Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -62

Sponsored

Shenba Ninnai Saranadainthen -62

அத்தியாயம்—62

 

தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த மது ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகம் முழுதும் வியர்க்க, அனிச்சை செயலாக அவள் கைகள் முகத்தை துடைத்தபடி என்ன இது இப்படி ஒரு கெட்ட கனவு என எண்ணிக்கொண்டே திரும்பிப் பார்த்தவள் சித்தார்த் அங்கில்லாததைக் கண்டதும் ஒரு திடுக்கிடலுடன், அறை முழுதும் தன் கண்களை அலையவிட்டாள்.  அறையில் அவன் இல்லை என்றதும் அவன் அணைப்பிலேயே உறங்கும் வரை அவன் தன் அருகில் இருந்தது நன்கு நினைவில் இருந்தது. ஒரு வேளை உறக்கம் வராமல் பால்கனியிலிருக்கிறானோ என எண்ணிக்கொண்டே பால்கனி கதவை நெருங்கியவள் கதவு பூட்டி இருப்பதைப் பார்த்தாள்.

 

மனம் நிறைய பயத்துடன் விளக்கை போட்டவள் மணியை பார்க்க மணி இரண்டை தாண்டி  இருந்தது. சித்தார்த் அறையில் இல்லாதது, தான் கண்ட கனவையும் சேர்த்து பார்த்து பயத்துடன் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினாள். யாரை எழுப்புவது என்ன சொல்வது என புரியாமல் திகைத்தவள் அஷ்வந்தின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டு அங்குச் சென்று அவன் அறைக்கதவை வேகமாக தட்டினாள்.

 

தூக்க கலக்கத்துடன், யாருடனோ போனில் பேசிக்கொண்டே வந்து கதவைத்திறந்தவன் அந்த நேரத்தில் மதுவை கண்டதும், அவள் கலங்கிய விழிகளைக் கண்டவன் போனில் பேசியவரிடம், “நான் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன்  ஃபாலோ பண்ணுங்க” என அவசரமாக சொல்லிவிட்டு மதுவிடம் திரும்பினான். ஆனால், அந்த அறை நொடியில் மதுவின் மனம் என்னென்னவோ எண்ணி கலங்கியது.

 

“அண்ணி என்ன ஆச்சு? ஏன் இப்படியிருக்கீங்க? இந்த நேரத்தில் நீங்க… ஆமாம் அண்ணன் எங்கே?” என்றதும், “அஷ்வந்த் உங்க அண்ணனை ரூம்ல காணோம் நான் தூங்கும் வரை என் பக்கத்தில் தான் இருந்தார். கனவு கண்டுத் திடீர்னு நான் விழித்து பார்த்தேன்,பக்கத்தில் உங்க அண்ணன் இல்லை. யாரை எழுப்புவது என்று தெரியாமல் இங்கே விளக்கு எரிந்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் இங்கே வந்தேன்” என திக்கி திணறி சொல்லி முடித்தாள்.

 

“ஒரு நிமிடம் அண்ணி வரேன் என்றவன், வீட்டுச் சாவியை எடுத்து கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றவன், ஷெட்டில் சித்தார்த்தின் கார் இல்லாததைக் கண்டதும் வாட்ச் மேனிடம் சென்று விசாரித்தான். வேகமாக உள்ளே வந்தவன் சித்தார்த்தின் மொபைலுக்கு முயன்றுக்கொண்டே, “அண்ணி அண்ணன் பன்னிரண்டு மணிகிட்ட காரை எடுத்துக்கொண்டு  போயிருக்கார்.” எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சித்தார்த்தின் மொபைலுக்கு முயன்றுக்கொண்டிருந்தான்.

 

எத்தனையோ முறை முயன்றும், அவுட் ஆப் கவரேஜ் என மீண்டும் மீண்டும் வரவும், ஜீவாவிற்குப் போன் செய்து சித்தார்த் அங்கு வந்தானா?என விசாரிக்க, இல்லை என்ன விஷயம் என கேட்டுத்தெரிந்துக்கொண்ட ஜீவா தானும் முயன்று பார்ப்பதாக சொன்னான். மது ஏதாவது ஒரு நல்ல பதில் வராதா என பயத்துடனும், ஒரு எதிர்பார்ப்புடனும், சஷ்டி சொல்லியபடி அஷ்வந்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அஷ்வந்த் சித்தார்த்தின் மொபைலுக்கு முயன்றுக்கொண்டிருக்க, அதேநேரம் ஹாலில் இருந்த போன் ஒலித்ததும், மது ஓடிசென்று போனை எடுத்து பதட்டத்துடன், “ஹலோ” என்றாள். எதிர் முனையிலிருந்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியுடன் பேச வாய் வராமல், சிலையாக நின்றவளின் கையிலிருந்து ரிசீவரை வாங்கியவன், மறுபுறம் இருந்து வந்த செய்தியில் சற்று நிலை குலைந்தாலும், சமாளித்துக்கொண்டவன் அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டு ரிசீவரை வைத்துவிட்டு மதுவைப் பார்த்தான்.

 

செய்தியைக்கேட்டு, மூச்சுக்குத் தவிப்பவள் போல திணறியபடி, ஆதாரத்திற்குச் சோஃபாவைப் பற்றிக்கொண்டு  கண்களில் நீர் தளும்ப,பிரமை பிடித்தவளை போல நின்றிருந்தவளைப் பார்த்தவன், அஷ்வந்த்தின் “அண்ணி என்னாச்சு” என்ற அழைப்புக்கு வாயைத் திறந்தவள்,வார்த்தைகள் தொண்டைய விட்டு வெளிவராமல் தவித்தாள். தண்ணீரை விட்டு வெளியே எடுத்துப்போடப்பட்ட மீன் தன் மூச்சுக்கற்றுக்கு வாயைத்திறப்பது போன்ற அவள் பாவனையில் திகைத்தவன் நேராக அத்வைதின் அறைக்கு ஓடினான்.

 

விஷயத்தை கேள்விப்பட்ட அத்வைத் உடையை மாற்றிக்கொண்டு வருவதற்கு முன்னால், மீரா மதுவை நோக்கி ஓடிவந்தாள்.”மது மது என்னம்மா… என்னம்மா…ஆச்சு?” என பரிவுடன் மதுவை அணைத்துக்கொண்டு, பேசமுடியாமல் தவிப்பவளைப் பார்த்ததும், பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மதுவிற்கு சிறிதளவு புகட்டினாள். “மது ஒண்ணும் இல்லம்மா, பயப்படாதே” என தேற்றிக்கொண்டிருக்கும் போதே மது, “எனக்கு மட்டும் ஏனக்கா இப்படியெல்லாம் நடக்கிறது” என அழுதவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள்.

 

களைப்புடன் உறங்கிக்கொண்டிருந்தவர்கள்  ஹாலில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று எழுந்து வெளியில் வர, மது அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்த தேவகியிடம் அஷ்வந்த் நடந்ததைச் சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.

மதுவின் அருகில் வந்த தேவகி, “மது, இங்கே பாரு எல்லாம் சரியாகிவிடும், எழுந்துக்கோம்மா” என்றதும் அந்த பரிவில், “சித்தூ” என்று பெருங்குரலேடுத்து முகத்தை மூடிக்கொண்டு  கதற ஆரம்பித்தாள். திகைத்துப்போன அனைவரும் அவரவருக்குத் தகுந்த விதத்தில் ஆறுதல் படுத்த முனைந்தனர்.

 

சுபா, “மது, கொஞ்சம் கட்டுப்படுத்திக்கோம்மா, அவனை ஹாஸ்பிடலில் போய் பார்க்க வேண்டாமா??” என்று சொல்ல, ஹாஸ்பிட்டல் என்ற வார்த்தையைக் கேட்டதும், விலுக்கென்று நிமிர்ந்தவள், “அய்யோ வேண்டாம், அண்ணி ஹாஸ்பிட்டல் வேண்டாம், ஒரு முறை நான் ஹாஸ்பிட்டல் போனதே இந்த ஜென்மத்துக்கும் போதும், என் சித்துவை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள், “என்று சம்ந்தமில்லாமல் அவள் புலம்ப ஆரம்பிக்க செய்வதறியாது அனைவரும் திகைத்தனர்.

 

நேரமாகிக்கொண்டே இருக்கிறது அங்கே சித்தார்த் என்ன நிலையிலிருக்கின்றானோ என எண்ணிய அஷ்வந்த் உரத்த குரலில், “அண்ணி,கொஞ்சம் நிறுத்தறீங்களா?” என அதட்ட, இதுவரை அதுபோன்ற குரலில் அவன் பேசியறியாத மது, திகைத்துப்போய் அவனை நோக்க, “வாயை முடிக்கொண்டு  போய் காரில் ஏறுங்கள்” என்று இரைந்தான்.

 

ஒரு மன்னிப்பு வேண்டும் பாவனையில் அனைவரையும் அவன் நோக்க, எல்லோரும் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையாட்டினர். அடிபட்ட சிறு குழந்தையின் பாவனையில் மதுவின் கண்களில் தெரிந்த வலி, அஷ்வந்தை மிகவும் துன்புறுத்தியது. மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணி!!’ என்று மனதோடு அவளிடம் மன்னிப்பு வேண்டியவன் வேகமாக வெளியே ஓட, அனைவரும் பின்தொடந்தனர்.

 

அத்வைத் ஷெட்டிலிருந்து காரை கொண்டுவந்து போர்ட்டிக்கோவில் நிறுத்த,

ஒரு விதமான மரத்த உணர்வோடு பின் தொடர்ந்த மது அஷ்வந்தின் அதட்டலால், புலம்பலை நிறுத்தியிருந்தாலும், மனம் இரு மடங்கு உரக்க தன் புலம்பலை தொடர்ந்தது.

 

ஹரி, “மீரா நீயும்,சுபாவும், குழந்தைகளோட இங்கேயே இருங்க” எனச் சொல்லிவிட்டு கிளம்பினர்.

 

வழிமுழுதும் அழுதுக்கொண்டே வந்த மதுவை, தன் துன்பத்தை கூட மறைத்துக்கொண்டு  தன் மருமகளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தார் தேவகி. அத்வைத் எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக காரை செலுத்தி ஹாஸ்பிட்டலை அடைந்தான்.

 

ஹாஸ்பிட்டல் வாசலிலேயே ரமேஷும், ஜீவாவும் நின்றிருந்தனர். அத்வைதின் காரை கண்டதும், இருவரும் அருகில் வந்தனர். முதலில் இறங்கிய சித்தார்த்தின் கையை பிடித்த ஜீவா, “ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருக்காங்க, ப்ளட் வேணும்னு கேட்டாங்க ஏற்பாடு பண்ணிட்டோம்.” எனச் சொல்லிக்கொண்டிருக்க தேவகியை தொடர்ந்து இறங்கிய மதுவின் மீது பார்வை விழ, அவளது மனஉளைச்சல் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

 

ஜீவா சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டே இறங்கியவளின் மனமும், உடலும் தளர, அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்று அவளது மனம் அரற்ற தொடங்கியது. அருகில் வந்த ரமேஷ், “மது டோன்ட் வொர்ரி ஒண்ணும் ஆகாது” என்றான். “அண்ணா…. அவர் இப்போ….” என திக்கி திணறியவளைப் பார்த்து “ICU லயிருக்கான். டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க” எனச் சொன்னது தான் தாமதம் அனைவரையும் முந்திக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ICU வார்டின் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வை சித்தார்த்தைக் கண்டதும் அவன் மீதே நிலைகுத்தி நின்றது.

 

கையில் கட்டுத் தலையில் கட்டு, உடலில் ஆங்காங்கே சில இடங்களில் காயம், அங்கே ஒரே ஒரு நொடி அர்ஜுனாக தெரிய, தடுமாறியவள் கண்களை இறுக மூடி திறந்தவள் கண்களை அகலவிரித்து பார்த்தாள். சித்தார்த் மயக்கத்தில் இருந்தான். வாயைத் தன் கைகளால் பொத்தியபடி அவன் அருகில் சென்றவள், அவனது இந்த நிலைக்குத்தான் தான் காரணம் என குற்ற உணர்வு எழ, அது பெரிய கேவலாக வெளிப்பட்டதும், தடுப்புக்கு மறுபுறம் இருந்து வந்த நர்ஸ், “மேடம் உங்களை யாரு உள்ளே விட்டது? இங்கெல்லாம் வரக்கூடாது. வெளியே போங்க” எனச் சொல்ல சொல்ல மது சித்தார்த்தை விட்டு நகர மறுத்து, “சித்தூ” என அழுதவளை இரண்டு பேராக இழுத்துவராத குறையாக கொண்டுவந்து வெளியில் விட்டனர்.

 

வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்த நர்ஸ் சத்தம் போட்டுவிட்டுச் செல்ல, அழுதுகொண்டே திரும்பிய மது வராண்டாவில் பதட்டத்துடன் ராஜேஷும், தீபக்கும் முன்னால் வர, மற்றவர்கள் அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட மது, ராஜேஷை கண்டதும் கோபத்துடன் அவனை நோக்கி சென்றாள். மதுவின் அருகில் வந்த ராஜேஷ் கலங்கிய விழிகளுடன் தன் தங்கையை பாத்துக்கொண்டே, “மதும்மா” என்றதும், “சந்தோஷம் தானே, இப்போ உனக்குச் சந்தோஷம் தானே, இதைத் தானே எதிர்பார்த்த. இப்போ உனக்குத் திருப்தியா?திருப்தியா? நான் எவ்வளவு தூரம் சொன்னேன், எனக்குக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு கேட்டியா? அவர் வாழ்க்கையாவது நல்லாயிருக்கணும் என நான் நினைத்தது தப்பா. கடைசியில் நான் நினைத்தது போல ஆகிவிட்டதே, என் சித்துவை நான் இந்த நிலையில் பார்க்கணும்னு தான் எனக்குக் கல்யாணம் செய்து வைத்தாயா? “மது ப்ளீஸ் , நான் உனக்கு…” எனச் சொன்னவனை “நல்லது செய்றேன்னு,நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கணும் என  நினைத்தாயா? பார்த்த இல்ல நீ செய்த நல்லதை, என் சித்து இன்னைக்கு எந்த நிலையிலிருக்கார் என்று” என  கோபத்துடன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ராஜேஷின் சட்டையை பிடித்து உலுக்கியபடி தன்னை மறந்து கத்தத்தொடங்கினாள்.

 

அனைவருமே ஒருவித பயத்துடனும், செய்வதறியாமலும் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க, சத்தம் கேட்டு அங்கே வந்த நர்ஸ், “என்ன இது இப்படி ICU வார்டு முன்னால் நின்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? ஏம்மா படித்தவர்கள் தானே நீங்கள். இப்படி சத்தம் போட்டால் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என தெரியாது உங்களுக்கு?” எனச் சொன்ன நர்சையும், மது முறைத்தபடி நின்றுகொண்டிருக்க அருகில் வந்த தேவகி மது, “வாம்மா வந்து இப்படி உட்க்கார்” என்றதும், கோபம் சிறிதும் அடங்காமல், வராண்டாவில் இருந்த சாரில் சென்று அமர்ந்தாள்.

 

கண்ணை மூடி அமர்ந்த மதுவின் நினைவுகள் சித்தார்த்தை நோக்கி பாய்ந்து சென்றன. “சித்து…சித்து… நீங்கள் என் உயிரல்லவா? நான் உங்களை எப்படி எல்லாம் அருமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்காக நீங்கள் எவ்வளவு துன்பம் அனுபவித்தீர்கள்? அதற்கு ஈடாக நான் என்னதான் தர முடியும், இனி, நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நீங்காமல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்து தவறா?ப்ளீஸ் சித்து, இந்த ஒருமுறை நீங்கள், என் பேச்சை கேளுங்கள். நீங்கள் எப்போதும் என் பேச்சைத்தான் கேட்டீர்கள். நான் உங்களுக்கு வேண்டாம் என்று சொன்னபோது கூட. இப்போதும், இந்த ஒரு முறை எனக்காக மீண்டு வாருங்கள்” என்று மானசிகமாக அவனிடம் இரைஞ்சியபடி அமர்ந்திருந்தாள்.

 

அவளுடைய மோன தவத்தைக் கலைக்காமல் அனைவரும் சிறிது ஒதுங்கி அமர்ந்து கொண்டனர். அப்போது காரிடாரில்,’குழந்தை பிறந்தது,ராசியான நேரம் என்று யாரோ சொல்லிக்கொண்டு  போனது சுருக்கென்று, அவள் கவனத்தை தைத்தது.

 

ராசி…. ராசி…. என்றதும் அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது. அர்ஜுனின் மறைவிற்குப் பிறகு, நேரில் பார்த்து, சிரித்து பேசும் உறவினர்களே அவளது முதுகுக்குப் பின்னே சென்றதும், அவளை ஏளனம் பேசியதும், ராசி இல்லாதவள், பிறந்ததும், அம்மாவை முழுங்கிடுச்சி, வளரும் போதே அப்பாவையும், இப்போ கல்யாணம் செய்துக்க இருந்த பையன். இன்னும் எத்தனை எத்தனைப் பேரை இப்படி தூக்கிக் கொடுக்கணுமோ என பேசிய போதும் அதையெல்லாம் மனதில் தாங்கிக்கொண்டு, வெளியே சிரித்துக்கொண்டும் நடமாடியதெல்லாம் நினைவிற்கு வந்தது.

 

ஆமாம் எல்லோரும் சொன்னது உண்மையே உண்மை, ஆண்டவனே இதற்காக தானே நான் இவ்வளவு தயங்கினேன். என்னுடைய வாழ்க்கை எப்படிப் போனாலும் சரி, சித்து நல்லபடியா இருக்கணும்னு நினைசேன். என்னை புரிந்து கொள்ளாமல் எல்லோரும் கரிச்சு கொட்டினாங்க. கடவுளே, இந்த ஒரு முறை சித்துவை காப்பாற்றி கொடுத்துவிடு. அதன் பின் அவருக்கு, நல்லது எது எனறு பார்த்து நான் செய்து கொள்கிறேன்.

 

என்னை பிரிந்து தான் அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று விதி இருந்தால், அவரை பிரிவது எனக்கு உயிர் வேதனை என்றாலும், அவர் நலனுக்காக அந்த முடிவை ஏற்க நான் தயார்.’ என்று கடவுளிடம் மானசிக பேரம் நடத்திக்கொண்டிருந்தாள்.

 

அந்த ஒரு நொடியில் அவள் மனதில் விழுந்த அந்த விதை, அடுத்து வந்த

நாள்களில், வேருன்றி பெரிய விருட்சமாய் வளர்ந்து நின்றது.

 

டாக்டர்கள் சொன்ன இருபத்துநாலு மணி நேரம் முடியும் போது மது தான் எடுத்திருந்த முடிவில் திடமாக இருந்தாள். அவன் குணமாகும் வரை உடன் இருக்கவேண்டும், அவனுக்குப் பணிவிடைகள் செய்து அவனைப் பார்த்துக்கொள்ளவேண்டும். என்று ஒருமனதாக முடிவெடுத்துக்கொண்டாள். எங்கே செல்லவேண்டும், யாரை பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் அமர்ந்திருந்த நேரம், சித்தார்த் கண்விழித்துவிட்டதாக டாக்டர் வந்து பார்த்துவிட்டு, இனி, ஒன்றும் பயமில்லை என்றும் மேலும் செய்ய வேண்டியதையும் சொல்லிவிட்டு கூட்டம் போடாதீர்கள், யாராவது இரண்டு பேர் மட்டும் போய் பார்த்துவிட்டு வாருங்கள் இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே இருக்கட்டும்,நாளைக்கு ரூமிற்கு மாற்றிவிடலாம் எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

 

கடவுளுக்கு கோடி முறை நன்றி சொல்லிவிட்டுத் தேவகியும், மதுவும், சித்தார்த்தைப் பார்க்க உள்ளே சென்றனர். கண் மூடி படுத்திருந்தான். வலியின் தீவிரம், முகத்தில் தெரிந்தது. மயக்க மருந்தின் வீரியத்தில் நடு நடுவில் கண் விழிப்பதும் சில நொடிகளில் கண்ணை மூடிக்கொள்வதுமாக இருந்தான்.

 

மகனின் அருகில் சென்ற தேவகி, சித்தார்த்தின் தலையை மெல்ல கோதிவிட்டார். அவரது கண்கள் கலங்க நாசுக்காக துடைத்துக்கொண்டு, “மதும்மா நான் வெளியே இருக்கேன் நீ ஐந்து நிமிடத்தில் வந்துவிடு. அவன் எதிரில் அழாதேம்மா. அவன் கண்திறந்து பார்த்தால் அவனும் வருத்தப்படுவான்” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

 

சித்தார்த்தின் கையை தொட்டுத் தடவிய மதுவின் கண்ணீர் சித்தார்த்தின் கரங்களில் விழுந்தது. லேசாக விழிகளைத் திறந்தவனின் கண்களுக்கு நிழல் உருவமாக தெரிந்தவளைப் பார்த்ததும், “மது” என முனகியவன், மீண்டும் மயக்கத்திற்குச் சென்றுவிட, அவனையே பார்த்தபடி சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்தவள், கண்களை துடைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

 

மறுநாள் சொன்னபடி சித்தார்த்தை ரூமிற்கு மாற்றிவிட்டனர். சித்தார்த் மயக்கத்திலேயே இருந்தான். அறைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் சித்தார்த் மெல்ல கண்விழித்தான். வலது கையில் வலி இருந்தது, லேசாக முகம் சுளித்தான். அனைவரும் சித்தார்த்தை சுற்றி நின்றுகொண்டிருக்க அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் சித்தார்த்தின் கண்கள் மதுவை தேடி அலைந்தது.

 

அவனது தேடலை புரிந்துக்கொண்டு அனைவரும் ஒவ்வொருவராக  வெளியேறினர். சுவற்றில் சாய்ந்தபடி நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மதுவைப் பார்த்தான். மது அருகில் வந்த தேவகி, “மது நான் வீட்டுக்குப் போய் உங்களுக்குத் தேவையானதை எடுத்து வருகிறேன்” எனச் சொல்லிவிட்டுச் சென்றதும், சித்தார்த்தின் பார்வை மது மீது விழுந்தது. கண்கள் கலங்க நின்றிருந்தவளை நோக்கி தன் இடது கையை நீட்டியதும் தான் தாமதம் ஓடி வந்து அவன் கைகளை பிடித்தபடி அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.

 

“மது, ப்ளீஸ்… அழாதடா. எனக்குத்தான் ஒண்ணுமில்லயே” என்று சொன்னபோதும் நிறுத்தாமல் அழுது தீர்த்தாள். “என்னால் தானே சித்தூ,என்னால் தானே நீங்க அந்த நேரத்தில் வெளியே போனீர்கள். நான் உங்களிடம் சத்தம் போடாமல் இருந்திருந்தால் நீங்க என்னை விட்டு அந்த இரவில் எதற்காக போயிருப்பீங்க. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். என்னால் உங்களுக்கு எப்போதும் பிரச்சனை தான்” என அழுதவளை தேற்ற வழி தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சற்று சாய்ந்தபடி அமர்ந்திருந்தவனின் மேல் சாய்ந்துக்கொண்டு அழுதவளின் கன்னத்தில் லேசாக குனிந்து முத்தமிட்டான். “ச்சீ….!! அழாதடா ஒரே  உப்பு கரிக்குது” என்றதும் நிமிர்ந்து அவனைப் பார்த்து சிரித்தாள். தன் இடது கையை எடுத்து அவளை வளைத்துக்கொண்டான்.

 

அடிபட்டிருந்த வலது கையைத் தடவியபடி, “இப்போ எப்படியிருக்குங்க…? ரொம்ப வலிக்குதா…?” என கேட்டுக்கொண்டே அவனது வலது கையைத் தடவிக்கொடுத்தாள். “ஊகூம்” என தலையசைத்தவன், “என் ஏஞ்சல் என் கூடவே இருக்கும் போது எனக்கு எப்படி வலிக்கும்?” என புன்னகைத்தான். அவன் பதிலைக் கேட்டதும் மதுவின் முகம் சில நொடிகள் கருத்து, பின்னர் தெளிவு பெற்றது.

 

சித்தார்த்திற்கு நன்கு குணமாகும் வரை கண்டிப்பாக அவனுடனிருந்து தான் ஆக வேண்டும். சித்தார்த்தை விட்டு பிரிந்து செல்வது என்பது உறுதியாகிவிட்டது. இனி, அவனை விட்டுச் செல்லும் வரை தான் எந்த விதத்திலும் அதை வெளிப்படுத்தக்கூடாது. இங்கு இருக்கும் சில நாள்களும் அவனை நிம்மதியாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

 

அதன் பிறகு வந்த நாள்களில் தன் எண்ணப்படியே நடந்துகொண்டாள். முழுதாக இருபது நாள்களுக்குப் பிறகு, சித்தார்த்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர். தலை காயமும், உடலில் இருந்த பெரும்பாலான காயங்களும் ஆறி இருந்தன. காலில் இருந்த கட்டும், வலது கை கட்டு மட்டும் பிரிக்க இன்னும் பதினைந்து நாள்கள் ஆகும் என்று சொல்லி இருந்தனர். ஆர்த்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று சித்தார்த்தின் அறையில் அவனைப் படுக்க வைத்தனர்.

 

சற்றுநேரம் அனைவரும் அவனுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினர். சித்தார்த்தும் லாப்டாப்பில்  தனக்கு வந்த மெயில்களைப் பார்த்துக்கொண்டிருக்க, மது சோஃபாவில் அமர்ந்து அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

கண்களின் ஓரம் துளிர்த்த கண்ணீரைச் சுண்டியெறிந்துவிட்டு எழுந்து சென்று அவனுக்கு இரவு உணவை கொண்டுவந்து  தானே ஊட்டிவிட்டாள். மருந்து மாத்திரைகளைக் கொடுத்து படுக்கவைத்தாள்.

 

தன் வேலைகளை முடித்துக்கொண்டு, வந்து சித்தார்த் உறங்கிவிட்டான் என்று தெரிந்துக்கொண்டு, தன் மொபைலை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்று கதவை மூடிவிட்டு, தன் தோழியுடன் வெகுநேரம் பேசிவிட்டு, சிறிதுநேரம் ஊஞ்சலில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். இது எல்லாமே சித்துக்காக தானே என நினைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் அறைக்கு வந்தாள்.

 

வந்து படுத்தவளை சிறிது நேரத்தில் சித்தார்த்தின் இடது கரம் மதுவின் இடையை வளைத்து அருகில் இழுக்க, கண்களில் கண்ணீருடன் இதயத்தை யாரோ கசக்கி பிழிவதை போன்ற வேதனையில் தவித்தாள். ‘ஓ’ வென்று கண்ணீர் விட்டுக் கதறி அழுது புலம்பவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை அடக்கியபடி இறுகிப்போய்ப் படுத்திருந்தாள்.

 

வீட்டிற்கு வந்து பதினைந்து நாள்களுக்குப் பிறகு சித்தார்த்தின் கை கட்டும் பிரிக்கப்பட்டது. அதற்குள் மது, தன் தோழி மூலமாக, தன் பயணத்திற்குத் தேவையான, பாஸ்போர்ட் அவளிடம் இருந்ததால், விசா மட்டும் தன் தோழி மூலமாகவே வாங்கி மெயிலில் வந்ததை பிரிண்ட் எடுத்து பத்திரமாக மறைத்து வைத்தாள். தன் செர்ட்டிபிகேட், மற்றும் தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.

 

இரண்டு நாள்களாக சித்தார்த்தும் அலுவலகம் சென்றுவர ஆரம்பித்திருந்தான். வலது கையை சாதரணமாக இயக்கலாம் என்று சொல்லி இருந்தாலும், மதுவின் வற்புறுத்தலால் டிரைவர் காரை ஓட்ட சித்தார்த் ஒருநாளைக்கு சில மணி நேரம் மட்டுமே ஆபீஸ் சென்றுவந்தான்.

 

மாலை நேரங்களில் மது சித்தார்த்துடன் பீச்சில் நடந்துவிட்டு வருவாள். ஒரு நாள் சித்தார்த் மதுவை வெகுவாக கடிந்துக்கொண்டான். “மது நீ என்னைக் கவனித்துக்கொள்கிறேன்னு சொல்லி உன்னைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. நான் எத்தனையோ நாள் பார்த்தேன், ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் அலைப்புருதலோடு இருப்பாய் நான் உன்னை மெல்ல தட்டிகொடுத்தாலோ இல்லை என் அணைப்பில் தான் நீ நன்றாக தூங்குகிறாய்” என்றான்.

 

இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த அணைப்பும் ஆறுதலும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ என எண்ணுகையிலேயே கண்களில் நீர் கோர்த்தது. சித்தார்த் அறியாமல் கண்களை துடைத்துக்கொண்டாள்.

 

அன்று இரவு மது தலையை விரித்து தளர பின்னிக்கொண்டு  கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்க, சித்தார்த் பின்னால் வந்து நின்றான். நிமிர்ந்து பார்த்த மதுவிற்கு அவனது எண்ணம் புரிய, ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள். “மது” என அணைத்துக்கொண்டவனின் விருப்பத்திற்கிணங்க நடந்துகொண்டாள்.

 

காலையில் மது எழுந்துக்கொள்ளும் போது தலையைத் தூக்க முடியாமல் தலை சுற்றிக்கொண்டு வந்தது. எழுந்துக்கொள்ள முயன்றவள் முடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழுந்தாள். என்ன ஆச்சு எனக்கு, இரண்டு நாள்களாகவே லேசாக இப்படி தான் இருந்தது. இன்று ரொம்ப தொல்லையாக இருக்கே என எண்ணிக்கொண்டே, மெதுவாக எழுந்தவள் மனதில் சுருக்கென்றது. இதை எப்படி நான் மறந்தேன். சித்தார்த்தைப் பற்றிய நினைப்பினில் மொத்தமாக நான் இந்த விஷயத்தை மறந்துவிட்டேனா?

 

இன்றே டாக்டரிடம் போய் வர வேண்டும் என எண்ணிக்கொண்டே குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவினாள். சற்று பரவாயில்லை போல தோன்றியது. தன் கடன்களை முடித்துக்கொண்டு கீழே வந்தாள். சித்தார்த் அலுவலகம் கிளம்பி சென்றுவிட தன் அத்தையிடம் வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு லேடி டாக்டரிடம் சென்று கர்பத்தை உறுதி செய்துக்கொண்டு சற்று அதிர்ச்சியுடன், வெளியே வந்தாள்.

 

அருகில் இருந்த கோவிலின் உள்ளே சென்று அமர்ந்தவளுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண்களை மூடி தூணில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்கள் கண்ணீரை பொழிய, எவ்வளவு சந்தோஷமான விஷயம். சித்துக்குத் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷபடுவார்? வீட்டில் எல்லோருக்கும் தெரிந்தால் வீடே கொண்டாட்டமாக இருக்குமே, ஆனால், அது எதற்கும் வழி இல்லாமல் போய் விட்டதே. இன்னும் கொஞ்சம் நாளில் சொந்தபந்தம் இல்லாமல் தன் குழந்தை வளரப்போகிறதே என்னும் வேதனையும் சேர்த்து அவளைப் பாடாகபடுத்தியது.

 

இது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. சித்தார்த்தின் ஞாபகமாக என் வாழ்க்கையின் பற்றுக்கோடாக எனக்கு ஒரு துணையைக் கடவுளே கொடுத்திருக்கிறார். என் குழந்தை, என் சித்தார்த்தின் ரத்தம். காலமெல்லாம் தனியாக  இருக்கவேண்டுமே என்ற என் எண்ணத்தை  மாற்ற கடவுள் இந்த குழந்தையாய் எனக்கு கொடுத்திருக்கிறார். என் குழந்தையாய் நான் நன்றாக வளர்ப்பேன். என்ற முடிவுடன் கிளம்பினாள்.

 

காரை நேராக ஸ்ரீயின் ஹோமிற்குச் சென்று சிறிதுநேரம் செலவழிதவளுக்கு மனம் சிறிது லேசாக வீட்டிற்கு கிளம்பினாள். வரும் வழியிலேயே,இனி, வெகு நாள்கள் நாள் கடத்த முடியாது. இப்போதே லேசாக அதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துவிட்டது. வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிவதற்கு முன் கிளம்பிவிட வேண்டும் என எண்ணி தன் தோழிக்குப் போன் செய்து பேசி, தான் இன்னும் பதினைந்து நாள்களுக்குள் வந்துவிடுவதாகவும், அதற்குத் தேவையான ஏற்பாட்டை செய்யும்படியும் சொன்னாள்.

 

வீட்டிலிருந்து எப்படி கிளம்புவது? என யோசித்தவள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டு அதையே செய்வது என்ற தீர்மானத்துடன் வீட்டிற்குச் சென்றாள். அன்று மாலை தேவகியிடம், “அத்தை நான் ஒரு பதினைந்து நாள் மாமா வீட்டிற்குப் போய் வரட்டுமா? என தயங்கி தயங்கி கேட்டதும், தேவகி அவளை ஆச்சரியமாக பார்த்தார்.

 

“என்ன மது திடீர்னு? நாங்களா போய் வான்னு சொன்னாலும் போக மாட்டாய். இன்னைக்கு நீயே கேட்கிறாயே?” என கேட்டதும், “இல்ல அத்தை இவருக்கு உடம்பு குணமாகிட்டா விரதம் இருப்பதாக வேண்டிக்கிட்டேன், இங்கே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். அதோடு வித்யாவுக்கும் பிரசவ நேரம் நானும் கொஞ்சம் அங்கே இருந்தால் அத்தைக்கு ஈசியாக இருக்கும் ” என தலையைக் குனிந்துக்கொண்டு சொன்னாள்.

 

“சித்தார்த் கிட்ட சொல்லிவிட்டாயா?” என்றார். நான் சொன்னால் அவர் எதாவது சொல்லுவார் அத்தை நீங்களே சொல்லிவிடுங்களேன்” என்றாள். தேவகி சிரித்துக்கொண்டே “சரி நான் அவனிடம் சொல்கிறேன். நீ என்னைக்கு கிளம்பற?” என்றார். “நான் நாளைக்குக் காலையிலேயே கிளம்புகிறேன்” என்று சொன்னாள்.

 

அன்று இரவு தேவகி சித்தார்த்திடம் சொன்னதும் சித்தார்த் மதுவைப் பார்த்தான். மது அவனைப் பார்க்காமல் உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள்.”சரிம்மா உங்க இஷ்டம்” என்றவன் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான். அறைக்கு வந்த மது ஊஞ்சலில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் அருகில் வந்தாள், சித்தார்த் பேசாமல் அமர்ந்திருக்க அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள். சித்தார்த் பேசாமல் அமர்ந்திருக்க அவன் குர்த்தாவில் சூடாக கண்ணீர் இறங்குவதை உணர்ந்தவன், “ஹே…!!! மது என்ன மது எதுக்கு அழற? நான் பேசவில்லை என்றா, நீ பதினைந்து நாள் இருக்கமாட்டாயே என்ற கவலை தண்டா. நீ தாரளமா போய் வா” என்றான்.

 

“சித்தூ… “என அவனை அணைத்துக்கொண்டு அழுது தீர்த்தாள் அவனது எத்தனையோ விதமான ஆறுதலும் அவளை அமைதிபடுத்தவில்லை. அவளை உள்ளே அழைத்துசென்றான். உள்ளே வந்தவள், சித்தார்த் சற்றும் எதிர்பாராத விதமாக, அவன் கழுத்தை வளைத்து முத்தங்களை அவன் முகம் முழுதும் இறைத்தாள். இரவு அவன் தன் அன்பையெல்லாம் வெளிக்காட்டிய போது, அவனிடம் முழுமையாக அடைக்கலம் கொண்டாள்.

 

மறுநாள் சித்தார்த் அலுவலகம் கிளம்பும் போதே அவனுடன் கிளம்பியவள், தன் அத்தை மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு  கண்கள் கலங்க அனைவரிடமும் பிரியா விடைபெற்று வீடுக் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே சித்தார்த்துடன் சென்றாள்.

 

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்

கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்

நினைவுகள் போல மறதியும் வேண்டும்

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -61

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—61   காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *