Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -60

Sponsored

Shenba Ninnai Saranadainthen -60

அத்தியாயம் –60

 

அதிகாலை சூரியன் இதமான அந்த காலை வேளையில் தன் கதிர்களால் வெளிச்சத்தைப் பரவவிட்டான். தூக்கம் கலைந்து எழுந்த சித்தார்த்திற்கு நேற்றைய இரவின் நினைவில் இனி,ய நினைவுகள் எழுந்தாலும், மதுவிற்கு உண்மையை சொல்லாமல் அவளுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற எண்ணம் எழுந்து அவன் இதயத்தை ஊவா முள்ளாக உறுத்தியது.

 

இது சரியா? என்னதான் அவள் சொல்லவேண்டாம் என்றாலும் தான் சொல்லி இருக்கவேண்டுமோ? காலம் முழுதும் இப்படி ஒரு உறுத்தலுடன் எப்படி வாழ்வது? என கேள்வி கேட்டு கொண்டாலும், இது மதுவிற்காக தானே, மதுவின் சந்தோஷத்திற்காக தானே?இப்போதைக்கு அவளது மன அமைதி தான் முக்கியம். இவ்வளவு நாள் அவள் பட்ட துன்பமெல்லாம் போதும். இனி,யாவது அவளை நான் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்.

 

அப்படியானால் பின்னால் அவளுக்கு இந்த உண்மை தெரியவருமானால், அப்போது அவளுக்கு அது அதிர்ச்சியாக இருக்காதா? அந்த அதிர்ச்சியை அவள் தாங்குவாளா? நீ அவளை நம்பவைத்து மோசம் செய்ததாக எண்ணமாட்டாளா? என அவன் மனம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருக்க.

 

இந்த நிமிடம் தான் நிஜம், இந்த நிமிடம் என் மது சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவள் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நாளைக்கே மதுவிற்கு இந்த விஷயம் தெரிய வந்தால் நான் சமாளித்துக்கொள்வேன். என் காதலை அவளுக்கு நான் உணர்த்துவேன். நிச்சயம் மது என்னை புரிந்துக்கொள்வாள். இப்போதைக்கு நான் மதுவின் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்வது தான் முக்கியம் என்று ஒரு முடிவிற்கு வந்த பின் தான் அவனுக்கு மனம் நிம்மதி அடைந்தது. குளியலறை கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் சித்தார்த் கண்ணை மூடிக்கொண்டான்.

 

நெற்றிக்குத் திலகம் வைத்துக்கொண்ட மது அங்கிருந்த சுவாமி படத்தை வணங்கிவிட்டு, சித்தார்த்தின் அருகில் வந்து நின்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், மெல்ல குனிந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதுவரை தனக்குள் குழம்பிக்கொண்டிருந்தவன், தன்னவளின் அருகாமையில் அவனுக்கு இதுவரை ஒடிய எண்ணங்கள் எல்லாம் மறந்து போய், அவனை முழுதுமாய் அவளே ஆக்கிரமித்தாள் அடுத்த நொடி சித்தார்த்தின் பக்கத்தில் அவன் கை அணைப்பில் இருந்தாள்.

 

“குட் மார்னிங் மேடம்” என அவள் மூக்குடன் மூக்கை வைத்து உரசினான். “விடுங்க சித்து” என எழ முயன்றவளை, இன்னும் இறுக அணைத்து, அவள் கூந்தலில் இருந்து வந்த வாசத்தை முகர்ந்தவன், “இப்படி காலைல  குளிச்சிட்டு ப்ரெஷ்ஷா பக்கத்துல வந்து முத்தம் வேற கொடுத்துட்டு, இப்போ விடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?” எனச் சொல்லிக்கொண்டே அவள் கழுத்து வளைவில் முத்தமிட ஆரம்பித்தவன் தொடர்ந்து முன்னேற மது கூச்சத்தில் தவித்தாள்.

 

அந்த நிமிடம் மது தன் கணவனின் அணைப்பில் நெகிழ்ந்தாலும், தன்னை மீட்டுக்கொள்ள முயன்றபடி, “நேரம் ஆகுதுங்க. இன்னைக்கு நாம ஊருக்கு கிளம்பணும். ஞாபகம் இருக்கு இல்ல.எழுந்து ரெடி ஆகுங்க” எனச் சொல்லிக்கொண்டே எழுந்து  கொள்ள முயன்றவளை விடாமல் அவளை சிறிதுநேரம் முகம் சிவக்க செய்துவிட்டு அவளை விடுவித்தான்.

 

அடுத்த ஒருமணி நேரத்தில் தயாரானவர்கள் ஹரியின் நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவர்களது உதவிக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொள்ள ஹரியின் நண்பர் அவர்களுடன் பூல்பாக் ஏர்போர்ட் வரை வந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டு அதன் பிறகே கிளம்பினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் இருவரும் சுபாவின் வீட்டில் இருந்தனர்.

 

சுபாவும், ஹரியும் இருவரையும் விசாரித்துவிட்டு மதுவின் நலத்தையும் கேட்டுகொண்டு ஹரி தன் அலுவலகத்துக்கு கிளம்பி சென்றுவிட்டார். வருண், அருந்ததி இருவருக்கும் பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் வீட்டில் இருந்தனர். வருண் சித்தார்த்தை விளையாட அழைக்க சித்தார்த்தும் வருணுடன் வீட்டின் பின்புறம் இருந்த டென்னிஸ் கோர்ட்டில் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்க, வருணுக்குத் தகுந்தபடி விளையாடிக்கொண்டிருந்த சித்தார்த்தைப் பார்த்துக்கொண்டே, அருந்ததியை மடியில் வைத்து ரைம்ஸ் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

சற்றுநேரத்தில் வருணை அவன் நண்பர்கள் வந்து அழைக்க வருண் அவர்களுடன் சென்றுவிட, சித்தார்த் மது பக்கத்தில் வந்து அமர்ந்தான். மது குழந்தையுடன் சேர்ந்து ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருக்க, “என்ன ட்ரெய்னிங்கா?” என்றான். மது அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

 

சித்தார்த் மதுவின் கழுத்தில் தன் விரல்களால் சில்மிஷம் செய்ய, மது கூச்சத்துடன் நெளிந்தாள். அவனது சீண்டல் தொடர்ந்துக்கொண்டிருக்க,அருந்ததியைத் தூக்கி அவன் மடியில் அமரவைத்துவிட்டு எழுந்து அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.

 

அன்று மாலை வரை சித்தார்த்தின் அருகில் வராமலே அவனுக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள். மாலையில் சித்தார்த் அறைக்குள் இருப்பது தெரியாமல் அறைக்குள் சென்றவளை பின்னாலிருந்து அணைத்தவன், “ஏய்…. இன்னைக்கெல்லாம் எனக்கு விளையாட்டு காட்டிகிட்டு இருந்த இல்ல இப்போ பாரு வசமா மாட்டிகிட்ட” எனச் சொல்ல.

 

“உங்ககிட்ட பெரிய தொல்லையா போச்சுங்க. ஒரு நேரம் காலம் கிடையாது. கதவு வேற திறந்து இருக்கு. குழந்தைங்க வரப்போறாங்க விடுங்க” என கெஞ்சும் குரலில் சொன்னவளை. “சரி என் கேள்விக்குப் பதில் சொல்லு விட்டுடறேன். தொல்லையா போச்சுன்னு வேற சொல்லிட்ட. அதுக்கெல்லாம் இருக்கு உனக்குப் பனிஷ்மென்ட்” என்றவன் “சரி உன் வெயிட் எவ்வளவு இருக்கும்?” என்றான்.

 

“இதென்ன இப்போ கேள்வி? ஐம்பத்தைந்து கிலோ” என்றாள். “அப்போ உன்னை பிபிட்டி கேஜீ தாஜ்மகால்னு பாட முடியாதா? சரி நீ சொல்வது உண்மையான்னு டெஸ்ட் பண்ணிடுவோம்” எனச் சொல்லிக்கொண்டே சட்டென மதுவை தூக்கினான். இதை சற்றும் எதிர்பாராத மது,  “ஐயோ…. இறக்கிவிடுங்க யாராவது வரப்போறாங்க” எனச் சொன்னவளை இறக்கிவிடாமல் “பார்க்கட்டுமே என் பொண்டாட்டியை நான் தூக்கறேன் அப்படின்னு சொல்லிக்கிறேன் என்ன இப்போ?” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுபா “மது இந்த புடவை…” என பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள் இருவரும் இருந்த நிலையை பார்த்து என்ன சொல்வது என புரியாமல் நிற்க. சித்தார்த் மதுவின் நிலையோ சொல்லவே வேண்டாம்.

 

சுபாவை எதிர்பார்க்காத சித்தார்த் மதுவை தூக்கிய நிலையிலேயே நின்றுகொண்டிருக்க, மது இவ்ளோ நேரம் படித்து படித்து சொன்னேன் கேட்டா தானே என எண்ணிக்கொண்டிருக்க, இவை அனைத்தும் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தது. முதலில் சுதாரித்த சுபா, “சாரி” எனச் சொல்லிவிட்டு வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்றபடி வெளியே சென்றுவிட.

 

சித்தார்த் மதுவை இறக்கிவிட்டுவிட்டுச் சிரிக்க, மதுவோ ஏக கடுப்பில் இருந்தாள்.”என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு உங்களுக்கு. நான் எவ்வளவு தூரம் சொன்னேன். ஹய்யோ….!! போச்சு போச்சு என் மானமே போச்சு. அப்போதே சொன்னேன் கதவு திறந்திருக்கு யாராவது வரப்போறாங்கன்னு கேட்டீங்களா? நான் எப்படி இனி, அண்ணி முகத்தைப் பார்ப்பேன்?” என தலையில் கை வைத்துக்கொண்டு  கட்டிலில் அமர்ந்தவளின் அருகில் வந்த சித்தார்த், “அப்போ கதவை மூடிட்டு வந்து உன்னை தூக்கவா” என சீரியஸாக கேட்டவனைப் பார்த்ததும் “உங்களை” என சுற்றி பார்த்தவளை “என்ன அடிக்க ஏதாவது தேடறியா? அடிப்பது தான் அடிக்கிற எதையாவது தூக்கி அடிச்சி வச்சிடாதே. அடிப்பதென்றால் இதிலேயே அடி. அடி மெத்து மெத்துனாவது விழும்” என பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து கொடுக்க அதைப் பார்த்த மதுவிற்கு கோபம் வர தலையணையை வாங்கி, “அடிக்க தலையணையா எடுத்து கொடுக்கறீங்க?” என அவனை துரத்தினாள்.

 

அறைவாசலில் சென்று நின்ற சித்தார்த், “நான் இப்போ வெளியே போறேன் தைரியம் இருந்த நீயும் வெளியே வா பார்ப்போம்” என்றதும் ஆத்திரத்துடன் தலையணையை அவன் மீது தூக்கி எறிய சித்தார்த் மறுபுறம் விலகி சென்றுவிட தலையணை ஹாலில் போய் விழுந்தது.

 

“ஆஹா…! நீ விட்ட ஏவுகணை குறிதவறி போய்டுச்சி. இதுக்குத்தான் பேச்சு பேச்சா இருக்கணும். இப்போ பாரு என்ன ஆச்சுன்னு?” என சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு ஹாலுக்குச் சென்றான். மது எரிச்சலுடன் சோஃபாவில் அமர்ந்தாள்.

 

சிரித்துக்கொண்டே  ஹாலில் அமர்ந்திருந்த ஹரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தான், “என்னடா மாப்பிள்ளை. தலையணை ஹாலுக்கு வந்து விழுது? என்னடா வம்பு செய்த?” என்றார்.

 

“ஏன் இந்த நேரம் இத்தனை மணிக்கு இத்தனை நிமிஷத்துக்கு இத்தனை நொடிக்கு இந்த விஷயம் நடந்ததுன்னு உங்க பொண்டாட்டி பிபிசி ல நியூஸ் வாசித்து இருப்பாங்களே வாசிக்கலையா?” என அப்பாவியாக கேட்டான்.

 

சுபா “கொழுப்புடா உனக்கு” என கையிலிருந்த குஷனை தூக்கி சித்தார்த்தை ஒன்று வைத்தாள். “இந்தப் பொம்பளைங்களுக்குத் தலையணைல அடிப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும் போல” என சித்தார்த் சொன்னதும்.  “உனக்கு இப்போ தான் ஆரம்பித்திருக்கு என்று நினைக்கிறேன். இது வெறும் ட்ரையல் தான் இனி, தான் ரூம் போட்டு யோசிப்பாங்க எந்த மாதிரி எந்தப் பொருளால அடிக்கலாம்னு” என்று சொன்னதும்,சுபா, “நீங்க அப்படி எத்தனை முறை அடி வாங்கி இருக்கீங்க?” என கேட்டாள்.

 

“சரி சரி சுபா, விடு நைட் தோப்புகரணம் போடும்போது கூட ஒரு ஐம்பத்து சேர்த்து போடா சொல்லிடு. இப்போ விட்டுடு” எனச் சொன்னதும், “அடப்பாவி நீ என்னவோ சப்போர்ட் பண்ணுவன்னு நினைத்தால் இப்படி காலை வாரிவிடுறியே?” என்றார் ஹரி.

 

“சித்தார்த் நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்கன்னு தெரிந்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குத் தெரியுமா?” என உண்மையான மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

 

சித்தார்த் சலிப்புடன் “ம்ச்சு” என்றான். “என்ன சித்தார்த் ஏன் இவ்வளவு சலிப்பு?” என்றார் ஹரி. தன் தலையை அழுந்த கோதிய சித்தார்த் தன் மனதில் இருக்கும் தவிப்பை சொல்ல சுபா கோபத்துடன், “ஏண்டா நீ உன் மனசுல என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? இன்னும் நடந்ததையே நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ள போகிறாயா? மதுவே இப்போதான் மனம் மாறி வந்திருக்கா. பழசயெல்லாம் மறந்துட்டு நிம்மதியா அவளோட குடும்பம் நடத்தும் வழியை பாரு. பைத்தியகாரதனமாக ஏதாவது செய்து இருக்குற நிம்மதியைக் குலைத்துக்கொள்ளாதே” என அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

 

“என்ன பேசற சுபா? எனக்கு மட்டும் மது கூட சந்தோஷமா இருக்கணும் என்ற எண்ணம் இல்லையா? ஆனால், ஒவ்வொரு நாளும் என் மனசாட்சி கேள்வி கேட்குமே?”

 

“சித்தார்த், நீ நல்லவனா இருக்கலாம் அதுக்காக இவ்ளோ நல்லவனா இருக்க நினைக்ககூடாது. இப்போ என்ன ஆகிபோச்சு? நீ ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட. அப்போ உனக்கு மதுவைப் பற்றி என்ன தெரியும்? அவ மேல தப்பு இல்லைன்னு தெரிந்ததும் அவளைக் கல்யாணம் செய்துக்க பிரியப்பட்ட. அவளோட கடந்த காலவாழ்க்கை தெரிந்ததும் அவளுக்காக கவலைப்பட்ட, உன்னால் தான் அவ வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என நினைத்து உன்னை நீயே வருத்திகிட்டு இருந்த. அவளைக் கலயாணம் செய்து சந்தோஷமா வைத்திருக்கணும்னு நினைத்த. இதுவரைக்கும் நீ செய்ததெல்லாம் சரி. ஆனால், தேவையே இல்லாமல் நீ இந்தக் கதையைப் போய் எதுக்காக அவளிடம் சொல்ல போகிறாய்?அவ சந்தோஷமாக இருக்கணும் என தானே நீ நினைக்கிற. இந்த விஷயம் தெரிந்தால் அவ சந்தோஷபடுவாளா?” என ஹரி அவனுக்குச் சொல்லிக் கொண்டிருக்க, சித்தார்த் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தான். தற்செயலாக ஜன்னல் அருகில் வந்த மதுவின் காதில் இவர்கள் பேசியது ஏதும் விழவில்லை என்றாலும் இந்த காட்சியை பார்த்து குழம்பினாள். நின்று கவனிக்க தொடங்கினாள்.

 

“போதும்டா சித்தார்த். நீ பட்ட வேதனை எலலாம் போதும். இந்த விஷயத்தை நாங்கள் யாரும் அவளிடம் சொல்லப்போவதில்லை. நீ இன்னும் அந்த டைரியை பத்திரமா பொக்கிஷமா வச்சிட்டு இருக்கியா? ஊருக்குப் போனதும் முதல் வேலையா அந்த டைரியை எடுத்து  உன் தலையைச் சுத்தி தூக்கி கடல்ல போடுவியோ இல்ல எரித்து சாம்பலாக்குவியோ. இன்னொரு முறை உறுத்தலா இருக்கு, அதுவா இருக்குன்னு நீயே உனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. புரிந்ததா” என அவன் கையை ஆதரவாக தட்டிக்கொடுத்தாள்.

 

ஏதும் சொல்லாமல் அமர்ந்திருக்கும் தன் தம்பியை பார்த்தவள் நம்பிக்கை இல்லாமல் தன் கணவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள். இதற்கு

மேல் கடவுள் விட்ட வழி எனச் சொல்வது போல ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சென்றார். இது அனைத்தையும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்த மது, இவ்வளவு நேரம் நல்ல தானே  இருந்தார் இப்போ என்ன ஆச்சு? அப்படி என்ன அண்ணனும் அண்ணியும் சொல்லி இருப்பார்கள். ஒருவேளை பிஸ்னசில் ஏதாவது பிரச்சனையா? என குழப்பத்துடன் அங்கிருந்து விலகினாள்.

 

அப்போதிருந்தே சித்தார்த்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். அனைவரும் இருக்கும் போது நன்றாக பேசுபவன் தனிமை கிடைக்கும் போது சற்று சோர்வாகவே இருந்தான். நாளையும் இதே நிலை தொடர்ந்தால், ஊருக்குச் சென்றதும் கட்டாயம் அவனிடம் பேசவேண்டும். அவனுடைய இந்த முகவாட்டம் தன்னைப் பாதிக்கிறது என உணர்ந்தாள். அவன் தன் உயிரோடுக் கலந்துவிட்டான் என புரிந்தது, முகத்தில் மெல்ல புன்னகை மலந்தது. என்ன ஆனாலும் உனக்கு நான் இருக்கிறேன் என தன் நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்லவேண்டும் போல தோன்றியது.

 

மறுநாள் எழுந்ததும் சித்தார்த்தின் முகத்தைப் பார்த்தவள் நேற்று இருந்த குழப்பம் இல்லாமல் சற்று தெளிந்து இருந்தது போல தோன்ற நிம்மதியுடன் தன் வேலைகளைக் கவனித்தாள். மேலும் இரண்டு நாள்கள் சுபாவின் வீட்டில் இருந்தவர்கள் அன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்க, சுபா மதுவிற்கு குங்குமம் கொடுத்துவிட்டு, ஆதரவாக அவள் கையை பற்றிக்கொண்டு, “ரொம்ப சந்தோஷம் மது. நாங்க எதிர் பார்த்தது இதைத் தான். அவன் கொஞ்சம் கோபக்காரன் ஏதாவது முன்கோபத்தில் சொன்னாலும் நீ கொஞ்சம் பொறுமையா போடா. அவன் ஏதாவது அவனையும் அறியாமல் தவறு செய்திருந்தால் நீ மட்டும் அவனை வெறுத்துவிடாதே” என கண்கலங்க சொன்னதும். “என்ன அண்ணி இப்படி சொல்றீங்க. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது” எனச் சொல்லிகொண்டிருக்கும் போது சித்தார்த் அருந்ததியைத் தூக்கிக்கொண்டு வந்தான்.

 

மது அவசரமாக கண்ணை துடிப்பதைப் பார்த்தவன், “என்ன சுபா என் பொண்டாட்டியை ஏதாவது மிரட்டினாயா?” என கேட்டதும், சுபா மதுவைப் பார்த்து சிரித்தாள் தன்னிடம் தாவிய குழந்தையாய் வாங்கிய மதுவும் சிரிக்க, “நான் ஏண்டாப்பா உன் பொண்டாட்டியைத் திட்ட போறேன். உன்னைப் பற்றி கொஞ்சம் சொன்னேன் உன் பொண்டாட்டி பயந்துட்டா அவ்ளோதான்” என் பாவனையுடன் சொல்ல மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

 

மதுவிடம் ரகசியமாக , “மது கூடிய சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லணும் ஓகே வா?” என சுபா கேட்டதும் கன்னங்கள் சிவந்து நாணப்புன்னகையுடன் நின்றவளைக் கண் நிறைய நிறைத்துக்கொண்டான்.

 

ஊருக்குச் செல்லும் முன்பு இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் இருந்த வித்தியாசத்தை அனைவருமே நன்கு உணர்ந்தனர். மறுநாள் காலையில் ஹோமிற்குச் செல்ல கிளம்பிய மது அன்று நேத்ராவுக்கு மதியத்திற்கு மேல் தான் ஹாஸ்பிட்டல் போக வேண்டி இருந்ததால், அவளையும் அழைத்து செல்ல அவள் அறைக்குச் சென்றால் அங்கே நேத்ரா எப்போதும் துள்ளி குதித்து அஷ்வந்துடன் வம்பு செய்து சிரித்தபடி வளைய வருபவள் இன்று கண்களில் கண்ணீருடன், கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

 

அருகில் சென்ற மது, “நேத்ரா ஏன் டல்லா இருக்க? என்ன ஹாஸ்பிட்டல்ல ஏதாவது பிரச்சனையா? எதுக்கு அழற” என கேட்டதும் பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்தியபடி  “அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணி நேத்து ஹாஸ்பிட்டல்ல ஒரு கேஸ் ரொம்ப முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. அதை நினைத்தேன்” என பாதி உண்மையையும் பாதி பொய்யுமாக சொல்லி முடித்தாள்.

 

“ஒஹ்…!! என்ன செய்வது நேத்ரா, சில சமயம் நம்மையும் மீறி ஏதாவது நடக்கும் போது நாம ஒன்றுமே செய்ய முடியாது” எனச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டவள், “சரி நான் ஹோமுக்குப் போறேன் நீயும் வரியான்னு கேட்கதான் வந்தேன்.” என்றாள்.

 

“ஹோமுக்கு என்றதும் அவசரமாக திரும்பியவள் இல்ல அண்ணி எனக்கு எங்கேயும் வர பிடிக்கவில்லை.நீங்க போய்வாங்க” என்றாள்.

 

மது கிளம்பி சென்றதும் நேத்ரா கதவை மூடிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். நேத்ராவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தைக் கவனித்து கொண்டிருந்த அஷ்வந்த் இரண்டு நாள்களாக அவளிடம் பெரும் மாற்றம் தெரிவதை உணர்ந்தான். அதைப் பற்றி யோசித்தபடி தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தவன் அறைக்குள் நடந்த இருவரின் உரையாடலையும், மது சென்றதும் நேத்ராவின் அழுகையும் அவனை ஓரளவிற்கு நடந்தவற்றை யூகிக்கவைத்தது.

 

நேத்ரா இரண்டு நாள்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை எண்ணி எண்ணி அழுதுக்கொண்டிருந்தாள். அன்று வீட்டிற்கு ஸ்ரீ தன் நண்பரை அழைத்துக்கொண்டு அத்வைதைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். ஸ்ரீயை பார்த்ததும் நேத்ரா அலுவலக அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்க, ஸ்ரீ வேண்டா வெறுப்பாக அவளது கேள்விகளுக்குப் பதில் சொல்லி கொண்டிருப்பதை போல அவளுக்கே தோன்றியது.

 

அவளுக்குப் போன் வரவும் ஸ்ரீயிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து போன் பேசிக்கொண்டிருந்தாள். ஆனாலும் பார்வை முழுதும் ஸ்ரீ மீதே இருந்தது. ஆனால், ஸ்ரீ மறந்தும் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. காஃபி கொண்டுவந்த மீராவிடமும் ஸ்ரீயை பார்த்து விசாரிக்கவந்த அவள் அம்மாவிடமும் எந்த தயக்கமும் இல்லாமல் நன்றாக சிரித்து பேசுபவன் தன்னிடம் மட்டும் அளந்து வைத்தது போல பேசுவதையும்,அதுவும் சில நாள்களாக தன்னை வேண்டு மென்றே தவிர்ப்பது போல தோன்ற இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

 

அவனுக்காக வெளியே தோட்டத்திலேயே காத்திருந்தாள். ஆனால், வெளியே வந்தவன், அவள் அங்கே நின்றிருந்ததைப் பார்த்தது போல் கூட அவளுக்கு தோன்றவில்லை. தன் நண்பருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டான். ஸ்ரீ நீங்க என்னை எவ்வளவு அவாய்ட் பண்றீங்களோ அந்த அளவுக்கு என் மனசுல ஆழமா பதிந்துக்கொண்டே தான் இருக்கிறீர்கள். வரேன் நாளைக்கு வரேன் எனக்கு நாளைக்கு ரெண்டில் ஒன்று தெரிந்ததே ஆகவேண்டும் என்ற அவளது பிடிவாத குணம் தலைதூக்கியது.

 

மறுநாள் விடிந்தும் விடியாததுமாக காலையிலேயே கிளம்பிவிட்டாள். நேராக ஸ்ரீ ராமின் வீட்டுக் கதவை தட்டினாள். யாரது இவ்வளவு காலையில் ஏதாவது குழந்தைக்குப் பிரச்சனையா? என எண்ணிக்கொண்டே தூக்கம் கலையாத கண்களுடன் அவசரமாக வந்து கதவைத் திறந்தவன், காலையில் இவ்வளவு சீக்கிரமாக வந்து அவனைப் பார்த்து புன்னகைத்த நேத்ராவைப் பார்த்ததும் என்ன சொல்வது என தோன்றாமல் நின்றுகொண்டிருக்க “குட் மார்னிங் ஸ்ரீ” என நேத்ராவே ஆரம்பித்தாள்.

 

ஸ்ரீயும் பதிலுக்கு “குட் மார்னிங்” என்றான். “ஹலோ உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் உள்ளே வான்னு கூப்பிட மாட்டீர்களா?” என கேட்டாள். “உள்ளே வா உட்கார்” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று முகத்தைக் கழுவிக்கொண்டிருவருக்கும் காஃபி எடுத்துக்கொண்டு வந்தான். “ம்ம்.. தேங்க்ஸ்” எனச் சொல்லி வாங்கிக்கொண்டவள் அதை ரசித்து ருசித்து பருக ஸ்ரீகோ பொறுமை பறந்துக்கொண்டிருந்தது.

 

அவள் ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள் என்று புரிந்துக்கொண்ட ஸ்ரீ, “என்ன விஷயமா என்னைப் பார்க்க இவ்வளவு காலையில் கிளம்பி வந்திருக்கிறீர்கள்?” என்றான்.நேத்ரா பொறுமையாக, “காஃபி சூப்பரா இருந்தது” எனச் சொல்லி புன்னகைத்தாள்.

 

கடுப்பான ஸ்ரீ, “அவ்வளவு தானே ரொம்பத் தேங்க்ஸ். யாரும் பார்க்கும் முன் கிளம்புங்க” என அவளை துரத்தாத குறையாக சொல்லிவிட்டுக் கப்புகளை எடுத்துக்கொண்டு  கழுவிவைத்துவிட்டுத் திரும்பியவன் கிச்சன் வாசலில் நின்றிருந்த நேத்ராவைப் பார்த்தான். இந்த வேலையையும் நீங்க தான் செய்யனுமா? இதுக்குத் தன் வீட்ல ஒரு பொண்ணு இருக்கணும் என்பது, வீட்டு வேலையையும் கவனித்துக்கொள்வாள். உங்களையும் கவனித்துக்கொள்வாள்”  எனச் சொல்லவும் ஸ்ரீ அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், “உங்க சஜஷனுக்கு ரொம்ப நன்றி. நீங்க கிளம்பறீங்களா எனக்கு வேலை இருக்கு” எனச் சொல்லிவிட்டு அவளை தாண்டி செல்ல முயன்றான்.

 

நேத்ரா கோபத்துடன் குறுக்கே நின்று அவனைத் தடுத்து நிறுத்தினாள். “நேத்ரா என்ன இது வழியை விடு” என்றான். “ஸ்ரீ இன்னுமா உங்களுக்குப் புரியல? இல்ல புரியாதது போல நடிக்கிறீங்களா? இன்னும் எப்படி சொல்லி நான் உங்களுக்குப் புரியவைப்பேன்” என அழாத குறையாக சொன்னாள்.

 

“நேத்ரா நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால், இது நடக்காத விஷயம். நீ உன் மனசை போட்டு குழப்பிக்காதே. நீ சின்ன பொண்ணு. உனக்கு எப்போ என்ன செய்யணும்னு பார்த்து செய்ய உனக்கு அப்பா, அம்மா, கூட பிறந்தவர்கள் இருக்காங்க. நீ முட்டாள் தனமாக ஏதாவது ஏதாவது யோசிக்காதே. இன்னைக்குச் சரின்னு தோன்றும் எலலாம் நாளைக்கு உனக்குத் தப்பாக தோன்றும். வீட்டுக்குப் போய் நல்லா யோசி உனக்கே புரியும்” என பொறுமையாக சொன்னான்.

 

“இல்ல ஸ்ரீ. நான் அவசரப்படவில்லை  நிதானமாகத்தான் இருக்கேன். எங்க வீட்டில் ஏதாவது சொல்வார்கள் என நினைக்கிறீர்களா?அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்” என பேசிக்கொண்டே போக ஸ்ரீ கோபத்துடன், “நானும் சின்ன பொண்ணு ஆச்சேன்னு பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நீ பேசிக்கொண்டே போகிறாய். வீட்ல சொல்லும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துக்கொண்டு நிம்மதியாக இரு..

 

நான் இந்த ஹோமை என் உயிரா நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதை விட்டு என்னால் வரமுடியாது. இந்த வீட்டில் உன்னால் வாழ முடியாது. நீ வசதியாக வளர்ந்தப் பொண்ணு. என்னைக் கல்யாணம் செய்துக்கொண்டால் அதையெல்லாம் இழக்கணும். என்னை நம்பி வரும் பொண்ணுக்கு மூன்று வேலை சாப்பாடுப் போட்டு. அவளை நிம்மதியாக வைத்துக்கொள்ளமட்டும்தான் என்னால் முடியும். அதெல்லாம் அப்படி சாதாரணமாக வாழ உன்னால் முடியாது. இந்த ஹோமை கவனித்துக்கொள்ள பொறுமை ரொம்ப முக்கியம். உன்னோட துடுக்குத் தனத்திற்கும், கோபத்திற்கும், விளையாட்டுதனத்திற்கும், இந்த இடம் ஒத்துவராது இதற்கு மேல் நீ ஏதும் பேசாமல் கிளம்பு. இனி, நீ இங்கே வரவேண்டாம்” எனச் சொன்னதும், அவள் அசையாமல் அவனைப் பார்த்துக்கொண்டே நிற்க ஸ்ரீ கோபத்துடன் அவள் கையை பிடித்து இழுத்துவந்து வெளியே விட்டான்.

 

நடந்ததை நினைத்தவள் , “ஸ்ரீ எப்படி ஸ்ரீ என்னோட காதலை மறுக்க உங்களால் முடிந்தது” அழுகையோடு புலம்பினாள். ஜன்னல் வழியாக பார்த்த அஷ்வந்த் தன் தங்கை அழுவதைக் கண்டதும் தாங்க முடியவில்லை அவனால். இன்றே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என எண்ணிக்கொண்டே சென்றான்.

 

அன்று மாலை அத்வைதும் சித்தார்த்தும் வந்ததும் தன் அண்ணன் அண்ணிகளை , தனியாக அழைத்து சென்ற அஷ்வந்த் அனைத்தையும் சொல்லிவிட்டான். அதன்படி ஐவரும் கூடி பேசி அப்பாவிடம் சொல்லி நேத்ராவிற்கு உடனே மாப்பிள்ளைப் பார்க்க ஏற்பாடுச் செய்யவேண்டும் என்ற முடிவுடன் அன்று இரவே தன் பெற்றோரிடம் சென்று பேசினார். இது எதையும் அறியாத நேத்ரா, தன் அறையில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

 

இரண்டு நாள்களுக்குப் பிறகு, அன்று காலையில் நேத்ரா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் போது அவளது தந்தை அவளை அழைத்தார். “நேத்ரா உனக்குக் கல்யாணம் செய்துவைக்கலாம்னு முடிவு செய்து இருக்கிறோம். நல்ல சம்மந்தம். நீ மாப்பிள்ளை போட்டோ பார்த்து சரின்னு சொன்னால் மாப்பிள்ளையை வரவைத்து நிச்சயத்தை முடித்துவிடலாம் என்ன சொல்கிறாய்?” என கேட்டதும் நேத்ரா கோபத்துடன் கையிலிருந்த கோட்டை தூக்கி வீசினாள்.

 

“யாரை கேட்டு இந்த ஏற்பாடுச் செய்தீர்கள், எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” என திடமாக சொன்னாள்.

 

“தேவகி, “ஏன் நேத்ரா இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய். அப்பா என்ன உன்னோட நன்மைக்குத்தானே சொல்கிறார்கள். மாப்பிள்ளைக்கு யாரும் பெரியவர்கள் கிடையாது. ஒரே ஒரு தங்கை மட்டும் தன் இருக்காம்” என மதுவைப் பார்த்து சொல்ல, மது புன்னகையோடு நின்றுகொண்டிருந்தாள்.

 

மீரா, “இப்போ அந்த தங்கையும் அவங்க வீட்டுக்காரரும் அவரோட அண்ணாவும் சேர்ந்து தான் இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடுச் செய்றாங்களாம்” எனச் சொன்னதும்.

 

“ஏன் என்னை விட்டா அந்த மாப்பிள்ளைக்கு வேற பொண்ணா கிடைக்காது?” என எரிச்சலுடன் சொன்னாள்.

 

“அடடடடா… நீங்க முதலில் மாப்பிள்ளை போட்டோவை பிரித்து அவகிட்ட காட்டுங்க. இந்த மாப்பிள்ளையை அவ வேண்டாம்னு சொன்னால் அவ காலம் பூரா ஒவ்வையார் தான். அவளுக்கு வேற மாப்பிள்ளைப் பார்க்கவே பார்க்காதீங்க. நேரா நம்ம மாட்டரை முடிச்சிடுங்க” என வெட்கப்படுவது போல சொன்னான்.

 

“ரொம்ப நிம்மதி நானா உங்களைக் கல்யாணம் செய்துவைங்கன்னு கேட்டேன். அப்படி உங்களுக்கெல்லாம் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்கிறதென்றால் இதோ இந்த தடியனுக்கே கல்யாணம் செய்து வைங்க. எனக்கு நேரம் ஆகுது நான் கிளம்பறேன்” என கிளம்ப ஆயத்தமானாள்.

 

“நேத்ரா இந்த போட்டோவைப் பாரு உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்” என அத்வைத் சொல்ல சித்தார்த்தும் , “பாரு நேத்ரா உனக்கு வேண்டாம்னா வேண்டாம்” எனச் சொல்லவும், வேறு வழி இல்லாமல் போட்டோவை வாங்கி பார்த்தவள் நம்பமுடியாமலும், சந்தோஷத்திலும் போட்டோவையே பார்த்துக்கொண்டிருக்க. “என்ன நேத்ரா இந்த மாப்பிள்ளை பிடிக்கலையா? வேண்டாம்னு சொல்லிடலாமா?” என்று கேட்ட அம்மாவை ஓடிசென்று அணைத்துக்கொண்டாள். சந்தோஷத்தில் அழுதுக்கொண்டே தன் தாயைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

 

அவளது தந்தை, ” என்னடா நேத்ரா இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம். சந்தோஷமா?” என கேட்டதும், “அப்பா தேங்க்ஸ், அப்பா ரொம்பத் தேங்க்ஸ்” என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

 

“ம்ம்…ம்ம்… போதும் போதும் இந்த பாச மழை. இவ்வளவு சீக்கிரம் இந்த விஷயம் முடிவாக யாரு காரணம்னு நம்ம கல்யாண பொண்ணுகிட்ட எடுத்து சொல்லுங்க” என அஷ்வந்த் சாவதானமாக சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்துக்கொண்டு சொன்னதும், மீரா, “ஆமாம் நேத்ரா அஷ்வந்த் தான் எங்களிடம் வந்து சொன்னான். அதனால் தான் நாங்க நேராக போய் ஸ்ரீ ராமிடம் கல்யாணத்திற்குப் பேசினோம்.

 

மது, “மாமாவும், உங்க அண்ணன்களும் நேர்ல போய் பேசினாங்க. ஹரி அண்ணாவும் டெல்லிலயிருந்து பேசினாங்க” என்றதும் நேத்ரா அஷ்வந்தை நோக்கி வந்து “ரொம்பத் தேங்க்ஸ் டா அஷ்வந்த்” என அவன் மடியில் சாய்ந்து அழுதவளைப் பார்த்ததும் அஷ்வந்த் மட்டும் அல்ல அனைவருமே நெகிழ்ந்து இருந்தனர்.

 

அவளை சிரிக்க வைக்கவேண்டி அஷ்வந்த், “ஏய் நேத்ஸ் இப்போ உனக்கு ஒரு கதைச் சொல்றேன் கேட்க்கிறாயா?” என்றான். “ஏண்டா உன் மேல சாய்ந்து கொஞ்சம் பீளிங்க்சை காட்டினதுக்கு இப்போ நீ கதைனு சொல்லி போடப்போற மொக்கைக்கு நாங்களெல்லாம் பலி ஆகணுமா?” என கேட்டதும்

 

“ச்சு.. தேவை இல்லாமல் பேசாதே கதைய கேளு” என்றவன் ஒரு காட்டுல ஒரு குரங்குக்கூட்டம் இருந்ததாம். அந்த குரங்குக்கூட்டத்து தலைவன் இறந்து போச்சாம். உடனே எல்லா குரங்கும் கூடி நமக்கு ஒரு தலைவன் தேவை, அதனால் நாமளே ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கணும். அப்படின்னு ஒரு வயசான குரங்குச் சொன்னதும் எல்லா குரங்கும் ஒத்துக்குச்சாம். நான் ஒரு கேள்விகேட்க்கிறேன் அதற்கு யார் சரியான பதில் சொல்றாங்களோ அவங்க தான் தலைவன் அப்படின்னு சொன்னதும் எல்லா குரங்குகளும் சரின்னு சம்மதம் சொல்லிவிட்டது. இப்போ அந்த வயசான குரங்கு கேட்டுதாம்” எனச் சொல்லிக்கொண்டிருக்க அது என்ன கேள்வி என அனைவரும் அஷ்வந்தின் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர்.

 

“சேவல் வட்டமா முட்டை போடுமா? இல்ல சதுரமா முட்டை போடுமா?” என கேட்டதும் நேத்ரா அவசரமாக, “டேய் சேவல் எங்கேடா முட்டை போடும் கோழி தானே முட்டை போடும்” எனச் சொல்ல அஷ்வந்த் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

 

“ஏண்டா நீ என்ன லூசா? எதுக்கு இப்படி சிரிக்கிற?” என எரிச்சல் பட்டதும். அஷ்வந்த் அருகில் வந்து “காங்கிராஜுலேஷன்ஸ் ‘ என அவள் கையை பிடித்து குலுக்கினான். “எதுக்குடா ?” என்றவளைப் பார்த்து சிரிப்புடன், “நீ சரியா பதில் சொல்லி அவ்வளவு பெரிய குரங்குக்கூட்ட தலைவியா ஆகிவிட்டாயே அதுக்குத்தான்” என்றதும், அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க, “அடப்பாவி உன்னை என்ன செய்கிறேன் பார்” என நேத்ரா அஷ்வந்தை துரத்த அவளிடம் வேண்டுமென்றே மாட்டி இரண்டு உதை வாங்கினான்.

 

அனைவரும் சிரிப்பை நிறுத்த வெகு நேரம் ஆகியது. இந்தச் ச்ந்தோஷத்திற்குத் தன் கணவனும் ஒரு வகையில் காரணம் என்ற பெருமையுடன் தன் கணவனைக் காதலுடன் பார்த்தாள். அதேநேரம் சித்தார்த்தின் விழிகளும் தன்னையே பார்ப்பதைக் கண்டு நெஞ்சம் நிறைய சந்தோஷத்துடன் அவன் புன்னகை நிறைந்த முகத்தைத் தன் மனதில் பதித்துக்கொண்டாள்.

 

அன்று முழுதும் சந்தோஷத்திலும், சிரிப்பிலுமே நாள் ஓடியது. இரவு, சித்தார்த்திற்குப் பால் எடுத்துக்கொண்டு வந்தவளை, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், கை நீட்டி அழைக்க, புன்னகையுடன் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். இருவருமே சிறிதுநேரம் ஒன்றும் பேசவில்லை.

“ஏங்க. நீங்க ஸ்ரீ அண்ணாகிட்ட போய் பேசி நேத்ரா கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரம் முடித்துவைப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஸ்ரீ அண்ணா ஸாபட் ஆனால், ஒரு முடிவெடுத்தா, அதிலிருந்து மாறவே மாட்டார். அதான் எனக்கு ஆச்சர்யம்” என்றாள். “அது பெரிதாக ஒன்றும் இல்லை மது  நேத்ரா பத்தி கொஞ்சம் எடுத்து சொன்னேன். அவர் கொஞ்சம் கவுரவம் பார்க்கிறவர். அதான் கல்யாணம் ஆனாலும் நாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ எந்த விதத்திலும் அவராக கேட்காமல் உதவி செய்யக்கூடாது அப்படின்னு நினைத்தார். அவரோட பேச்சிலேயே அது தெரிந்தது. அதான் அதற்கு ஏற்றார்போல பேசினேன். விஷயம் சுபம்” என்றான்.

“நீங்க யாரு. எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன். உங்கள் பேச்சில் மயங்காத ஆள் இருக்க முடியுமா?” எனச் சொல்லி சிரிக்க. “உன்னைத் தவிர” என்றான் புன்னகையுடன். சிரித்த மது அவன் மார்பை நீவியபடி, “அது அப்போ, இப்போ….” எனச் சொல்லிவிட்டு அவன் மார்பில் முகம்புதைத்தவள் அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.

“என்ன மேடம், இன்னைக்கு நல்ல மூட்லயிருக்கீங்களா, கேட்காமலே எல்லாம் கிடைக்குது” என்று சிரித்தான். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், ” “இன்னைக்கு நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கு என்றால் அதுக்கு நீங்களும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது எனக்கு அப்படியே பறப்பது போலிருக்கு” என்றாள்.

“பறந்தது போதும் , கொஞ்சம் கிழே இறங்கி வாங்க” என மேலும் இறுக அணைத்துக்கொண்டான். அவளும் சிறிதுநேரம் அவனுக்கு ஈடுகொடுத்து நடந்துகொண்டாள். இருவரும் தங்களை மீட்டுக்கொண்ட நேரத்தில் மது அவனிடமிருந்து விலகி செல்ல முயல , “மது எங்கே போற, போதும் நீ என்னைப் பார்த்து ஓடி போய் ஒளிந்ததெல்லாம். இனி, என்னை விட்டுப் போக நினைத்தால் அவ்வளவுதான்” என அவளை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டான்.

மது சிரித்தபடி, “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள். இப்படி ஒரு பழமொழி இருக்குத் தெரியுமா உங்களுக்கு ” எனச் சொல்லிவிடு குறும்பாக அவனைப் பார்த்து சிரித்தாள். “அது காதலிக்க தெரியாதவர்களுக்காக சொல்லி இருப்பார்கள். நாம தான் காதல் பறவைகள் ஆச்சே” என அவள் கழுத்தில் முத்தமிட்டவன் தொடர்ந்து முன்னேற அவன் கரங்களும் அவளுடலில் அத்துமீற தொடங்கின, ஒரு இனி,ய இல்லறம் அரங்கேறிக்கொண்டிருந்தது.

______________________
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே
முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே
மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *