Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -epilogue 1

Sponsored

Shenba Ninnai Saranadainthen -epilogue 1

Epilogue- 1

*************************இரண்டு மாதங்களுக்குப் பிறகு***********************

“மது இந்த ஜூஸையாவது குடிம்மா, ஒண்ணும் சாப்பிடலைனா எப்படி? உனக்காக இல்லைனாலும் குழந்தைக்காக சாப்பிடுமா” என தேவகி மருமகளை கெஞ்சிக்கொண்டிருக்க, “அத்தை ப்ளீஸ் அத்தை எனக்கு ஒண்ணுமே சாப்பிட பிடிக்கவில்லை, எது சாப்பிட்டாலும், குமட்டுது அத்தை. ரொம்ப டயர்டா இருக்கு அத்தை” எனச் சொன்னாள்.

“ஐந்து மாதம் முடியும் வரை அப்படிதான்மா இருக்கும். சாப்பிடு இல்லன்னா நான் சித்தார்த்துக்குப் போன் செய்து வரச்சொல்லவா?” சற்று மிரட்டலாக சொல்ல, “வேண்டாம் வேண்டாம் நானே சாப்பிட்டுடறேன். உங்களையாவது கொஞ்சம் சமாளிக்கலாம். அவர் வந்தா நீ வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுன்னு சொல்லி என் வாயில் வச்சி திணிச்சிடுவார்” என தன் கணவனை குறை சொல்வதை போல அவனது அன்பை சொல்லிகொண்டே தன் அத்தை கொடுத்த ஜூஸை கண்ணை மூடிக்கொண்டு, மடமடவென குடித்து முடித்தாள்.

“எல்லோரும் என்னை இப்படி தாங்கி தாங்கி டெலிவரிக்குள்ள நான் நல்லா குண்டாகிட போறேன்” என்றாள். தேவகி சிரித்துக்கொண்டே, “மீராவும் இப்படிதான் புலம்பிட்டே இருப்பா” என மீரா, சுபாவின் கதைகளையும் சொல்லிகொண்டிருக்க, சித்தார்த் வந்து நின்றிருந்ததை கூட கவனிக்காமல் மது ஆர்வத்துடன் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

சிரித்துக்கொண்டே திரும்பிய மது, ஹாலில் இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்து சித்தார்த் தங்களையே கவனித்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு, “அட நீங்க எப்போ வந்தீங்க?” என கேட்டுக்கொண்டே எழுந்து வந்தாள்.
“நான் வந்தது கூட தெரியாமல் மாமியாரும் மருமகளும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கீங்க. டெலிவரிக்குள்ள நான் நல்லா குண்டாகிட போறேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தாயே அப்போதே நான் வந்துட்டேன்.”

 

“என்னடா சத்தம் கூட இல்லாமல் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தியா?” என தேவகி சிரிக்க. “ஆமாம் நீங்க ரெண்டு பேரும் உலக பொருளாதாரம் பத்தியா பேசிக்கொண்டிருந்தீர்கள்? நான் வந்து ஒட்டு கேட்க” என்றான்.

 

“இருங்க உங்களுக்குக் காபி கொண்டு வரேன்” என எழுந்து உள்ளே சென்றாள். தன் அம்மாவின் அருகில் வந்து அமர்ந்த சித்தார்த், “என்ன அம்மா? மருமகளை அப்படியே வச்சி தாங்கறீங்க?” என்றான் சிரிப்புடன். “பாவம்டா மது. ரொம்ப நல்ல பொண்ணு. பொண்ணுங்க இந்த மாதிரி நேரத்தில் தன் அம்மா கூட இருக்கணும் என்று ஆசைப்படுவாங்க. ஆனா இவளுக்கு நினைத்தாலும் முடியாதே. அதான் நானே அவளை என் பொண்ணு மாதிரி அவளுக்கு குறை தெரியாமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்றேன். அம்மாவுக்கு அடுத்த படியா கணவனோட அரவணைப்பு தான் எதிர்பார்ப்பாங்க. அதனால் நீ அவளை நல்லபடியா எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கோ. முடிந்த வரைக்கும் அவ கூட எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ இரு” எனச் சொல்லிக்கொண்டிருக்க சித்தார்த் தலையசைத்து கவனமாக கேட்டுக்கொண்டிருக்கும் போதே மது காப்பியை கொண்டுவந்து சித்தார்த்திற்கும், தேவகிக்கும் கொடுத்தாள்.

வாசலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டதும், மது வாசலை பார்க்க, அங்கே ஈஸ்வரனும், ராஜியும் வந்துக்கொண்டிருந்தனர். “அத்தை, மாமா வாங்க வாங்க” என மது வரவேற்க, சித்தார்த்தும், தேவகியும் எழுந்து வரவேற்றனர். “வாங்க உட்காருங்க. என்ன பேரன் என்ன சொல்றான்?”என தேவகி வித்யா ராஜேஷின் குழந்தையை விசாரித்தார். “மேகலா எப்படியிருக்காளாம்? செக்கப் போராளாமா?” என கும்பகோணத்தில் இருக்கும் மேகலாவையும் விசாரித்துக்கொண்டார்.

பொதுவான பேச்சு நடந்துகொண்டிருக்க, சித்தார்த்தின் தந்தையும் வந்து சேர்ந்தார். அனைவரும் பேசிக்கொண்டிருக்க, ஈஸ்வரன் மெல்ல ஆரம்பித்தார். “நம்ம மதுவுக்கும், ஐந்து மாதம் ஆக போகுது. ஏழாம் மாதமே வளைகாப்பு முடித்து கூட்டிக்கொண்டு  போகலாம் என்று இருக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க?” என்றார். ஏழாம் மாதமே வளைகாப்பு நடத்தி கூட்டிக்கொண்டு  போய் விட்டால், இதுல மூணு மாசம், குழந்தை பிறந்த பிறகு மூணு மாசம் சித்துவை விட்டு பிரிந்து இருக்கணுமா ? என மதுவும், இவ்வளவு நாள் மதுவை பிரிந்து இருக்கணுமா? என சித்தார்த்தும் நினைத்துகொண்டாலும் அந்த நேரத்தில் இருவருமே அதை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

“சரி சம்மந்தி நாங்க வீட்ல எல்லோரும் கலந்து பேசி நல்ல நாள் குறித்துவிட்டுச் சொல்கிறோம்” என்றார் சித்தார்த்தின் தந்தை.

 

இரவு மது கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க. சித்தார்த் லாப்டாப்பில் மூழ்கி இருந்தான். அதைக்கண்ட மது நான் இங்கே தூக்கம் வராமல் தவிச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு என்ன சார் அப்படியே லேப்டாப்பில் மூழ்கிட்டாரு, என நினைத்துக்கொண்டே எழுந்து சித்தார்த்தின் அருகில் சென்றாள். தன் அருகில் வந்து நின்றவளை “என்னடா தூங்கலையா?” என லப்டோப்பிலிருந்து கண்ணை விலக்காமல் கேட்டவனைப் பார்த்து, “இல்லைங்க தூக்கம் வரமாட்டேன்னுது” என்றாள் சோம்பலாக.

“ஒஹ்… அப்படியா.”என வேலையில் மூழ்க மது கோபத்துடன் அவன் லாப்டாப்பை மூடி தள்ளிவைத்தாள்.”ஏய்…மது என்ன செய்ற நீ. இரும்மா இந்த ஒரு மெயில் தான் பார்த்துவிட்டு வரேன்” எனச் சொல்ல சொல்ல கேட்காமல் மது நடந்துகொள்வதைப் பார்த்தவன் அவள் கையை பிடித்து அருகில் இழுத்தான். “என்னடா வாட்  ஹாப்பன்ட்  டு யு?” என்றான்.

“ஏன் சித்து நான் மாமா வீட்டுக்குப் போகபோறேன்னு தெரிந்து நீங்க ஒண்ணுமே பீல் பண்ணாமல் உட்கார்ந்து மெயில் பார்த்துக்கொண்டிருக்கீங்களே?” என கொஞ்சம் கோபத்தோடு கேட்டவளைப் பார்த்து “இதுக்குத்தானா இப்படி கோபித்துக்கொண்டாய்?எனக்கு மட்டும் ஆசையா? நீ ஏழாம் மாதமே அங்கே போய்விட. அப்பா என்ன சொல்றாங்கன்னு கேட்போம்.” என்றான் அவளுக்கு விளக்கமாக.

“நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நான் ஏழாம் மாதம் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன். உங்களை விட்டுட்டு எப்படி சித்து அவ்வளவு நாள் இருப்பேன்?” என்றவளை  புன்னகையுடன் அணைத்துகொண்டான். “எனக்குக்கூட உன்னை சீக்கிரம் அனுப்ப இஷ்டம் இல்லை மது.  உன் மனசுல ஆசை இருந்தா என்ன செய்றது என்று தான் நான் பேசாமல் இருந்தேன். நீயே போகமாட்டேன்னு சொல்லிட்ட இல்ல.டோன்ட் வொர்ரி டார்லிங் மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் ” எனச் சொல்லிக்கொண்டே கட்டிலில் அமர்ந்து தன் மீது சாய்த்துக்கொண்டு சிறிது  நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

பேசிக்கொண்டே தன் மீது சாய்ந்து உறங்கிவிட்டவளை நேராக படுக்க வைத்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டுத் தன் அப்பா அம்மாவிடம் பேச சென்றான். அரை மணி நேரம் பேசிவிட்டு அறைக்கு வந்தவன், மதுவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளை தன் கை அணைப்பில் வைத்தபடியே உறங்கிவிட்டான்.

 

மறுநாள் காலையில் சித்தார்த்தின் பெற்றோரும், அத்வைத், மீரா நால்வரும் கிளம்பி மதுவின் மாமா வீட்டிற்குச் சென்று பேசிவிட்டு வந்தனர். வீட்டிற்கு வந்ததும், தேவகி மதுவை அழைத்து , “மது நாங்க உங்க மாமா வீட்டிற்குப் போய் பேசிவிட்டு வந்தோம். நேத்ராவுக்கும் சீக்கிரமே கல்யாணம் வைத்துவிடலாம்னு முடிவு செய்ததால் கல்யாணம்  முடிந்து உன்னோட வளைகாப்பை வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டோம். அதனால் உனக்கு ஒன்பதாவது மாதம் தான் வளைகாப்பு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டோம். இதுல உனக்கு ஒண்ணும் சங்கடம் இல்லையே” என சிரித்துக்கொண்டே கேட்டதும், மதுவும், சிரித்துக்கொண்டே இல்லை என தலையை ஆடினாள்.

 

மதுவிற்கு ஐந்தாம் மாதம் வீட்டிலேயே பூமுடித்தனர்.ஸ்ரீ ராம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் அடுத்த இரண்டு மாதங்களில் ஸ்ரீ ராம்,நேத்ரா திருமணம் எளிமையான முறையில் முடிந்தது. நேத்ராவிற்கு கொடுத்த எந்தப் பொருளையும் ஸ்ரீ ராம் வாங்கிக்கொள்ளமாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டான். இதை அனைவரும் எதிர்பார்த்ததால் பொருட்களுக்குப் பதிலாக அந்த மதிப்பிற்குச் செக்காக ஹோமிற்கு கொடுப்பது போல கொடுத்துவிட்டனர். நகைகளை மட்டுமாவது வேண்டாம் எனச் சொல்லவேண்டாம் என அனைவரும் வருந்தி கேட்டுக்கொண்டதால் ஸ்ரீயும் அரைமனதாக சம்மதித்தான்.

மதுவை அனைவரும் தாங்காத குறையாக பார்த்துக்கொண்டனர். கணவனின் அன்பிலும் தன் புகுந்த வீட்டினரின் அரவணைப்பிலும், மது தாய்மையின் பூரிப்பிலும், இருந்தாள். ஒன்பதாம் மாதம் வளைகாப்பும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவர்களுடைய நண்பர்கள்,உறவினர்கள், மதுவின் நண்பர்களான, புதுமண தம்பதிகளாக லதாவும், சிவாவும் கூட வந்திருந்தனர். அனைவரின் மனமும், சந்தோஷத்தில் நிறைந்திருக்க , சித்தார்த் மதுவை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

மது வளைகாப்பு முடிந்து தன் மாமா வீட்டிற்கு கிளம்பும் போது, சித்தார்த்தை பிரிந்து செல்லவேண்டுமே என எண்ணி அழுதவளை, “என்னடா மது…. எதுக்கு அழற? நான் தினம் ரெண்டு வேளை அங்கே வந்து உன்னைப் பார்த்துக்க போறேன். நைட் மட்டும் இங்கே நம்ம வீட்டுக்கு வந்துவிட போகிறேன். உன்னை என் பக்கத்திலே வைத்துக்கொள்ளவேண்டும், இங்கேயே இருன்னு தான் சொல்லணும்னு நினைக்கிறேன். ஆனால்,  இந்த நேரத்தில் சித்தி சித்தப்பாக்கும்  உன்னை வச்சி  பார்த்துக்கணும்னு ஆசை இருக்கும், அவங்களோட மனதையும் நினைக்கணும் இல்லையா?” எனச் சொல்லி அவளை அணைத்து ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தான்.

சொன்னபடியே தினமும் காலையில் ஆபீஸ் செல்லும் முன் வீட்டிற்கு வந்துவிடுவான். மாலை ஆபீஸ் முடிந்து அடுத்த அரைமணி நேரத்தில் மதுவைப் பார்க்க வந்துவிடுவான். மதுவை அரைமணிநேரம் வாக்கிங் அழைத்துச்சென்று வருவான். நிறைய புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தான். அவளுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

டாக்டர் சொன்ன தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே மதுவிற்கு வேதனை ஆரம்பித்துவிட, ராஜேஷ், மதுவை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்லும் போதே தீபக் சித்தார்த்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்ல இவர்கள் சென்று சேர்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் சித்தார்த்தும் சற்று பதட்டத்துடனேயே வந்து சேந்தான். அலைப்புருதலுடன் நின்றிருந்தவனை, ராஜேஷும், தீபக்கும் சமாதானபடுத்திக்கொண்டிருக்க,தேவகியும் ,ராமமூர்த்தியும் வந்து சேர்ந்தனர்.

நேத்ராவும், அவளது சீனியர் டாக்டரும் மதுவிற்கு டெலிவரி பார்த்துக் கொண்டிருக்க, சற்றுநேரத்திற்கெல்லாம் நேத்ரா சந்தோஷத்துடன் வந்து “அண்ணா உனக்கு அழகா பையன் பிறந்திருக்கான். கங்கிராஜு லேஷன்ஸ்” என சித்தார்த்திற்கு கை கொடுக்க, அனைவரின் முகமும் சந்தோஷத்தை சுமந்திருக்க, கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, சித்தார்த்திற்கு வாழ்த்து சொல்ல, அவனுக்கோ எல்லை இல்லாத வானத்தை வசபடுத்திய சந்தோஷத்துடன், “நேத்ரா மது எப்படியிருக்கா? குழந்தையை பார்க்கலாமா?” என ஆர்வத்துடன் கேட்க, “ஒரு பத்து நிமிஷம் அண்ணா குழந்தையைக் குளிக்கவச்சிட்டு இருக்காங்க இப்போ கொஞ்சம் நேரத்தில் சொன்னதும் வந்து அண்ணியையும் குழந்தையையும் பார்க்கலாம்” எனச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

அடுத்து வந்த நிமிடங்களை பிடித்து தள்ளாத குறையாக நின்றிருந்தான் சித்தார்த், சற்றுநேரத்தில் சீனியர் டாக்டர் குழந்தையை கொண்டு வந்து சித்தார்த்திடம் கொடுக்க, சிறு பூவை போல கண்சிமிட்டி பார்த்த குழந்தையை பத்திரமாக வாங்கியவனின் கண்கள் கலங்க ஜூனியர் சித்தார்த்தைப் பார்த்தான். குழந்தையைத் தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு மதுவை காண அறைக்குச் செல்ல மற்ற அனைவரும் குழந்தையை பார்த்தபடி வெளியிலேயே நின்றுவிட்டனர்.

அறைக்குள் சென்ற சித்தார்த், கட்டிலில் சோர்ந்து போய் கண் மூடிபடுத்திருந்த மதுவின் அருகில் செல்ல, காலடி ஓசை கேட்டுக் கண்விழித்து சிரித்தவளின் தலையை பாசத்துடன் வருடியவன், “தேங்க்ஸ்டா மது. என்னைப் போட்டியில் ஜெயிக்க வச்சிட்டியே” என சிரித்தவன், மீண்டும் கண்களை சோர்வுடன் மூடியவளைப் பார்த்து, “என்னடா ரொம்ப கஷ்டபட்டியா? போதும்டா நமக்கு ஒரு குழந்தை” என மிகவும், சீரியசாக சொன்னவனைப் பார்த்து முறுவளித்தவள், “என்ன சித்து, நான் உங்க கிட்ட தோற்றது போல நீங்க என்னிடம் தோற்க வேண்டாமா?” என கேட்டதும். “நான் தான் எப்போதோ உன்னிடம் சரணடைந்துவிட்டேனே அதுக்கு அப்புறம் என்ன ஜெயிக்கறது, தோற்பது?” என அவள் தலையில் முட்டி நெற்றியில் முத்தமிட்டான்.

 

நாள்கள் வேகமாக நகர, குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாள் வந்தது. எல்லா ஏற்பாடும் முடிந்ததும் குழந்தையைத் தேவகி வாங்கி தொட்டிலில் இட்டு, “சித்தார்த் என்ன பேர் வைக்கபோற எல்லோரிடமும் சொல்லாமல் சஸ்பென்சா  வச்சிருக்க? வந்து குழந்தை காதில் பேரை மூணு முறை சொல்லுப்பா” என்றார். மதுவைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்தவன், மதுவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவள் கையை பற்றியவன்,குனிந்து குழந்தையின் காதருகில் சென்றதும், மதுவின் கரத்தை இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டு, ” அர்ஜுன், அர்ஜுன், அர்ஜுன்” என மூன்று முறை சொல்லிவிட்டு நிமிர்ந்தவன், மதுவின் கலங்கிய கண்களையும், முகத்தையும் பார்த்துவிட்டு அவளது தோளை பற்றி தன்னோடுச் சேர்த்து அணைத்துக்கொண்டான். மதுவும் தன்னை சமாளித்துக்கொண்டாள்.

மது மட்டும் அல்ல, அனைவருமே சற்று அதிர்ச்சியும், நெகிழ்ச்சியுமாக தான் இருந்தனர். விமலா கலங்கிய தன் கண்களை துடைத்துக்கொண்டார். “என்னப்பா ராஜேஷ் தாய்மாமா நீ வந்து சொல்லு” என அழைக்க ராஜேஷும் வந்து சொல்லிவிட்டுச் சித்தார்த்தின் தோளில் தட்டிவிட்டுத் தன் தங்கையை பார்த்துவிட்டுச் சென்றான். சித்தார்த்தே நிலைமையை உணர்ந்து சந்தோஷமாக பேசி சூழ்நிலையை இயல்பாக்கினான். வெளிப்பார்வைக்கு மது சிரித்தபடி இருந்தாலும், அவள் மனதில் இருந்த வருத்தத்தை சித்தார்த், உணர்ந்தான்.

 

மருமகளின் வேதனையையும், மகனின் நிலையையும் உணர்ந்த தேவகி, “மது, குழந்தையைத் தூக்கிக்கொண்டு நீ ரூமுக்குப் போம்மா” என்றதும், மதுவிற்கும் அந்த நேரம் தனிமை வேண்டி இருக்க ஏதும் சொல்லாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு ரூமிற்குச் சென்றாள். அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சித்தார்த்தும் எழுந்து மதுவின் ரூமிற்குச் சென்றான்.

விமலா தேவகியிடம், “சித்தார்த் மாதிரி ஒரு பிள்ளை இருக்க கொடுத்து வைத்திருக்கணும் அக்கா. எத்தனைப் பேருக்கு இப்படி ஒரு மனசு வரும்? மதுவையும் அனுசரித்துக்கொண்டு, அவளை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காமலும் எவ்வளவு நல்லா வச்சிருக்கான்?அவளுக்கு இப்படி ஒரு புருஷன் கிடைக்கணும்னு தான் என் பிள்ளையை அந்தக் கடவுள் கூட்டிக்கொண்டார் போல” என கண்கலங்க நெகிழ்ச்சியுடன் சொல்ல, தேவகி அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

அறைக்கு வந்த சித்தார்த் சோர்வுடன், குழந்தையை பார்த்தபடி அமர்ந்திருந்தவளை அருகில் அமர்ந்த சித்தார்த், “மது” என்றதும் அவன் மீது சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதவளை ஆறுதலுடன் தட்டிக்கொடுத்தான். “சாரி மது, உன்னை என்னால் புரிந்துக்கொள்ள முடியுதுடா. கொஞ்சம் நாளைக்கு உனக்குக் கஷ்டமா தான் இருக்கும். ஒருமுறை நான் விமலா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அர்ஜுன் இறந்தபோது அவன் சொன்னதை எல்லாம்  என்னிடம் சொன்னார்கள். அதில் நானே உனக்குப் பிள்ளையா பிறப்பேன்னு அர்ஜுன் சொன்னதாகவும் சொன்னாங்க. அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். நமக்கு ஆண் குழந்தை பிறந்தால் நிச்சயம் அர்ஜுன் பெயர் தான் வைக்கவேண்டும் என்று அதனால் தாண்டா” என்று தான் மார்பில் முகம் புதைத்து விசும்பிக்கொண்டிருந்தவளைப் பார்க்க, மது நிமிராமல் இருக்கவும், “புரிஞ்சுக்கடா” என்றவனை, அணைத்துக்கொண்டவள், “புரிந்து கொண்டேன் சித்து. நீங்க இந்த பேர் வைப்பீங்கன்னு நான் நினைத்தே பார்க்கவில்லை அதனால் தான் இப்படி அழுதுட்டேன் சித்து. இனி, அழமாட்டேன்” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்து சிரித்தாள்.

 

“அப்புறம் இன்னொரு விஷயம் கூட சொல்லணும் விமலா அம்மாவையும், அப்பாவையும் நான் நம்ம கூடவே இனி, கூட்டிக்கொண்டு போய்டலாம்னு இருக்கேன். முதலிலேயே சொன்னால் ஒத்துக்க மாட்டாங்க. இப்போ நம்ம ஜூனியர் வந்தாச்சு, அதனால் கேட்டால் முதலில் தயங்கினாலும், பிறகுக் கண்டிப்பாக சம்மதிப்பாங்க. நீ என்னடா சொல்ற?” என மதுவை கேட்டான்.

“சித்து என்னை மேலும் மேலும் கடனாளியாக ஆக்கறீங்க சித்து. இதுக்கெல்லாம் நான் எப்படி..?” என்றவளை இடைமறித்து, “அதைப் பத்தி நீ கவலை படாதே நான் எப்படி வசூல் பண்ணிக்கணும் என்று எனக்குத் தெரியும்.ஓகே” என அவள் முகம் நோக்கி குனிந்தவனை அனுமதித்தாள். நிமிர்ந்தவன் வெட்கத்தில் சிவந்து மலர்ந்து இருந்தவளின் முகம் பார்த்து புன்னகையுடன் தன் கை அணைப்பில் அவளைக் கொண்டுவந்தான்.

 

அவள் மூக்கை  பிடித்து ஆட்டியவன், “சரிடா மது, நாளைக்கு நாள் நல்லாயிருக்காம். நீயும் நம்ம ஜூனியரும், நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்திடுவீங்க. ஓகே. நான் இப்போ கிளம்பறேன்” என அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அனைவருடனும் கிளம்பினான்.

 

குழந்தைக்கு ஆறுமாதம் இருக்கும் போது, சித்தார்த் சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான். “அம்மா அப்பா ஒரு சந்தோஷமான விஷயம், நம்ம கம்பனிக்கு லண்டன் கம்பனி கூட ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இருக்காங்க. நல்ல லாபம் வரும். நாம எதிர்பார்த்ததைவிட நல்ல பெயர் கிடைக்கும்.” எனச் சொல்ல அனைவரும்  சந்தோஷம் அடைந்தனர். “ஆனால், நான் லண்டன் போகவேண்டியது வரும். குறைந்தது, நாலு வருஷமாவது இருக்கவேண்டியதாக இருக்கும், என்றதும் மதுவிற்குக் கவலையாக இருந்தது.

“நல்ல விஷயம் தான் அதுக்காக குடும்பத்தை விட்டுவிட்டு இத்தனை வருஷம் போகணுமாடா” என்றார் சித்தார்த்தின் தந்தை. “ஆமாம் சித்தார்த் நல்லா யோசிச்சிக்கோ. மதுவையும் குழந்தையும் இங்கே எப்படி தனியாக இருப்பாங்க. நீயும் எப்படியிருப்பாய்” என்றார் தேவகி.

“நான் எப்போ சொன்னேன் மதுவை விட்டுவிட்டுப் போகிறேன் என்று, நான் போனால் கண்டிப்பாக மது அர்ஜுனை விட்டுவிட்டுப் போக மாட்டேன்” என மதுவைப் பார்த்துக்கொண்டே சொல்ல அவ்வளவு நேரம் கவலையுடன் இருந்த மதுவின் முகம் புன்னகையாக மாறியது. அதன் பிரதிபலிப்பாக சித்தார்த்தின் முகமும் புன்னகையால்விகசித்தது.

 

“எப்படி சித்தார்த் சின்ன குழந்தையை கூட்டிக்கொண்டு மது எப்படிப் பார்த்துக்கொள்ள முடியும்?” என் மீரா கேட்டதும், சித்தார்த் , “அப்பா நான் முதலிலேயே உங்களிடம் பேசியது தானே, விமலா அம்மாவையும், சந்துரு அப்பாவையும் நம்மோடு கூட்டிக்கொண்டு வரலாம் என்று. நீங்களும் சம்மதம் சொல்லி இருந்தீங்களே. இப்போ அவங்களோட ஹெல்ப்பை தான் நான் கேட்க போகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.

“நீ முதலில் அவர்களிடம் பேசு சித்தார்த், அவர்களுக்குச் சம்மதம் என்றால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனையை இல்லை” என்றார் சித்தார்த்தின் தந்தை. அதன்படி அன்று மாலையே கிளம்பி சித்தார்த்தும், மதுவும் கிளம்பி சென்று இருவருடனும் பேசி அவர்களை சம்மதிக்க வைத்து,தங்களுடன் லண்டன் அழைத்து செல்ல அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்தனர்.

லண்டன் கிளம்புவதற்கு முன் நாள் அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டிருந்த மது ஒரு புன்னகையுடன் எனக்காக எவ்வளவு செய்திருக்கீங்க சித்து. ஆரம்பத்தில் நான் உங்களை எப்படியெல்லாம் காயபடுத்தி  இருக்கேன்? அதெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் என்னை எப்படியெல்லாம் பார்த்துகொண்டீர்கள் என எண்ணிக்கொண்டு பால்கனியில் வந்து நின்றாள்.

சற்றுநேரத்தில் “மது டார்லிங் மணி 12 இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாய்?” என கேள்வியுடன் தன்னை நோக்கி வந்த தன் கணவனைப் பார்த்து புன்னகைத்தாள். அருகில் வந்தவன், “என்னடா மலரும் நினைவுகளா?” என கேட்டதும், அவன் மீது சாய்ந்துக்கொண்டு, “ம்ம்…” என்றாள்.

 

அவளை அணைத்துக்கொண்டவன், “என்னடா நினைத்தாய்?” என்றான். “எனக்கு இப்படி ஒரு அழகான சந்தோஷமான குடும்பத்தையும்,சொந்தங்களையும் கொடுத்த கடவுளுக்கு மனதார நன்றி சொல்லி கொண்டிருந்தேன்.  எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவங்களே என்னோட சொந்தமா இருக்கணும் என்று வேண்டிக்கொண்டேன்.”

மதுவின் கண்கள் கலங்குவதை போலிருக்க பேச்சை மாற்ற எண்ணிய சித்தார்த், “அடடா…. இப்போ என்ன செய்வது? இப்படி மாட்டிக்கொண்டேனே?” என தலையில் கை வைத்து புலம்புவதை கேட்ட மது, “என்ன, விஷயம் இப்படி புலம்பறீங்க?” என்றாள்.

“இந்த ஜென்மத்துல தான் நீ வந்துட்ட. அடுத்த ஜென்மத்திலாவது ஒரு நல்ல அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கலாம்னு நினைத்தால்” என சித்தார்த் சொல்லி முடிக்கும் முன் அவன் மீது சரமாரியான தாக்குதலை வீசினாள்.

“என்னைவிட நல்ல பொண்ணா வேண்டுமா உங்களுக்கு?” எனச் சொல்லி சித்தார்த் நெஞ்சிலே ஒரு குத்துகுத்த, “ஏய் ராட்சஷி, குத்தாதடி என் மது டார்லிங்கை நான் பத்திரமாக அங்கே வைத்திருக்கேன். அவளுக்கு வலிக்க போகுது” எனச் சொன்னதும், அவனை கோபபார்வைப் பார்க்க முயன்று முடியாமல் சிரித்துகொண்டே, “சித்து” எனச் சொல்லிக்கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள். சிரித்துக்கொண்டே தன்னவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

 

 

 

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உன்னக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும் ஒன்றாய்  ஆக ஆசைதான்

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -61

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—61   காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *