Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -51

Sponsored

Shenba Ninnai Saranadainthen -51

அத்தியாயம் –51

 

வரவேற்பு முடிந்ததும் சித்தார்த், மது இருவரையும் அழைத்துக்கொண்டு மதுவின் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். சித்தார்த்துடன் வந்த சுபா ஹரி இருவரும் சற்றுநேரம் இருந்துவிட்டு கிளம்பி சென்றதும், மது தன் அறைக்கு வந்து அமர்ந்தாள். எப்போது இந்த புடவை, நகைகளையும் அவிழ்போம் என இருந்தது.

 

வித்யாவும், மேகலாவும் மதுவுடன் அவள் அறையில் பேசிக்கொண்டிருந்தனர். வித்யா மதுவிற்குத் தலைவாரிகொண்டிருக்க, மேகலா மதுவின் நகைகளை எடுத்து ஜுவெல் பாக்ஸில் வைத்துக்கொண்டிருந்தாள்.

 

மது கொஞ்சம் பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தாள். அவள் மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது.

 

மதுவின் முகத்தைக் கவனித்த வித்யா, “என்ன மது ரொம்ப டென்ஷனா இருக்க?” என கேட்க.

 

மது, “ஒண்ணுமில்லை” என்றாள். மேகலா, “இன்னைக்குச் சடங்கு இல்லை மது, நேரம் அவ்வளவா நன்றாக இல்லையாம். அதான் நாளை மறுநாள் வைத்திருக்கிறார்கள்” என்றாள்.

 

மதுவிற்கு அப்பாடா, என இருந்தது. வித்யாவும், மேகலாவும் கீழே சென்றுவிட, மது தன் அலுப்பு தீர நன்கு குளித்துவிட்டு கீழே இறங்கிவந்தாள்.

 

மது மாடியிலிருந்து இறங்கி கிச்சனுக்குச் செல்லும் வரை  ஹாலில் அமர்ந்திருந்த சித்தார்த் கண்ணை அகற்றாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மதுவும் சித்தார்த்தின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தாலும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு பார்வைக்குக்கூட பஞ்சமாகி போனதை எண்ணி சித்தார்த் பெருமூச்சு விட்டபடி அமர்ந்திருந்தான்.

 

மதுவை அழைத்த ராஜி, “மது நீ உன்னோட பக்கத்துக்கு ரூமில் படுத்துக்கோ. உன் ரூமில்  சித்தார்த் தங்கிக்கொள்ளட்டும்” என்றதும், மது அவசரமாக, “அத்தை என்னோட ரூமை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். வேண்டுமானால் அவரை பக்கத்து ரூமில் தங்கிக்கொள்ள சொல்லுங்க” என்றாள்.

 

“மது என்ன இது. நீ என்ன யாருக்கோவா உன் ரூமை கொடுக்க போகிறாய். உன் வீட்டுக்காரர் தானே அவருக்கு கொடுத்தால் என்ன” என்றார்.

 

“ஏன் சித்தார்த் பக்கத்துக்கு ரூமில் படுத்தா தூங்கமாட்டாரா?” என்றாள்.

 

” என்ன மது இது இப்படி தலையில் அடிப்பது போல பேரைசொல்லி கூப்பிடுகிறாய். அத்தான்னு கூப்பிடு” எனச் சொல்ல.

 

“என்னது அத்தானா…!! அதெல்லாம் கூப்பிட முடியாது அத்தை” என்றாள்.இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டே வந்த வித்யாவும்,மேகலாவும் மதுவைப் பார்த்து சிரிக்க, ராஜி இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு, “சரி நீ எப்படியாவது கூப்பிட்டுக்கொள். நான் சொல்வதை கேளு. அந்த ரூமில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை. நீதான் ஏசி போட்டுக்கொள்ள மாட்டாயே. அதனால் தான் உன்னை அந்த ரூமில் தங்கிக்கொள்ள சொல்கிறேன். உன் ரூமில் நன்றாக காற்றுவரும். அதனால் சித்தார்த் அந்த ரூமில் தங்கிக்கொள்ள சொல்லலாம்”

 

மது யோசனையுடன் இருக்க, “வேறு யாருடைய ரூமாக இருந்தாலும் அங்கே தங்கிக்கொள்ள சித்தார்த்துக்குச் சங்கடமாக இருக்கும். அதனால் தான் சொல்கிறேன் மது. ரெண்டு நாளைக்குத்தானே” என்றதும் மதுவும் பட்டும்படாமலும் “சரி” என்றாள்.

 

ராஜி சிரித்துவிட்டு, “வரவர உனக்குப் பிடிவாதம் அதிகமா ஆகிடுச்சி. சரி அவரை உன் ரூமுக்குக்கூட்டிக்கொண்டு  போ” என்றதும். என்னவோ கேட்கக்கூடாத ஒன்றை கேட்டுவிட்டது போல மது, “என்னது…. நானா… நான் போய் அவரை எப்படி அத்தை கூட்டிகிட்டுப் போவது?” என்றதும்.

 

மேகலா, “என்னடி என்னவோ சித்தார்த் அத்தானை இன்னைக்குத்தான் பார்ப்பது போல பேசுற. ஏற்கெனவே நல்லா பேசி பழகியவர் தானே. இதில் இப்போ என்ன புதுசா வெட்கம்?” என்றாள்.

 

வித்யா, “எப்படி கூப்பிடுவதுன்னு சொல்லிகொடுக்க உனக்கு டியூஷனா எடுக்க முடியும். வேணும்னா நான் சொல்வதை ட்ரைபண்ணி பாரு ,அத்தான், வாங்க அத்தான், உங்க ரூமுக்குப் போகலாம்” அப்படின்னு பழைய காலத்து ஹிரோயின் மாதிரி அப்படியே அன்ன நடையில் போய்ப் பக்கத்தில் நின்னு சொல்லு” எனச் சொல்லிவிட்டுச் சிரிக்க,

 

மது வித்யாவைப் பார்த்து முறைக்க, ராஜி தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு , “போ மது நேரம் ஆகுது பாரு” என்றதும் மது முணுமுணுத்துக்கொண்டு  ஹாலுக்குச் சென்றாள்.

 

சித்தார்த் தன மொபைலுக்கு sms சில் வந்த வாழ்த்து செய்திகளைப் பார்த்து அவற்றிற்குப் பதில் அனுப்பிகொண்டிருந்தான்.சித்தார்த்தின் அருகில் சென்று நின்ற மது அவனாக நிமிர்ந்து தன்னைப் பார்ப்பான், அப்போது அவனைப் பார்க்காமலேயே விஷயத்தைச் சொல்லி அழைத்து சென்று அறையைக் காட்டிவிட்டு வந்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டு நின்றிருக்க, சித்தார்த்தோ அங்கே ஒருத்தி வந்து நிற்பதை கூட பார்க்காமல் sms அனுப்புவது தான் முக்கியம் என்பது போல பதில் அனுப்பிகொன்டிருந்தான்.

 

மது எரிச்சலுடன் அவனைப் பாராமலேயே “க்கும்” என தொண்டையை செருமினாள். நிமிர்ந்து பார்த்த சித்தார்த் அவள் தன்னைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துகொண்டிருப்பதைப் பார்த்து தன் வேலையில் மீண்டும் கவனத்தை செலுத்தினான். அவனே என்ன என்று கேட்பான் என ஓரகண்ணால் பார்க்க அவன் தன் வேலையில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தவளுக்கு , திமிர்பிடித்தவன், ஒருத்தி வந்து நிிறாளே என்ன என்று கேட்போம் என்று கேட்கிறானா பார்? இப்போது sms அனுப்புவது தான் முக்கியம். வர ஆத்திரத்திற்கு மொபைலை பிடுங்கி தூர ஏறிய வேண்டும் என்று வந்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ” உங்களை தானே” என சித்தார்த்தை அழைக்க அந்த குரல் அவளது காதிலேயே விழவில்லை.

 

அவன் நிமிர்ந்தும் பாராமல் இருப்பதைப் பார்த்து ஒருவேளை தன் அழைத்து அவனுக்கு கேட்கவில்லையோ என்று எண்ணிக்கொண்டு ,வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு , “சித்தார்த் உங்களை தானே கூப்பிடுகிறேன்” என்றாள்.

 

அப்பாடா இப்போதாவது வாயைத் திறந்து பேசணும் போல தோன்றியதே, சந்தோஷம் என நினைத்தவன், “என்ன மது?” என்றான்.

 

“நீங்க தங்க வேண்டிய ரூமை காட்டுகிறேன் வாங்க” எனச் சொல்லிவிட்டு முன்னால் நடக்க சித்தார்த் அவளை பின் தொடர்ந்து சென்றான். தன் அறையைத் திறந்துவிட்டவள், “உங்க திங்க்ஸ் எல்லாம் உள்ளேயே இருக்கிறதாம். நீங்க இங்கே தங்கிக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு அந்த அறையின் உள்ளே செல்லாமல் வாசலோடுத் திரும்பி கீழே இறங்கி வந்துவிட்டாள்.

 

உள்ளே வருவாள், அவளுடன் சிறிது நேரம் ஏதாவது பேசலாம் என எண்ணிக்கொண்டிருக்க,  அவளோ வாசலோடுத் திரும்பி செல்வதைப் பார்த்தவனுக்கு  எரிச்சல் ஏற்பட்டது. உள்ளே சென்று பைஜாமாவையும், டவலையும் எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.

 

சித்தார்த்தை அழைத்துக்கொண்டு மேலே சென்றவள் அதே வேகத்தில் கீழே இறங்கி வந்ததைக் கண்ட விமலா, ராஜியிடம், “என்ன ராஜி, இவ இப்படி கொஞ்சம் கூட ஒட்டாமல் விலகியே இருக்கா” என கவலையுடன் சொல்ல,

 

“அவளுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருக்குப் போல அக்கா, ரெண்டு மூணு நாள் ஆனால், சரியாகிவிடும்” எனச் சொல்ல

 

“என்னவோ ராஜி, இவ நமக்காக கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருக்கா என்று எனக்கு தோணுது. நம்மை சமாதானபடுத்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டு, இப்போ நாம எல்லோரும் சேர்ந்து சித்தார்த்தை ஏமாற்றியது போல ஆகிவிட்டது” எனச் சொன்னதும்

 

ராஜி அவசரமாக, “அதெல்லாம் இல்லை அக்கா, நீங்க வீணா வருத்தப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. நான் அவளுக்குப் பக்குவமாக எடுத்து சொல்கிறேன்” என்றார்.

 

ஹாலில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கி இருந்த மதுவை அழைத்த ராஜி, “மது இந்த பாலை கொண்டுபோய் உன் வீட்டுக்காரருக்கு கொடு” என்றார்.

 

“என்ன அத்தை நீங்க அவர் இவ்வளவு நேரம் இங்கே தானேயிருந்தார். அப்போதே கொடுத்து இருக்கலாம் இல்லையா?” என சலிப்புடன் சொன்னவளை ராஜி வைத்த கண்வாங்காமல் உற்று பார்க்க, மது தலையைக் குனிந்து கொண்டாள்.”மது நீ உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லி கல்யாணம் செய்துகொண்டால் மட்டும் போதாது. இனி, நீ அவரில் பாதி. அவருக்கு வேண்டியதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். நீ என்னவோ தாலிகட்டியதோடு அவர் கடமை முடிந்தது என்றும், தாலி கட்டிக்கொண்டதோடு உன் கடமை முடிந்தது என நினைத்துக்கொண்டாயா? இனி, தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. நீ இன்னும் சின்ன பெண்ணில்லை. ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைபட்டு அந்த குடும்பத்தில் ஒருத்தியா இருந்து அந்த குடும்பத்துக்காகவே நீ இருக்கணும். இனி, உன்னோட கஷ்டம், நஷ்டம், இன்பம் துன்பம் எல்லாமே சித்தார்த்தோடுத் தான். இதுக்கு மேலும் உனக்குப் பளிச்சின்னு எப்படி சொல்வது? நான் சொல்ல வருவது உனக்குப் புரியாத அளவுக்கு முட்டாள் இல்லை நீ என்று எனக்கு நன்றாகவே தெரியும்” என ராஜி சொல்வதை கேட்டுக்கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்து,

 

” நீ நடந்துகொள்வதைப் பார்த்து விமலா அக்கா கவலைபடுகிறார்கள். நீ எங்களுக்காக சித்தார்த்தைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டு இப்போது சித்தார்த்தை வருத்துகிராயோ என அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது” எனச் சொன்னதும் மது கண்கலங்குவதைக் கண்ட ராஜி, “மது உன்னுடைய மனம் எனக்குப் புரிகிறது. அதுக்காக இன்னும் பழைய கதையையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா?” என ஆதரவுடன் அவள் தலையை வருடிகொடுக்க,

 

மது அவசரமாக , “இல்லை அத்தை, எனக்குப் பழைய ஞாபகம் எல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்லும் எல்லாம் எனக்கும் புரிகிறது. என்னவோ அவரை பார்த்தாலே என்னால் சகஜமாக பேச முடிவதில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே எனக்குச் சங்கடமாக இருக்கு அத்தை” என அழுதவளை தன் மீது சாய்த்துக்கொண்டு முதுகை தட்டிகொடுத்தார்.

 

“உன்னுடைய கஷ்டம் எனக்கும் புரியுதடா . ஆனால், அதற்காக சித்தார்த்திடம் இருந்து இப்படி விலகியே இருக்க முடியுமா?” என்றவர் அவள் முகத்தை நிமிர்த்தி, “இதுக்கு மேல் உனக்கு நான் ஒன்றும் சொல்ல தேவை இல்லை என நினைக்கிறேன், இந்தா இந்த பாலை கொண்டுப் போய் சித்தார்த்திற்கு கொடு” என்று மதுவின் கையில் பால் டம்ளரை கொடுத்தவர், “மது உன் முகத்தைக் கழுவிக்கொண்டு  போ, பாலை கொடுத்துவிட்டு கொஞ்சநேரம் சித்தார்த்திடம் பேசிக்கொண்டிரு” என்றவரை பார்த்து தலையாட்டிவிட்டுச் சென்றாள்.

 

மது பால் டம்ளரை வாங்கிக்கொண்டு சித்தார்த் இருந்த அறைக்கதவை நோக்கி சென்றால், என்னவோ அந்த தூரம் முடிவிலாத தூரம் போல தோன்ற அறையை நெருங்கிகதவை மெல்ல தயங்கி தயங்கி தட்டினாள். குளிக்கும் அறையிலிருந்த சித்தார்த்திற்கு இந்த மெல்லிய அழைப்பு காதில் விழவில்லை.தட்டியதற்கு உள்ளே சத்தமே இல்லை என மது மெல்ல கதவை தள்ள அது திறந்துகொண்டது. உள்ளே எட்டிபார்த்தவள் பால்கனி கதவு திறந்திருப்பதைப் பார்த்து ஒருவேளை அங்கே இருக்கிறானோ என எண்ணிகொண்டே கதவைத் திறந்து பால்கனியை நோக்கி சென்றாள்.

 

பால்கனியிலும் அவனைக் காணாமல் திரும்பி உள்ளே வந்தவள், பாத்ரூம் கதவைத் திறந்துக்கொண்டு சித்தார்த் குளித்துவிட்டு பைஜாமா அணிந்துக்கொண்டு வெற்றுடம்புடன் தலையை துடைத்தபடி வெளியே வந்தவன் கொலுசுசத்தத்தில் திரும்பிப் பார்க்க  சித்தார்த் தைப் பார்த்த மது தடுமாற்றத்துடன் நிற்க. அவள் தயக்கத்துடன் நிற்ப்பதைக் கண்ட சித்தார்த் என்ன என புருவங்களை உயர்த்தி கேட்டதும், மது சற்று பதட்டத்துடன், இல்லை….. எனக்கு , இல்லை உங்களுக்கு அத்தைப் பால் கொடுத்துவிட்டு வரச்சொன்னாங்க,  நீங்க பாத்ரூமில் இருந்ததை நான் கவனிக்கவில்லை, சாரி” என பதட்டத்துடன் திக்கி திணறி சொல்லிவிட்டு பாலைக் கட்டில் அருகில் இருந்த சைட் டேபிள் மீது வைத்துவிட்டுச் சித்தார்த்தின் முகத்தைப் பார்க்காமல் தலையைக் குனிந்தபடி அவனை தாண்டி செல்லும் போது சித்தார்த், “நில்லு மது உன்னிடம் நான் கொஞ்சம் பேசணும்” என்றான்.

 

எப்போதடா அந்த அறையைவிட்டு வெளியேறுவோம் என்ற எண்ணத்துடன் இருந்தவளை அவன் அழைப்பு கலவரப்படுத்த, “எனக்கு தூக்கம் வருது, நாளைக்குப் பேசலாமே” என சித்தார்த்தை திரும்பிபார்க்காமலேயே சொல்லிவிட்டு வெளியே செல்ல முயல சித்தார்த், “நில்லு மது”  என அவளது கையை எட்டி பிடித்தான். அதை எதிர்பார்த்த மது அதே வேகத்தில் சித்தார்த்தின் பிடியிலிருந்த தன் கையை உதறி விடுவித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவராத குறையாக பக்கத்துக்கு அறைக்குச் சென்று கதவை தாளிட்டு கொண்டு படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சத்தைத் தன் வலது கையால் அழுத்தியபடி கதவின் மீதே சாய்ந்து நின்றுகொண்டாள்.

 

ராஜி சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து அதை ஏற்று, சற்றுநேரம் தன் எரிச்சல் கோபம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுச் சித்தார்த்துடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என எண்ணித்தான் மது சித்தார்த் இருந்த அறைக்குச் சென்றது. ஆனால்,, அவனை வெற்றுடம்புடன் பார்த்ததும் ஏதோ ஒன்று அவளை அங்கே நிற்க விடாமல் தடுக்க, வெளியே வர நினைத்தவளை சித்தார்த்தின் தொடுகை அவளையும் அறியாமல் பயத்தை கொடுக்க சித்தார்த்தின் கையை உதறிவிட்டு ஓடிவந்துவிட்டாள்.

 

சித்தார்த் அப்படி தன்னிடம் அத்துமீறி நடப்பவன் இல்லை என்று புரிந்தாலும், இப்போது தன்னிடம் எல்லா உரிமையும் உள்ளவன், என்ற அந்த எண்ணம் அவனுக்கு இருந்தால்…… தன் நிலை என்ன என்ற எண்ணம் அவளை சுற்றி சுற்றி வந்தது. இன்று எப்படியோ சமளித்துவிட்டோம். ஆனால், இனி,வரும் நாட்களில்……!!! மது பயத்துடனே கட்டிலில் விழுந்தாள்.

 

இங்கே சித்தார்த்தின் நிலையோ சொல்லவே வேண்டாம். மதுவின் இந்த நிராகரிப்பு அவனுக்கு முள்ளாய் உறுத்தியது. மது திருமனத்திற்குச் சம்மதம் என்று சொன்ன நிமிடத்திலிருந்து பால் போல் பொங்கிக்கொண்டிருந்த அவன் இதயத்தில் காலையில் அவள் சிந்திய கண்ணீர் துளி விழுந்ததில் சட்டென்று அடங்கியது!!!

 

அவளை தன் அறையில் எதிர்பாராமல் கையில் பால் தம்ளருடன் கண்டதும் இதயத்தில் எஸ்ட்ரா பிஜிஎம் ம்யூசிக்கோடுத் துவங்கிய இசைக்கச்சேரியை  மதுவின் இந்த செய்கை தாளம் தப்பி சுருதி பேதத்தை கொடுத்தது. இவ்வளவு நாளாக வேறுவேறாக இருந்தவர்கள் இன்று திருமணபந்தத்தில் இணைந்து தங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்த முதல் நாளே இப்படி ஒரு பார்வைக்கும், ஒருவார்த்தைக்கும் தான் ஏங்கி காத்திருக்கையில் இப்படி தன்னைக் கண்டதும் பயந்து ஓடினால்….. என்ன செய்வது????

 

இது இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ….. இல்லை காலம் முழுதும் இப்படியிருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்க நேரமோ என்ற ஏக்கமும், இன்னும் தன்னையும், தன் காதலையும்  புரிந்துக்கொள்ள அவள் சிறிதும் முயலவில்லையே என்ற கோபமும் ஒன்று சேர,தூங்க பிடிக்காததால் எழுந்து சென்று பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த கடலலையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

 

மதுவும், தூங்காமல் தன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். எழுந்து விளக்கை அணைத்துவிட்டு பால்கனி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். பக்கத்துக்கு அறையிலிருந்து வந்த விளக்கு ஒளியில் சித்தார்த் இருகைகளையும் கட்டிக்கொண்டு பால்கனியில் நின்றுகொண்டு சற்று தூரத்தில் தெரிந்த கடலலையை வெறித்துக்கொண்டு, யோசனையோடு நின்றிருப்பதைக் கண்ட மது சிலநொடிகள் அவனையே பார்த்தாள். மீண்டும் தன் அறைக்கு வந்தவள் படுத்துவிட, ஆனாலும் மதியம் ஆழ்ந்து உறங்கியதாலோ இல்லை மனதில் இருந்தச் ச்ஞ்சலமோ அவளை தூங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.

 

தூக்கம் வராமல் கண்களை மூடியபடி படுத்திருந்தவளின் கண்களுக்குள் சித்தார்த் மீண்டும்மீண்டும் வந்து சிரித்தான். ஏக்கத்தோடும் காதலோடும் அவனைப் பார்த்தான். சட்டென கண்ணை திறந்த மது அதன்பிறகு மறந்தும் கண்ணை மூடவில்லை. அதேநேரம் நமக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்றும் அறியவும், அதை உணரவும் தோன்றாமல் வெகு நேரம் விழித்துக்கொண்டிருந்தவள் விடியும் நேரம் தன்னை அறியாமல் நித்திரை தழுவ, உறங்க ஆரம்பித்தாள்.

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *