தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

தேவகி நேத்த்ராவை அழைத்து “அண்ணியை உன் ரூமுக்குக்கூட்டிகிட்டுப் போ கொஞ்சநேரம் படுக்க சொல்லு. ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றதும், நேத்ரா மதுவை அழைத்துக்கொண்டு  தன் அறைக்கு வந்தாள்.

 

பின்னாலேயே வந்த சுபா, “இந்தா மது புடவையை மாற்றிக்கொண்டு கொஞ்சம் படுத்து எழுந்திரு. மதியம் சாபிட்டுவிட்டு கிளம்ப நேரம் சரியாக இருக்கும் சொல்லி விட்டு இருவரும் சென்றதும், மது புடவையை மாற்றிக்கொண்டு  தலையைத் தளர பின்னிக்கொண்டு முகத்தைக் கழுவி விட்டு வந்து கட்டிலில் படுத்தும்,  இரவில் சரியாக உறங்காததும், சோர்வும் சேர்ந்து அழுத்த படுத்த அடுத்த நிமிடமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

சித்தார்த் அந்த அறைக்கு வந்ததையோ, ஆழ்ந்து உறங்கும் தன்னைக் காதலுடன் பார்த்தாயோ அறியாமல் நித்திரையிலிருந்தாள்.

 

மதுவை எழுப்ப வந்த மீரா அவள் அசந்து தூங்குவதைப் பார்த்துவிட்டு எழுப்பாமல் சென்றுவிட்டாள். சிறிதுநேரம் கழித்து எழுந்த மது மணியை பார்க்க மணி இரண்டை காட்டியதும், இரண்டு மணிநேரம் தூங்கி இருக்கிறோம் ஐயோ அத்தை என்ன நினைத்து கொள்வார்களோ என்று எண்ணி அவசரம் அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.

 

தேவகி, “என்னம்மா நல்லா தூங்கினாயா?” என்றதும். “சாரி அத்தை ரொம்ப டயர்டா இருந்தது அதான்…”என இழுக்க, “அதனால் என்ன சரி சாப்பிடவாம்மா” என்றவர், நேத்ராவிடம் “நேத்ரா அண்ணி எழுந்தாசுன்னு சொல்லி அண்ணனை சாப்பிட கூட்டிக்கொண்டுவா” என்றார்.

 

மீரா, “உனக்காக தான் சித்தார்த் காத்துகிட்டு இருந்தார். நீ சாப்பிடாம அவர் சாப்பிடமாட்டாராம்” என சிரிக்க. ஆமாம் அவருக்கு நடிக்க சொல்லி கொடுக்கணுமா நடிப்புல தான் மன்னனாச்சே என நினைத்துக்கொண்டாள்.

 

அனைவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர். ராஜா முத்தைய்யா ஹாலில் தான் மாலை வரவேற்பு. மாலை ஆறுமணிக்கு சித்தார்த், ஆழ்ந்த நீல நிற கோர்ட் சூட்டில் கம்பீரமாக நிற்க, மது மெருன் வண்ண பட்டில் அவனுக்கு இணையாக பொருத்தமான ஜோடியாக உதட்டில் மென்னகையுடன் நின்றிருந்தாள்.

 

நண்பர்கள், உறவினர்கள், அலுவலக ஊழியர்கள், என மண்டபமே நிரம்பி வழிந்தது. அனைவருமே பொருத்தமான ஜோடி என வாழ்த்தினர். அதிரடி இசை ஏதும் இல்லாமல் மென்மையான புல்லாங்குழல் இசையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. போட்டோ எடுக்கும் போதும் போட்டோ கிராபர் எவ்வளவோ சொல்லியும் சித்தார்த் சில போட்டோக்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

 

சுபா வந்து “ஒன்னே ஒண்ணு எடுத்துக்கோடா” என வற்புறுத்த சித்தார்த் மதுவைப் பார்க்க மதுவோ நிமிர்ந்து அவனைப் பார்க்கவே இல்லை. மீரா வந்து மதுவிடம் சொல்ல மது அரைமனதுடன் தலையாட்டினாள். அதன் பிறகே சித்தார்த் சம்மதித்தான். சித்தார்த் மதுவை அணைத்திருப்பது போல ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டனர்.

 

ராஜேஷின் மனம் சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியிலிருந்தது. தன் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுமா என இருந்தவனுக்கு, நல்ல படியாக திருமணம் முடிந்து தன் தங்கை தன் கணவனுடன் நிற்பதைப் பார்த்து பார்த்து அவன் உள்ளம் பூரித்தது. மன நிறைவுடன் அவன் உள்ளம் இருவரையும் வாழ்த்தியது.

 

வரவேற்பு முடிந்ததும் சித்தார்த்தைத் தனியாக அழைத்து சென்ற ராஜேஷ் சித்தார்த்தை ஆரத்தழுவிக்கொண்டான். “சித்தார்த் உனக்கு ரொம்ப பெரிய மனசு. அவ ஏதாவது கொஞ்சம் இடக்காக நடந்து கொண்டாலும், நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கோடா” எனச் சொல்ல

 

“இதை நீ சொல்லணுமா. என் மதுவை அதாவது உன் தங்கையை நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் போதுமா” என்றான்.

 

சித்தார்த் சொன்னதை கேட்டுச் சிரித்த ராஜேஷ் “எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீ அவளை புரிந்து நடந்துகொள்வாய். அவளும் உன்னை புரிந்து கொள்ளும் நாள் தூரத்தில் இல்லை. உன்னுடைய குடும்ப வாழ்க்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கையை பிடித்து குலுக்கி தன் வாழ்த்தை தெரிவித்தான்.

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *