Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -epilogue 2

Sponsored

Shenba Ninnai Saranadainthen -epilogue 2

EPILOGUE—II

 

****************ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு**************

 

காலையில் எழுந்து குளித்து பூஜையை முடித்துகொண்டு  தங்கள் அறைக்கு வந்த மது, கட்டிலில் சித்தார்த் நெஞ்சின் மீது இரண்டு வயது வைஷ்ணவி படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அர்ஜுன் சித்தார்த்தின் மீது காலை போட்டுக்கொண்டு  கழுத்தைக் கட்டிக்கொண்டு படுத்திருந்தான். மூவரும் படுத்திருந்ததைப் பார்த்து புன்னகையுடன் அருகில் வந்த மது, “அர்ஜுன் கண்ணா எழுந்துக்கோ, உங்களை எழுப்பி விட்டதும் இங்கே வந்து அப்பாகூட படுத்தாச்சா? எழுந்துகோங்க பார்ப்போம்” என மகனை தூக்கிக் கொஞ்சி கொண்டே எழுப்பியபடி கன்னத்தில் முத்தமிட, “அம்மா இன்னைக்கு லீவ் தானே இன்னும் கொஞ்சநேரம் ப்ளீஸ்”, என்ற மகனை “லீவ் தான் ஆனால், இன்னைக்கு நிறைய வேலை இருக்குடா தங்கம்ஸ். குட் பாய் எழுந்துகோங்க. போய் குளிச்சிட்டு வாங்க கோவிலுக்கு கிளம்பணும்” எனச் சொன்னதும் “சரி” என்றபடி எழுந்து செல்லும் மகனைப் பார்த்து சிரித்தபடி தங்கள் மகளை தூக்கினாள்.

“வைஷு டார்லிங், குட் மார்னிங்” என குழந்தையைத் தூக்கி சொல்ல, அர்ஜுனை எழுப்பிய சத்தத்தில் பாதி உறக்கம் கலைந்த குழந்தை இப்போது முழுதுமாக விழித்தெழுந்து மதுவைப் பார்த்து அழகாக சிரித்தாள். கன்னத்தில் முத்தமிட்டபடி “என் வைஷுகுட்டி சமத்துகுட்டி. அம்மா எழுப்பினதும் எழுந்துட்டாங்களே. நாம பிரஷ் பண்ணிட்டு கீழே போகலாமா?” என கேட்டுக்கொண்டே குழந்தையைத் தூக்கிக்கொண்டு பிரஷ் செய்யவைத்து கீழே அழைத்து செல்லும் முன், “சித்து சித்து எழுந்திருங்க. நான் குழந்தைகளை ரெடி பண்ணிட்டு வரேன்” என குரல் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

குழந்தைகளை அவர்கள் அறைக்கு அழைத்து சென்ற மது, குளிக்கவைத்து கொண்டு இருக்கும் போது அங்கு வந்த மீரா, “நீ போய் தயாராகு மது, நான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன். நேரம் ஆகுதே எட்டு மணிக்குப் பூஜை” எனச் சொல்ல மது, “இதோ போறேன் அக்கா. அவர் வேற இன்னும் எழுந்துக் கொள்ளவில்லை” எனச் சொல்ல.”அப்போ முதலில் அங்கே போய் திருப்பள்ளிஎழுச்சி பாடு” என சிரிக்க மதுவும் இணைந்து நகைத்தபடி தங்கள் அறையை நோக்கி சென்றாள்.

அறைக்குள் வந்த மது சித்தார்த் எழுந்துகொள்ளாமல் காலையில் எழு  மணி வரை போர்வையைத் தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் சித்தார்த்தைப் பார்க்கையில் மதுவின் மனதில் முதல் நாளிரவு அவர்களது திருமண நாள் கொண்டாட்டங்கள் நினைவிற்கு வந்தது.

 

இரவில் எப்போதும் நேரம் காலம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் சித்தார்த்,  திருமண நாளன்று எப்போதும் பன்னிரண்டு மணிக்கு வாழ்த்துவதை வழக்கமாக கொண்டவன் இன்று உறங்குவதை அதிசயமாகப் பார்த்து அவன் கன்னத்தில் இதழ்களைப் பதித்து வாழ்த்துத் தெரிவித்ததும் அடுத்த நொடியே அவன் கரங்களால் தூக்கப்பட்டு அவன் மார்பில் கிடந்ததையும் நினைக்கையில் பரவசம் பெருகியது.

 

மது “அதானே பார்த்தேன் எப்போதும் என்ன தூங்க விடாம படுத்துவீங்க தூங்கற மாதிரி நடிக்கறீங்களா?” என்று செல்லக் கோபத்துடன் கூறினாள்.

 

சித்தார்த், “அப்படி நடிச்சதனால தானே கன்னத்தில கிடைச்சிருக்கு” எனச் சொல்ல, மது, “என்னமோ ஒண்ணுமே தராத மாதிரி சொல்றீங்க நடிக்கலைனா எதுவும் கிடைக்கதாக்கும்?” என்று கேட்டுவிட்டு அவன் கன்னத்தோடுக் கன்னத்தைப் பொருத்திக்கொள்ள. சித்தார்த், “கிடைக்கும் ஆனால், கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டு இல்ல வாங்கணும்,  இப்போ தானா தேடி வருதே”  என்றதும் முகம் சிவக்க மார்பில் முகம் புதைத்தவளின் முகத்தை நிமிர்த்தி “ஹேப்பி வெட்டிங் டே பொண்டாட்டி” என்று அவள் கண்களுக்குள் பார்த்து காதலுடன் கூறிகொண்டே  அவன் கைகளை உடல் முழுவதும் பரவட்டான்.

 

அதற்குப் பிறகுச் சளைக்காமல் அவனுக்கு ஈடு கொடுத்ததும், காலை இரண்டு மணி வரை கொஞ்சலும் அர்த்தமற்ற பேச்சுக்களால் களிந்ததையும் எண்ணிப் பார்த்தவாறே புன்னகையுடன் நின்றிருந்தவள், சுய நினைவிற்கு வந்து, “சித்து இப்போ எழுந்துக்க போறீங்களா?  இல்லையா காலைல சீக்கிரம் எழுப்பிவிடு குளிச்சு கோவிலுக்குப் போகணும் அப்புறம் ஆஷ்ரமம் போகணும் இப்படியெல்லாம் சொல்லிட்டு இன்னும் என்ன தூக்கம்” என்று இடுப்பில் கை வைத்தபடி  பொய் கோபத்துடன் மிரட்டலாகக் கேட்டாள்.

 

அப்போதும் அவன் அசையாமல் தூங்குவதைப் பார்த்து, “எத்தனை முறை எழுந்துக்க சொல்றேன். உங்களை” என்று சொல்லிகொண்டே அருகிலிருந்த வாட்டர் ஜக்கை எடுத்து அவன் மேல் அப்படியே ஊற்றினாள். அலறியடித்துக் கொண்டு எழுவான் எனப் பார்த்தால் அதே நிலையிலிருக்க போர்வையை விலக்கிப் பார்த்ததும் தலையணைகளை அடுக்கி வைத்து  விட்டு  அவன்  முன்பே எழுந்திருப்பது தெரிந்தது.

 

மது, “சித்து எங்கே இருக்கீங்க?”  என்று சொல்லியபடியே கண்களால் தேட கைகளைக் கட்டியபடி சுவற்றில்  சாய்ந்து  நின்று கண்களில் குறும்புடன், “ஹாய் பொண்டாட்டி என்ன காலைலயே தண்ணி ஊத்த  வந்துவிட்டாயா?  இந்த வேலையெல்லாம் தீபக், சுரேஷ்  ரெண்டு பேர் கிட்ட வச்சுக்கோ என்னை ஒண்ணும் பண்ணமுடியாது” என்று காலரைத் தூக்கிவிட்டவாறு அவளருகில் வந்தான்.

 

மது சித்தார்த்தை முறைக்க முயன்றும் முடியாமல், அவன் குறும்பையும் சிரிப்பையும் ரசித்தபடி, “ரொம்ப நினைப்புதான், நான் உங்க மேலே தண்ணி ஊத்தினது மறந்து போச்சா?” என சிரித்துக்கொண்டே கேட்டதும், “அதெப்படி மேடம் மறக்கும், அப்போ தான் ஏமாந்துட்டேன். இன்னும் அப்படியே இருப்பேனா?” என அருகில் வந்தவனை

 

“நீங்க குளிச்சாச்சா? நான் இவ்ளோ நேரம் சொல்லிட்டே இருக்கேனே எதுக்கு இப்படி தலையணை எல்லாம் போட்டுச் செட் பண்ணி வச்சிருக்கீங்க?” என்று பொய் கோபத்துடன் கேட்க சித்தார்த் அவளருகில் மேலும் நெருங்கி இடையில் கையைப் போட்டு இருக்கியவாறு “என் பொண்டாட்டி கோபத்தில ரொம்ப அழகா இருப்ப அதுக்குத் தான் இந்த செட்அப். கல்யாண நாள் அதுவுமா தூங்குவேனா ஹனி?” என்று கேட்டு அவள் நெற்றி, கண்கள், கன்னம் என்று உதடுகளைப் பரவ விட்டான்.

 

அவனைப் பிடித்து தள்ளியவாறே மது, “கோவிலுக்குப் போகணும்னு சொல்றேன் அதைவிட்டுட்டு என்ன பண்றீங்க? நைட் ரெண்டு மணி வரைக்கும் கொடுத்ததெல்லாம் போதலையா?” என்றாள்.

 

மேலும் இறுக்கிப் பிடித்து இதழ்களில் முத்தமிட்டு, “எப்படிப் போதும் காலைல நீ இப்படி பூபாளம் பாடி எழுப்பறதுக்குப் பதிலாக குழந்தைகளை  எழுப்பும் போது கொடுத்தது போல கொடுக்க வேண்டியது கொடுத்து எழுப்பிருந்தா நான் பேசாம ரெடி ஆகியிருப்பேன்  இல்ல” என்று மேலும் உதடுகளை முகமெங்கும் பரவ விடத் தொடங்கினான்.

 

மது, “சித்து கோயிலுக்குப் போகணும் கிளம்புங்க உங்களுக்கு இதே வேலையாப் போச்சு” என தள்ளிவிட, “அடடடடா…. இதென்னடா இது சந்தைக்குப் போகணும் என்ற கதையா கோவிலுக்குப் போகணும் கோவிலுக்குப் போகணும்னு விடாம புலம்பற. காலைல மனுஷனைக் கொஞ்சம் ரொமான்ஸ் மூட்லயிருக்க விடமாட்டீங்களே” என்றவனைப் பார்த்து. “எல்லாம் இருந்தது போதும், இப்போ கோவிலுக்குப் போகணும், கொஞ்சம் பக்தியா கிளம்புவோமா” என கேட்டுக் கொண்டிருக்கும் போது.

 

“அம்மா” என்ற அழைப்பில் திரும்பிய மது கதவருகில் வந்து நின்ற குழந்தைகளைப் பார்த்து சிரித்தபடி, “அடடா என் செல்லம்ஸ் ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா?” என புன்னகையுடன் கை நீட்டி அழைக்க,  அர்ஜுன் நீல

நிற ஷெர்வானியில்,  தன் தங்கையை பொறுப்புடன் பத்திரமாக ஒரு கையால் தன் தங்கையின் கையை பிடித்துக்கொண்டு மறு கையால் தன் தங்கையின் பாவாடையை நடந்து வரும் போது தடுக்காத வகையில் லேசாக தூக்கி பிடித்துக்கொண்டு வர. குட்டி தேவதை போல சிவப்பு நிற பட்டுப் பாவாடையில் தன் பிஞ்சு கால்களால் அடி மீது அடி வைத்து அரிசி பல் தெரிய சிரித்தபடி  நடந்துவர, இருவரும் அதை ஆசையுடன் பார்த்து ரசித்தனர்.

 

“ஹே வைஷு டார்லிங் வெளியே கிளம்ப ரெடி ஆகியாச்சா?” என சித்தார்த் குழந்தையைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அர்ஜுன், தன் கையிலிருந்த ரோஜாவை மதுவிடம் கொடுத்தபடி, “அம்மா, அப்பா ஹாப்பி வெட்டிங் டே” எனச் சொல்ல, மது “தேங்க்ஸ் கண்ணா” என்றபடி பூவை வாங்கிக்கொண்டாள்.  வைஷுவும் தன் மழலையில் , “ஹாப்பி வெட்டிங் டே” என்றதும், சித்தார்த் சிரித்தபடி, “ஹா…. நம்ம குட்டிமாக்கு எப்படி தெரியும்?” என ஆச்சர்யமாக கேட்பது போல கேட்டதும், “பெம்மா சொன்னாங்க” எனச் சொல்லி சிரிக்க, “வள்ளுவர் சும்மாவா சொன்னாரு, குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ ன்னு” எனச் சொல்லியபடி தன் குழந்தைகளை முத்தமிட்டு “நீங்க ரெண்டு பேரும் கீழே இருங்க ட்வென்டி மினிட்ஸ்ல அம்மாவும் அப்பாவும் வந்து விடுகிறோம்” என குழந்தைகளை அனுப்பிவைத்தான்.

அவர்கள் பின்னாலேயே சென்ற மதுவை கையை பிடித்து உள்ளே இழுத்தவன் கதவை மூடிவிட்டு, “மேடம், எங்கே மேடம் என்னோட கிப்ட்?”என்றான். “இப்போவே தரணுமா? நீங்க குளிச்சிடீங்களே” எனச் சொன்னவளைப் பார்த்து “சோ வாட்?” எனவும் “ஓகே” என தோள்களை குலுக்கியவள் தன் வார்ட்ரோபிலிருந்து ஒரு பார்சலை எடுத்து, “சித்து உங்களுக்கு நம்ம வெட்டிங் டே கிப்ட்” என்று பார்சலை நீட்ட, “ஹனி வருஷா வருஷம் ஸ்பெஷலா கொடுத்து அசத்துவியே இந்த வருஷம் என்ன?” என்று கேட்டுக்கொண்டே பார்சலை பிரித்தபடி, “என்ன   ஹனி லேடீஸ்க்குத்தான் எல்லா கலரும் போட்டு புடவை வந்திருக்கு எனக்கு என்ன எவ்ளோ கலர் மிக்சிங் சர்ட்” என்றான்.

 

மது, “சொல்றேன் அந்த பாக்கெட்குள்ளே நீங்க கேட்ட ஸ்பெஷல் கிப்ட் இருக்குப் பாருங்க இருங்க இருங்க கொஞ்சம் தள்ளி வச்சுப் பிரிங்க” என்றாள்.

 

சித்தார்த் சிரித்துக்கொண்டே, “எதுக்கு இவ்ளோ தள்ளி வச்சு பிரிக்கணும்? பாம் வச்சிருக்கற மாதிரி” என்று கிண்டலடித்தவாறு அதைத் திறப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த பட்டனை அழுத்த பட்டென்று மெல்லிய சத்தத்துடன் வெடித்த பார்சலிலிருந்து பல வண்ணப் பொடிகள் அவன் சட்டை, கைகள் முகம் முழுக்க சிதறின.

ஒரு கணம் திகைத்த சித்தார்த், சிரிப்புடன், “என்னடா மது நான் மல்ட்டி கலர் ஷர்ட் கேட்டா, நீ என்னோட ஒய்ட் ஷர்ட்டை  கலர்புல்லா மாத்திட்ட” என கேட்டதும்,

 

அருகில் வந்த மது, “நீங்க என் மேல வச்சிருக்கற காதலுக்கு இளம்சிவப்பு……, உங்களோட தூய்மையான எல்லாருக்கும்  நல்லது செய்யணும்னு நினைக்கிற கருணை மனசுக்குப் பச்சை…., உங்களோட அமைதிக்கும் பொறுமைக்கும் நீலம்…., குடும்பத்து மேல பாசத்தை பொழியற உங்க அன்பு மனசுக்குப் பிங்க்…., ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழற உங்க ரசனைக்கு கிரீன்…., என்னோட  மனதை  மாஜிக் மாதிரி உங்க இஷ்டத்துக்கு மாத்தறீங்களே அதுக்குப் பர்ப்பள்…., மொத்தத்தில் இப்போ இந்த வெள்ளை  சட்டையில் இத்தனை நிறமும் சேர்ந்து ஒரு அழகை ஏற்படுத்தி இருக்கே அது போல உங்க  இத்தனை குணமும் சேர்ந்து உங்கள் வெள்ளை  மனதின் அழகை என்னோட மனசுல ஆழமா பதிய வச்சிருக்கீங்களே”  என்று சொல்லியபடியே  அவன்  வெண்ணிற  சட்டையில்  ஏற்கனவே  தெறித்திருந்த  வண்ணங்களை  மேலும்  பரவச்செய்தாள்.
சித்தார்த் அவள் பேச்சில் நெகிழ்ந்திருந்தாலும் அவளை மேலும் சீண்ட, “என் பொண்டாட்டி செம ரொமான்டிக் மூட்லயிருக்கா போல இன்னும் எவ்வளவோ கலர் இருக்கே அதை மட்டும் ஏண்டா  விட்டுட்டே?” என்று அவள் கன்னங்களில் வண்ணத்தை பூசியவாறே கேட்டான் .

மது அவன் கரங்களை விலக்கி, “இப்படியே சொன்னா என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும் இப்போ நான்  கோவிலுக்குப் போற மூட்லயிருக்கேன் அதனால எதுவும் சொல்லமாட்டேன் போய் சீக்கிரம் ரெடி  ஆகுங்க” என்றாள் மிரட்டலாக.

சித்தார்த் அவளை விடாமல் பிடித்து, “ஹனி  நான் ரெடியாகிதானேயிருந்தேன் இப்படி கலர்புல்லா மாத்தி இன்னொரு தடவை குளிக்க சொல்றியா? செய்யறதெல்லாம் செஞ்சுட்டு அப்புறம் கோவிலுக்கு  போகணும் சீக்கிரம் கிளம்புங்கன்னு மிரட்டறது” என்று பெருமூச்சோடு கூறியவன், “இன்னைக்கு  கைக்குள்ளே வச்சுக்கணும் போலிருக்கு ஆனா கோவிலுக்கும் அஷ்ரமத்துக்கும் போகணுமே  அதுக்கப்புறம் வந்தே கைக்குள்ளே வச்சுக்கறேன்” என்று சொல்லி அவள் கன்னங்களை சிவக்கச்செய்து விடுவித்தான்.

 

அவசர அவசரமாக குளித்துவிட்டு இருவரும் தயாராகி கீழே வந்து, விமலா சந்த்ருவிடமும் , தன் பெற்றோரிடம் ஆசிவாதம் வாங்கிக்கொண்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றுவிட்டு, நேராக ஆஷ்ரமத்திற்குச் சென்றனர். சித்தார்த் அங்கிருந்த அனைத்துக்குழந்தைகளுக்கும், புது ட்ரெஸ்ஸும், விளையாட்டு பொம்மைகள், புத்தகங்கள் என வாங்கிக் கொடுத்துவிட்டு, அங்கேயே தங்களது, காலை உணவையும் முடித்துக்கொண்டு, ஸ்ரீயின் வீட்டில் சிறிதுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 

ஸ்ரீ, நேத்ராவின் இரண்டு வயது மகள் தியாவுடன், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மது, “அண்ணா நீங்களும் கிளம்பி வாங்களேன்” என்றாள். ஸ்ரீ, “இல்லை மது எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ நேத்ராவையும்,தியாவையும் கூட்டிக்கொண்டு  போங்க, நான் மதியம் வந்துவிடுகிறேன்” என்றான். “அப்போ நீ வா நேத்ரா” என சித்தார்த் அழைத்ததும், “இல்லை அண்ணா நீ குழந்தையை வேணும்னா கூட்டிக்கொண்டு  போங்க, நான் அவரோடவே வரேன்” எனச் சொல்ல, சித்தார்த் புன்னகையுடன் தன் தங்கையை பார்த்தான்.

“மது தியாவை கூட்டிக்கோ, அவங்க ரெண்டு பேரும் ஜோடியா வரட்டும்” என்றதும், மது சிரிப்புடன், “அண்ணா எப்படி எங்க நேத்ரா, நீங்க எப்படிப் பயந்தீங்க? இப்போ பாருங்க அவ எவ்வளவு பொறுப்பா ஹோமையும் பார்த்துக்கொண்டு, ஹாஸ்பிட்டலுக்கும்  போய்ட்டுவந்து குழந்தை, வீடு எல்லாத்தையும் பார்த்துக்கொள்வதோடு இல்லாமல் உங்களையும் சேர்த்து கவனித்துக்கொள்கிறாள்” என்றதும். ஸ்ரீ புன்னகையுடன், “ம்ம்…நேத்ரா யாரு ஸ்ரீயோட மனைவி இல்லையா?” என்றதும், நேத்ரா, “போதும் போதும், நிறுத்துங்க” என்றாள்.

 

சிறிதுநேரம் பேசிவிட்டு இருவரையும் நேரத்தோடு கிளம்பி வரச்சொல்லிவிட்டு குழந்தைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினர். அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் அத்தை மாமா ராஜேஷ், வித்யா இருவரும் தங்கள் குழந்தைகள், கார்த்திக், ஸ்ருதியுடனும், தீபக், மேகலா தங்கள் குழந்தைகள் சுவாதி,ஷ்யாமுடனும் வந்தனர். “வாங்க வாங்க இதான் வரும் நேரமா?” என சித்தார்த் கேட்க, மது வித்யா மேகலாவை “என்னடி சீக்கிரம் வரக்கூடாது” என்றாள்.

தீபக் சித்தார்த்தின் கேள்விக்குப் பதிலாக, “எங்கேப்பா இந்த லேடிஸை கிளம்ப சொன்னா அப்போதான் ஏங்க, இந்த புடவை நல்லாயிருக்கா அந்த புடவை நல்லாயிருக்கான்னு கேட்டு நம்ம வாய்லயிருந்து ஒ… நல்லாயிருக்கே உன்னை விட வேற யாருக்கு இவ்ளோ பொருத்தமா இருக்கும்னு பொய் வர வைக்கும் வரைக்கும் நம்மளை விடமாட்டாங்க” எனச் சொல்லி மேகலாவிடம் முதுகிலேயே ஒரு குத்து வாங்கிய பின்தான் பேசாமல் இருந்தான். மழலை பட்டாளம் அனைத்தும் கிளம்பிதோட்டத்திற்குச் சென்றுவிட, பெண்கள் அனைவரும் கிச்சனிலும், ஆண்கள் அனைவரும் ஹாலிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வீடே கலகலப்பாக இருந்தது.

 

சுரேஷ், கீதாவையும், தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வந்தான். “என்னடா சுரேஷ், இன்னும் ஜீவா, அண்ட் ரமேஷ் பாமலி காணோம்?” என தீபக் கேட்டதும் சரியாக அதேநேரம் உள்ளே வரவும், சரியாக இருந்தது. “இதோ வந்தாச்சே, ரெண்டு பேரோட பசங்களும் ஒரே ஸ்கூல்ல தானே படிக்கிறாங்க. இன்னைக்குப் பரென்ட் மீட்டிங் அதுக்குப் போய் வராங்க” என அவர்களையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருக்க. “ஹாய், ஹாய், ஹாய்” என கையசைத்தபடி அஷ்வந்த் வந்து இறங்கினான்.

“என்னடா அஷ்வந்த் இன்னைக்கும் ஹாஸ்பிட்டல் போய் வருகிறாயா?” என்றான் சுரேஷ். “ஆமாம் தலைவா. ஒரு அவசர கேஸ். விடியற்காலைல போனேன். இப்போதான் வரேன். ஒரு பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்கப்பா, ஒரு குளியல் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன்” எனச் சொல்லிவிட்டுச் செல்லும் போது, நேத்ராவும், ஸ்ரீயும் வருவதைப் பார்த்தவன், “வாங்க மாம்ஸ், ஹே நேத்ஸ் எப்படியிருக்கீங்க?” என விசாரித்துவிட்டுச் சென்றான்.

ஆண்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, மது கிச்சனில் சுத்தம் செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் சமைத்த உணவு வகைகளை டேபிளில்  அடுக்கிக்கொண்டு உணவைப் பரிமாற்ற ஏற்பாடுச் செய்துக்கொண்டிருந்தனர். சித்தார்த் எழுந்து கிச்சனுக்குச் சென்றவன், “மது கொஞ்சம் தண்ணீர் கொடு” என கேட்டுக்கொண்டே உள்ளே செல்ல, இதோ தரேன்” என்று சொல்லிக்கொண்டே திரும்பியவளை இழுத்து அணைத்து முத்தமிட, மது பதட்டத்துடன், “என்னங்க இப்படிச் செய்றீங்க? யாராவது வரப்போறாங்க” என்றவளைப் பார்த்து, “ரெண்டு மணி நேரமா கண்ணிலேயேபடாம இப்படி மனுஷனை சோதிக்கிறியே” என கழுத்தில் முத்தமிட்டவன் அதே வேகத்தில் அவளை விலக்கி நிறுத்திவிட்டு “என்னதான் சொல்லு, திருட்டு மாங்கா சாப்பிடுறா மாதிரி, இத்தனைப் பேர் இருக்கும் போது பொண்டாட்டியைத் திருட்டுதனமா கிஸ் பண்றது கூட தனி சுகம் தான்” எனச் சொல்லிவிட்டுச் செல்வதைப் பார்த்து மது, ஒரு சந்தோஷ பெருமூச்சை விட்டுவிட்டுச் சிவந்தமுகத்துடன் தன் வேலையை தொடர்ந்தாள்.

உள்ளே வந்த  மீரா, “என்ன மது சித்தார்த் வந்துட்டுப் போறார், என்னவாம்?” என்றாள். மது திரும்பி அவளைப் பார்க்காமல், “அது…. அது….. தண்ணீர் குடிக்க வந்தார் அக்கா” என்றாள். சுபா, “தண்ணீர் குடிக்க வந்தானா? நாங்க வேறேன்னவோன்னு நினைத்தோம்” எனச் சொல்லிவிட்டுக் களுக்கென சிரிக்க, திரும்பி இருவரையும் பார்த்த மதுவின் முகம் மேலும் சிவந்தது.

குழந்தைகள் அனைவரையும் அமரவைத்து உணவு பரிமாறியதும், ஆண்களை அமர சொல்ல, சித்தார்த், “எல்லோரும் ஸெல்ப் சர்வீஸ் பண்ணிக்கலாம்” என்றதும், அனைவரும் சரிஎன்றனர். அவரவர் தங்களுக்குத் தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டு அமர, சித்தார்த் மதுவை தன் அருகில் அமரும்படி சைகை செய்தான். மது அதைக் கவனிக்காதது போல நேத்ராவிடம் பேசிக்கொண்டே அவள் அருகில் அமர்ந்துக்கொள்ள, சித்தார்த், மதுவை முறைத்தபடி அமர்ந்திருக்க, மது ஓரக்கண்ணால் அவனது முறைப்பைக் கண்டும் காணாமல் சிரிப்புடன் நேத்ராவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

அஷ்வந்த், “அண்ணி அண்ணன் உங்களை கூப்பிடுகிறார் பாருங்க” என சத்தமாக சொல்ல மது வேறுவழி இல்லாமல் எழுந்து சென்று சித்தார்த்தின் பக்கத்தில் அமர்ந்தாள். அருகில் வந்து அமர்ந்தவளை சிறிதுநேரம் கண்டுக்கொள்ளாமல் இருந்தவன், சட்டென மின்னல் வேகத்தில் மதுவின் தட்டிலிருந்த ஸ்வீட்டை எடுத்துக்கொண்டான். மது படபடப்புடன் சுற்றி பார்த்துவிட்டு, தண்ணீரை எடுத்துக்குடித்தாள்.

திடீரென உரத்த குரலில் அஷ்வந்த், “அண்ணா உனக்கு ஸ்வீட் வேணும்னா நிறைய இருக்கு அங்க போய் எடுத்துக்கொள்வது தானே, எதுக்கு அண்ணி தட்டில் இருந்து எடுக்கற, இப்போ பாரு அண்ணி ஸ்வீட்டை காணோம்னு அழப்போறாங்க” என்றதும், ஏற்கெனவே சித்தார்த்தின் செயலால், படபடத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தவள் அஷ்வந்தின் கேள்வியில் அதிர்ந்து புரைஎற , சித்தார்த் மதுவின் தலையில் தட்டிய படி, “மெதுவா குடியேன் மது,அந்த தடியனுக்கு வேற வேலை இல்லை” எனச் சொல்லிக்கொண்டே தலையில் தட்ட, பழைய நினைவினில் இருவரும் மூழ்கி புன்னகைக்க, அவர்களின் சிரிப்பில் மற்றவர்களும் கலந்துக்கொண்டனர்.

மதிய உணவுக்குப் பின் அனைவரும் ஹாலில்அமர்ந்திருக்க, பெரியவர்கள் முக்கியமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தவர்களின் நடுவில் அஷ்வந்த் வந்து அமர்ந்தான். அனைவரையும் போட்டுச் சரமாரியாக கலாய்த்துகொண்டிருந்தான். அவரவர் கல்யாணங்களில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டிருந்தான்.

“டேய் இன்னும் உனக்குக் கல்யாணம் ஆகணும், அப்போ நீ எங்க எல்லோரிடமும் நல்லா மாட்டிக்கொண்டு முழிக்க போற பாரு” என நேத்ரா சொல்ல “அதை அப்போ பார்க்கலாம்” என்றவன் கடி ஜோக்கில் இறங்கினான். “ஒரு யானை அடிபட்டு ஹாஸ்பிட்டல்லயிருந்ததாம். அப்போ அதைப் பார்க்க அதோட பிரெண்ட் எறும்பு வந்துதாம். டாக்டர் அந்த எறும்புகிட்ட யானைக்கு ப்ளட் ஏத்தணும் அப்படின்னு சொல்லிட்டுப் போனாராம். அப்போ இந்த எறும்பு அந்த யானை கிட்ட போய் ஒண்ணு சொல்லுச்சாம் அந்த யானை அங்கேயே அதிர்ச்சியில் செத்து போச்சாம், அப்படி அந்த யானை கிட்ட அந்த எறும்பு என்ன சொல்லி இருக்கும்?” என கேட்டதும் அனைவரும் தெரியல எனச் சொல்ல, “நேத்ஸ் யு ட்ரைம்மா” எனச் சொல்ல, “போடா என்னை ஏண்டா இழுக்கற?” என கேட்டுவிட்டு அமர்ந்திருக்க, அஷ்வந்தே “சரி உங்க யாருக்கும் இதை யோசிக்கிற அளவுக்கு மூளை இல்லைன்னு தெரிஞ்சும் உங்ககிட்ட பதிலை எதிர்பார்த்தது தப்பு தான். நானே சொல்றேன் என்றவன் “அந்த எறும்பு சொல்லுச்சாம், கவலைப்படாத பிரெண்ட் உனக்கு எவ்வளவு ரத்தம் வேணும்னாலும் நான் உனக்கு ரத்தம் கொடுக்கிறேன்னு. அதை கேட்டதும் யானை அதிர்ச்சியில் செத்து போச்சாம்” என்றதும், அனைவரும் தலையில் அடித்துக்கொள்ள,

 

“டேய் நீ டாக்டர்டா. இன்னும் என்னவோ சின்ன பையன் மாதிரி இப்படி எல்லோரையும் அறுத்துகிட்டு இருக்க” என ஹரி சொல்ல, “சோ வாட் மாம்ஸ்? டாக்டர்னா சிரிக்க கூடாதா, பேசக்கூடாதா?” என கேட்டான்.

“சிரிக்கலாம் , பேசலாம், எல்லாம் செய்யலாம். ஆனா ஜோக் சொல்றேன் என்ற பேர்ல நீ எங்க எல்லார் கழுத்தையும் அறுக்கறே அதான் கூடாது” என நேத்ரா சொன்னதும். “ஓகே நான் உன்னை மூணு கேள்வி கேக்கிறேன். அதுக்கு ரெண்டு கேள்விக்கு நீ தெரியாதுன்னு சொல்லாமல் வேற ஏதாவது பதில் சொல்லு. அப்போ நான் இனி, கடி ஜோக் சொல்லவே மாட்டேன்” எனச் சொன்னதும், நேத்ராவும் வீம்பாக, “சரிடா சொல்லுடா. நான் பதில் சொல்றேன்” எனச் சொன்னதும், ஸ்ரீ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“வேண்டாம் நேத்ரா அஷ்வந்த் எப்படியும் உன்னை ஏமாத்த போறார். வீணா நீயே மாட்டிக்காதே  பேசாமல் வாபஸ் வாங்கிக்கோ” என மது சொல்ல, “இருங்க அண்ணி அப்படி அவன் என்னதான் கேட்கிறான்னு பார்க்கலாம்?என்றவள், சொல்லுடா நான் ரெடி” என்றாள்.

“ஓகே. கேள்வி நம்பர் ஒண்ணு, பகலில் நிலா தெரியுமா?” என்றதும்  இதுக்குப் பதிலே தெரியாதுன்னு தானே சொல்லணும் இவன் தெரியாதுன்னு வார்த்தையை உபயோகபடுத்த கூடாதுன்னு வேற சொல்லிட்டானே என நேத்ரா அனைவரையும் பார்க்க, மது நான் அப்போவே சொன்னேன் இல்லை என்பது போல பார்த்தாள்.

 

கேள்வி நம்பர் ரெண்டு, தெரியும் என்ற வார்த்தைக்கு எதிர்பதம் சொல்லு” என்று சொல்லிவிட்டு காலரை தூக்கிவிட்டுக்கொள்ள, நேத்ரா, “போடா இதெல்லாம் அழுகுணி ஆட்டம்.நான் ஒத்துக்க மாட்டேன்” என குழந்தையைபோல சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“சரிடி உனக்காக கடைசி கேள்வியை கொஞ்சம் ஈஸியா கேக்கறேன், இதுக்குத் தெரியும் தெரியாதுன்னு ரெண்டுல ஒண்ணு சொல்லு என்றதும், நேத்ராவும் தான் இன்னும் ஏமாற போவது தெரியாமல் சரி என மண்டையை ஆட்டினாள். அஷ்வந்திற்கே அவளை  பார்க்க சற்று பாவமாக இருக்க, “நேத்ஸ் வேணாம் போதும் இதோட விட்டுடறேன். பிழைத்து போ” என்றான்.

“டேய் நீ ஒண்ணும் எனக்குப் பாவம் பார்க்க வேணாம், நீ கேள்வியை கேளு நான் பதிலை சொல்றேன்” என மிடுக்காக சொன்னாள். “உன் தலையெழுத்தை  யாரால மாத்த முடியும், சரி கேளு, நல்லா கவனமா கேளு” என்றவன், “நீ லூசுன்னு உனக்குத் தெரியுமா?” என்றான். ஒரு நிமிடம் விழித்த நேத்ரா அவனது கேள்வி புரிந்ததும் ஐயோ இதுக்கு என்ன பதில் சொல்வது எது சொன்னாலும் எடக்கு மடக்கா இல்ல போகும் என விழித்தபடி இருக்க, அனைவரும் சிரிக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.

 

நேத்ரா கோபத்துடன், எழுந்து அஷ்வந்தை நோக்கி வர, அதை எதிர்பார்த்த அஷ்வந்த் அங்கிருந்து ஓட தொடங்கினான். துரத்திக்கொண்டு சென்ற நேத்ராவின் பார்வை தன் அம்மாவின் கையிலிருந்த போடோவில் சென்றது, அருகில் சென்று பார்த்தவள், “யாரும்மா இந்தப் பொண்ணு, அழகா இருக்கா” என கேட்டதும், இதுதான் நம்ம அஷ்வந்திற்குப் பார்த்திருக்கும் பொண்ணு” எனச் சொல்லி அந்த பெண்ணைப்பற்றி சொன்னதும் நேத்ரா, “கொடுங்கம்மா நான் எல்லோரிடமும் காட்டிவிட்டு வரேன்” என வாங்கிக்கொண்டு சென்று அனைவரிடமும் விஷயத்தைச் சொல்லி ஒவ்வொருவரும் போட்டோவைப் பார்த்து தங்களின் திருப்தியை புன்னகையாக வெளியிட்டனர்.

 

சிறிது நேரத்திற்குப் பின் மெதுவாக வந்த அஷ்வந்த்தைப் பார்த்த நேத்ரா கலகலவென சிரித்தாள். “கேட்ட கேள்விக்குப் பதிலை அப்படியே லைவா டெமோ காட்றா பாருங்க” என்றதும் அனைவரும் அஷ்வந்தைப் பார்த்தே சிரித்தனர்.

 

எல்லோரும் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்து, “கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க  என்ன ஆச்சு என்னைப் பார்த்து எல்லோரும் எதுக்கு சிரிக்கிறீங்க? ஒண்ணா கூடி என்னை ஓட்டுறீங்களா?” என்றான்.

“உன்னை நாங்க ஏண்டா கண்ணா ஓட்ட போறோம்?” என அத்வைத் கேட்டதும், “அப்போ மாட்டரை ஓபன் பண்றது” என்றான்.

சுபா தன்னிடம் இருந்த போட்டோவை அஷ்வந்திடம் நீட்டி, “இந்த போட்டோவைப் பாரு” என போட்டோவை கொடுத்ததும், வாங்கிய அஷ்வந்த் போட்டோவைப் பார்த்ததும், சட்டென எழுந்து நின்றான். “ஹே… அசிலி பிசிலி” என அவன் உதடுகள் முணுமுணுக்க ஒரு புன்னகையுடன் சில நொடிகள் கண்களை மூடி நின்றான். அனைவரும் அஷ்வந்தின் நிலை பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கண்களைத் திறந்தவன் அனைவரையும் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புசிரித்தான்.

“டேய் அஷ்வந்த் என்னடா ஆச்சு?” என ஹரி கேட்டதும், “மாம்ஸ்… இந்த பார்ட்டியோட போட்டோ எப்படி கிடைத்தது?” என்றான்.

“என்னடா பார்ட்டின்னு சொல்ற?” இது யாரு தெரியுமா?” என சித்தார்த் கேட்டதும், “ம்ம்…. பேரு அஞ்சனா. ஹவுஸ் சர்ஜன். வீட்டுக்கு ஒரே பொண்ணு.” எனச் சொல்ல அனைவரும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

நேத்ரா “இந்தப் பொண்ணை தாண்டா நம்ம வீட்ல உனக்குப் பார்த்திருக்காங்க” எனச் சொன்னதும், “வாட்? யாரை கேட்டு இப்படிச் செய்தாங்க? நான் தான் ஏற்கெனவே ரூட்டெல்லாம் போட்டு ஒரு பொசிஷன்ல வச்சிருக்கேனே. அப்புறம் எப்படி இப்படி நீங்களா முடிவு செய்யலாம்? நானே இன்னும் ஒரு ஆறு மாசத்துல வந்து சொல்லி இருப்பேன் இல்ல” என்றான்.

“அடப்பாவி, இவ்வளவு நாளா எங்ககிட்ட மூச்சே விடல நீ” என்றவள், “ஆனா பேரு கூட உனக்குப் பொருத்தமா தாண்டா இருக்கு “என சிரித்தாள். “அதுல என்னடி சிரிப்பு? அஞ்சனா. இதுல என்ன பேர் பொருத்தத்தைக் கண்டு பிடித்துவிட்டாய்?” என்றான்.

“அஞ்சனாதேவி ஆஞ்சநேயரோட அம்மா பேரு. நீயும் குரங்குக்கூட்ட தலைவனாச்சா. அதான் சொன்னேன் பேரு பொருத்தம் சூப்பர்” என நேத்ராவின் பதிலைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர்.

 

ஆனால், அஷ்வந்த் அதைக் கண்டுக்கொள்ளாமல் போட்டோவைத் திருப்பிப் பார்த்தான், அதில் அஞ்சனா என்கிற சஞ்சனா மற்றும் பிறந்த தினம் மட்டும் இருக்க, “போட்டோ கொடுத்தா போன் நம்பர் கொடுக்கறது இல்லை” என வாய்விட்டு புலம்பினான்.

“ஏண்டா அந்த பக்கம் சிக்னல் கொடுத்தாச்சா?” என்றதும், “அட என்னைப் பார்த்தாலே ஓடும்பா, அதான் போன் நம்பர் இருந்தா கொஞ்சம் கூப்பிட்டுக் கலாய்க்கலாம். யாராவது ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றதும், “இங்கவாடா மகனே நான் ஹெல்ப் பண்றேன்” என அவன் தந்தை அழைத்ததும், “ஒஹ்…. நன்றி தந்தையே, எல்லார் வீடும் இப்படியே இருந்துவிட்டால், கவலை ஏது வாழ்விலே? என பாடிக்கொண்டே எழுந்து செல்ல முயன்றவனை, நேத்ரா அவசரமாக தடுத்தாள், “ஹே… அஷ் உனக்கு இந்தப் பொண்ணை எப்படி தெரியும்?” என கேட்டதும்,

“அது வந்து ஒரு நாள் நான் அவங்க காலேஜுக்குப் போனேனா…..” என்றதும் அனைவரும் ஆர்வமாக “ஹ்ம்ம்..” என்றதும் நிறுத்திவிட்டு “சாரி…. இப்போ என்னால இந்தக் கதையை சொல்லமுடியாது. என்னை முழுசா ஹீரோவா வச்சி கதை வரப்போகுது இல்ல அப்போ தெரிஞ்சுக்குங்க. ஓகே பாய். நான் கிளம்பறேன்” எனச் சொல்லி தன் தந்தையிடம் சென்றான்.

 

மூன்று மணிவரை அனைவரும் அமர்ந்து பல கதைகளையும் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். ஜீவா, ரமேஷ், சுரேஷ் தங்கள் மனைவிகளையும்  குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றதும், மதுவின் மாமா வீட்டிலும் அனைவரும் கிளம்பினர். கிளம்பும் நேரம் ராஜேஷ் தன் தங்கையை அழைத்து, “மதும்மா, நீ என்னைக்கும் இப்படியே சந்தோஷமா, சௌக்கியமா இருக்கணும்” எனச் சொல்லி அவளை வாழ்த்திவிட்டு கிளம்பினர்.

அனைவரையும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த வைஷு, “அம்மா, எனக்கு தூக்கம் வருது” என மதுவின் மீது சாய, சுபா, “வைஷும்மா, வருகிறாயா, வருண் அண்ணா, அருந்ததி அக்கா, கூட படுத்துக்கலாம் என கேட்டதும், சரியென வைஷுவும், அர்ஜுனும், தன் அத்தையுடன் சென்றுவிட மதுவும், சித்தார்த்தும் தங்கள் அறைக்கு வந்தனர்.

“ஹப்பா ஒரு குட்டி தூக்கம் போடலாம்” என மது படுக்க சென்றவளை, “ஹே மது கிளம்பு வெளியே கொஞ்சம் போகவேண்டியது இருக்குப் போய் வரலாம்” என்றான்.

 

மது, “கிளம்பு கிளம்புன்னு அவசரப்படுத்தறீங்களே  எங்கே போறோம்?” என்று கேட்க சித்தார்த், “அவள் இடையைப் பற்றி இழுத்து இருவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தவாறு, “எங்கே போறோம்னு சொன்னதான் கிளம்புவீங்களா?” என்றான்.

அவன் இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்து அவன் கைகளுக்குள்  வாகாகப் பொருந்தியவள், “முதலில் எங்கே போறோம்னு சொல்லுங்க. இதில் என்ன சஸ்பென்ஸ்” என்றாள்.

மேலும் இறுக்கியவாறு சித்தார்த், “சஸ்பென்ஸ் தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். முடிஞ்சா யோசிச்சு வை அதுவரை சஸ்பென்ஸ்” என்று கூறியபடி அவளுடைய நெற்றி, கண், கன்னம் என்று உதடுகளால் ஊர்வலம் நடத்தத்தொடங்கினான்.

அவன் ஊர்வலத்திற்குப் பாதை அமைத்து  அவன் முத்தங்களுக்குப் பதில் கொடுத்தவாறு, “என் செல்லமில்ல எங்கே போறோம்னு சொல்லுடா?” என்று கொஞ்சலாகக் கேட்க சித்தார்த், “மதும்மா நீ கெஞ்சி கொஞ்சி எப்படிக் கேட்டாலும் ஒண்ணும் பிரயோஜனம் இல்லை அங்கே போய் பார்த்துக்கோ, போகும் போதே நீ புரிஞ்சுக்குவ” என்று கூறியவாறு பேசுவதற்கு அசையத்தொடங்கிய இதழ்களைச் சிறை செய்தான்.

அவன் முத்தத்தில் சிறிதுநேரம் மயங்கிய  மது, “ஆமா பெரிய சஸ்பென்ஸ் சரக்கு மலிஞ்சா சந்தைக்கு வந்துதானே ஆகணும் எனக்கொன்னும் தெரிஞ்சுக்கணும்னு இல்லை உங்களைக் கெஞ்சவும் இல்லை, கொஞ்சவும் இல்லை” என்று சொல்ல சித்தார்த், “அதேதான் பொண்டாட்டி நான் சொல்ல வந்ததும். ஆனா தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இல்லைன்னு சொல்லாதே உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று அவள் இதழ்களைத் தடவியவாறே கூறினான்.

சஸ்பென்ஸ் தாங்காத தன் குணத்தைக் கிண்டலாகக் கூறியதும் இதழ்களைத் தடவிய அவன் விரல்களைக் கடித்தவள், “சொல்லாட்டிப் போடா” என்று அவனைத் தள்ளி விட்டாள்.

சித்தார்த், “ராட்சசி கடிக்கிறியா, இரு எல்லாத்துக்கும் சேர்த்து நைட் கவனிக்கறேன்” என்று மிரட்டலாகத் தொடங்கி அவள் கன்னங்களைக் கொஞ்சியவாறு முடிக்க  மது அவன் கண்களிலிருந்த காதலில் தன்னை மறந்தவளாக, “சித்து காலையிலும் வெளியே போயிட்டுத் தானே வந்தோம், இப்போ குழந்தைகளை விட்டுவிட்டு  திரும்ப வெளியே போகணுமா?”என்று கேட்டவாறு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சித்தார்த், “மதும்மா பொண்டாட்டி இவ்ளோ ஆசையாக கேட்கும் போது வெளியே போக மனசே இல்லைதான்” என்று சொல்லி அவள் கூந்தல் தோள்கள் முதுகு என்று தடவிக் கொடுத்து “ஆனாலும் இதெல்லாம் போய்ட்டு வந்து பாத்துக்கறேன்” என்றான்.

மது பொய்க்கோபத்தோடு அவனிடமிருந்து விலகி, “உக்கும்….. உங்களுக்கு வேற என்ன வேலை? எங்கே கூப்பிடுறீங்கன்னும் சொல்ல மாட்டேன்றீங்க?” என்றபடியே தயாராகி சித்தார்த்துடன் கிளம்பினாள்.

சித்தார்த் விசில்அடித்தபடி சந்தோஷமாக காரை ஒட்டிக்கொண்டுவர, மது கோபமாக இருப்பது போல முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அதைக் கவனித்த சித்தார்த், புன்னகையுடன் ஏதும் பேசாமல், காரை ஒட்டிக்கொண்டு செல்ல, தங்கள் செல்லவேண்டிய இடம் நெருங்கியதுமே அந்த இடத்தை அறிந்துக்கொண்ட மது, ஒருவிதமான தயக்கத்துடன் சித்தார்த்தைப் பார்த்தாள்.

வந்து கேட்டை திறந்த வாட்ச்மேன் கெஸ்ட் ஹௌசின் சாவியை கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். காரை நிறுத்திய சித்தார்த் மதுவைப் பார்த்து, “மது எனக்குத் தெரியும் நான் இங்கே தான் போறோம்னு சொன்னால் உனக்குப் பழைய ஞாபகம் எல்லாம் வரும், நீ வரமாட்டேன்னு. அதான் நான் உன்னிடம் சொல்லவில்லை. எனக்கு இன்னைக்கு இங்கே வரணும் போலயிருந்தது. அதான் கூட்டிக்கொண்டு வந்தேன், என் மேல கோபமாடா?” என கேட்டவனைப் பார்த்தவள், இல்லையென தலையை அசைத்தாள்.

“அப்போ உள்ளே போகலாமா?” என காரைவிட்டு இறங்கியவன், மதுவின் கையை பிடித்து அழைத்து சென்றான். அன்றொரு நாள் இதே போல இதே இடத்திற்குத் தன் கையை பிடித்து சித்தார்த் அழைத்து சென்றதும் அதற்குத்தான் பேசிய பேச்சுக்களும் ஞாபகம் வர, மதுவின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, மது தன்னை சமாளித்துக்கொண்டாள். முடிந்தது முடிந்தது தான். இனி,யாவது அதெல்லாம் நினைக்க கூடாது, என எண்ணிக்கொண்டே சித்தார்த்துடன் அந்த கெஸ்ட்ஹௌசிற்குள் சென்றாள்.

உள்ளே வந்த இருவருமே ஒருவிதமான தாக்கத்தில் இருந்தனர். மது முடிந்தது எதையும் நினைக்க கூடாது என எண்ணினாலும், நாம் எண்ணுவதெல்லாம் நடப்பது சாத்தியமா?? என்ன?? மதுவின் மனம் மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றிவர, சித்தார்த்தும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என வந்தவன் மெளனமாக அமர்ந்திருந்தான்.

இருவருமே அருகருகே அமர்ந்திருந்த போதிலும் அங்கு மௌன மொழியே அரங்கேறிக்கொண்டிருந்தது. சித்தார்த் சிறிதுநேரம் கண்களை மூடி அமர்ந்திருக்க, மது மெல்ல எழுந்து பின்பக்க தோட்டக்கதவைத் திறந்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.

மெல்ல படி இறங்கியவளின் மனமும் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது, தான் சித்தார்த்தின் தோளில் சாய்ந்தது, சித்தார்த்தின் முதல் அணைப்பு, தன்னுடைய விலகல், சித்தார்த்தின் குழப்பம், என ஒவ்வொன்றாக நினைவு வர அதே மரத்தடியில் சென்று கண்கள் கலங்க நின்றாள்.

மனம் மானசீகமாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது. சாரி சித்தார்த், வெரி சாரி, உங்களை எந்த அளவுக்கு நான் காயப்பட வைத்திருக்கிறேன். எத்தனை நாள் இதையே நினைத்து வேதனைப் பட்டிருப்பீர்கள்,கல்யாணத்திற்குப் பிறகும் என் மனமும், காதலும், புரியாமல் இருந்த நேரத்தில் என்னையே எனக்குப் புரியவைத்தீர்களே, உன் காதல் தான் நம் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தது, என்று சொல்லி ஆரம்பத்திலிருந்து அனைத்து விஷயத்தையும் எனக்கு, என் தடுமாற்றம், குழப்பம், உங்களிடம் மட்டும் நான் விலகி சென்றது, என ஒவ்வொன்றையும் எடுத்துச்சொல்லி என்னை தெளிவுபடுத்தினீர்களே, என எண்ணியபடி நின்றவள் நிமிர்ந்து பார்க்க அன்றுபோலவே சித்தார்த் சற்று தூரத்தில் நின்று தன்னே பார்ப்பதைப் பார்த்தவள், மெல்ல புன்னகைக்க. சித்தார்த் அவளை நோக்கி வந்தான்.

மதுவின் குறும்பு தலைதூக்க மெல்ல

” எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே….. என பாட ,

சித்தார்த் தயக்கத்துடன் நின்றான், மது என்ன என்பது போல புருவங்களை உயர்த்தி சித்தார்த்தைப் பார்த்து சிரிக்க அடுத்த நொடியே அவளது குறும்பை நினைத்தவன் சிரித்தபடி அடுத்தவரியை பாடிக்கொண்டே அருகில் வர மது சிரித்துக்கொண்டே சித்தார்த்தின் மார்பில் முகம் புதைக்க மெல்ல அவள் முகம் நிமிர்த்தியவன், இருவரின் கண்களும் ஒன்றாக கலக்க, சட்டென இருவரும் உரக்கநகைத்தனர்.

மதுவை இறுக அணைத்தவன் தன முத்திரைகளை வாரி வழங்கினான். அவனது காதலில் தன்னை மீண்டும் மீண்டும் தொலைத்துக்கொண்டிருந்தவள், வெட்கத்துடன் அவன் மார்பில் அடைக்கலம் ஆனாள். மரத்தின் மீது சாய்ந்து நின்றவன், தன்னவளை தன் மீதே சாய்த்துக்கொண்டு கையணைப்பில் நிறுத்திக்கொண்டான். அவளது உள்ளங்கையை எடுத்து முத்தமிட்டவன், “மது…” என தயக்கத்துடன் சொல்ல, திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவள், “சித்து.. நோ எமோஷன் பீலிங்க்ஸ். நோ வொர்ரீஸ். நான் ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கேன்” எனச் சொல்லிக்கொண்டே அவன் கழுத்தை சுற்றி தன் கைகளை மாலையாக கோர்த்தாள்.

புன்னகையுடன் அவளை அணைத்துக்கொண்டவன், “உன்னை இங்கே கூட்டி வந்து உன்னோட நல்ல மூடை பாழாக்கிவிட்டேனோ என்று நினைத்தேண்டா” என்றதும், அவசரமாக , “ம்ச்சு…, ம்ச்சு….” என கண்ணை சிமிட்டியவள், “வந்த போது எனக்கும் பழைய ஞாபகம் வந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அந்த மோசமான நிலையையே தாண்டி வந்தாச்சு, இனி, அதையெல்லாம் நினைக்கவே கூடாது என்று முடிவு செய்திருக்கேன்” என்றவளை ஆசையுடன் தழுவிக்கொண்டான்.

அவன் அணைப்பிலேயே சிறிதுநேரம் நின்றவள், “ஆனால், நீங்க ஏன் என்னை இங்கே கூட்டிவந்தேன்னு எனக்குப் புரிந்துவிட்டது” என்றாள். “ஏண்டா கூட்டிவந்தேன்” என கண்களைத் திறக்காமலேயே அவளை தன் அணைப்பிலிருந்து விலக்காமலும் கேட்டதும், மதுவும் அவன் அணைப்பிலிருந்து விலக தோன்றாமல், “நீங்க பெரிய ரசிகன் தெரியுமா?” என்றாள். சித்தார்த், “ம்ம்… அப்படியா? எனக்குத் தெரியாதே அதெப்படி?” என கேட்டான்.

“நாம முதல் முறை இங்கே வந்த போது, இதே நேரம் தான், இதே இடத்தில் , இதே போல அழகான மாலை நேரம்,  அன்னைக்கும் பௌர்ணமி, இன்னைக்கும் பௌர்ணமி இதெல்லாத்தையும் சேர்த்து இன்னைக்கு நம்ம கல்யாண நாளும் சேர்ந்து வந்திருக்கு. இத்தனை வருடத்தில் இன்னைக்குத்தான் இப்படி அமைந்திருக்கு, அதோட நாமும் இத்தனை வருஷம் இங்கே இல்லை. அதனால் தான் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் என்னை நீங்க இங்கே கூட்டி வந்திருக்கீங்க, சரியா?” என்றதும், பதில் ஏதும் சொல்லாமல் தன் அணைப்பின் இறுக்கத்திலேயே தன் ஆமோதிப்பை வெளிப்படுத்தினான்.

சிறிதுநேரம் இருவரும் அதே மோன நிலையிலிருக்க, அணைப்பின் இறுக்கம் தளர்த்தியவன் மதுவின் கண்களைப் பார்த்து கிளம்பலாமா என கண்களாலேயே கேட்க, அவளும்தன் பதிலைக் கண்களாலேயே சொல்ல அந்த காதல் பாஷை அவர்களுக்கு மட்டுமே உரித்தானது போலயிருவரும் அதை புரிந்துகொண்டு, இருவரும் கைகளை பற்றியபடி கிளம்பினர். வீடு வந்து சேரும்வரை இருவரும் ஒருவார்த்தைகூட பேசவில்லை. மௌன புன்னகையும்,பார்வைகளால் ஸ்பரிசித்துக்கொண்டும் வீடுவந்து சேர்ந்தனர்.

சித்தார்த்தின் காரை கண்டதும் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து “அப்பா….” என ஓடிவந்து வைஷு சித்தார்த்தின் கால்களை  கட்டிக்கொள்ள சித்தார்த் குனிந்து, “வைஷு டார்லிங்” என தூக்கிக்கொள்ள அந்த நேரத்தில் அர்ஜுன் சித்தார்த்தின் முதுகில் ஏறிக்கொண்டான். சித்தார்த் இருவரையும் தூக்கிக்கொண்டு ஒரு சுற்று சுற்ற மது புன்னகையுடன் மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மதுவைப் பார்த்த சித்தார்த், குழந்தைகளிடம், “ஒய்…! குட்டீஸ் அம்மா நம்ம மேல கோபமா இருக்காங்க, “எனச் சொல்ல வைஷு, “எதுக்கு அப்பா” என தன் வலது கையை ஆட்டி கேட்டதும்,  அர்ஜுன் முந்திக்கொண்டு, “நாம அம்மாகிட்ட போகாம அப்பாகிட்ட வந்துட்டோம் இல்ல அதான். வாவா நாம அம்மாக்கு கிஸ் கொடுத்தா அம்மா நம்மள பார்த்து சிரிப்பாங்க” எனச் சொன்னதும் “நான் தான் அம்மாகிட்ட முதலில் போவேன்” என வைஷு இறங்கி ஓட அர்ஜுன் பின்னாலேயே ஓடிவர அதைக் கண்ட மது, “எனக்கு வேலை இருக்கு நான் போறேன்பா, முடிந்தால் என்னை பிடிங்க” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் செல்ல, குழந்தைகள் இருவரும் பின்னாலேயே ஓட சிரித்தபடி சித்தார்த்தும் அவர்களுடன் உள்ளே வந்தான்.

ஓடி சென்று மதுவின் கால்களைக் கட்டிகொண்டதும், “ஆஹா…, ரெண்டு பேரும் அம்மாவை பிடிச்சிடீங்களா? ” என கையை உதறிக்கொண்டு சொல்ல, வைஷு, தன் அம்மாவை குனிய சொல்லி கன்னத்தில் முத்தமிட்டதும், மதுவும்,குழந்தைகளை முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள்.

பெரியவர்கள் நால்வரும், ஆண்களும், குழந்தைகளுடன், தோட்டத்தில் அமர்ந்துக்கொண்டிருக்க, பெண்கள்  நால்வரும், சமையலறையில் பேசி சிரித்துக்கொண்டு, இரவு உணவை தயாரித்துக்கொண்டிருந்தனர். சித்தார்த் தான் கொஞ்சம் வெளியில் சென்றுவருவதாக தன் பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பினான்.

ஒருமணி நேரம் கழித்து சித்தார்த் திரும்பி வரும் போது அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தான் கொண்டுவந்தவற்றுடன் தன் அறைக்குச் சென்று, செய்யவேண்டியதை செய்துவிட்டு குளித்துவிட்டு வந்தான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து தோட்டத்திலேயே உணவையும் முடித்துக்கொண்டு அமர்ந்தனர். மதுவும், மீராவும், கிச்சனை சுத்தம் செய்துகொண்டிருக்க, அர்ஜுன், “அம்மா வைஷுக்கு தூக்கம் வருதாம்” என்றான்.

“அப்பாவை கூடிக்கொண்டு  போய்ப் படுக்கவைக்க சொல்லுடா கண்ணா. அம்மா வரேன்” என்றதும், “நீங்களும் வாங்கம்மா, அவ பாட்டு பாட சொல்லுவா” என கூற, மீராவும், “நீ போய் உன் இசை கச்சேரியை நடத்து மது மீதியை நாங்க பார்த்துக்கொள்கிறோம்” என்றாள். மது சிரித்துக்கொண்டே, “அர்ஜுன், நீயும், வைஷுவும் எல்லோருக்கும், குட் நைட் சொல்லிட்டு ரூமுக்குப் போங்க அம்மா வரேன்” என அனுப்பிவிட்டு மூவருக்கும் பாலை எடுத்துக்கொண்டு குழந்தைகளின் அறைக்குச் சென்றாள்.

அறைகதவைத் திறக்கும் போதே உள்ளே பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க மெல்ல உள்ளே எட்டிப்பார்க்க, அர்ஜுன் சித்தார்த்தின் அருகில் அமர்ந்திருக்க, வைஷு சித்தார்த்தின் மடியில் அமர்ந்து தாளம் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டதும், “இது தான் நீங்க ரெண்டு பேரும் தூங்குவதா?” என கேட்டுக்கொண்டே சித்தார்த், அர்ஜுன் இருவருக்கும் பாலை கொடுத்துவிட்டு, வைஷுவை தூக்கிக்கொண்டு சென்று தன் பக்கத்தில் அமரவைத்து பாலை எடுத்துக்கொடுத்தாள்.

“நம்ம குழந்தைங்க மாதிரி எங்கேயாவது பார்த்திருக்கியா மது, அங்கங்கே தாலாட்டு பாடி தூங்க வைப்பாங்க. இங்கே என்னடான்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் பாடினாதான் தூங்கறாங்க” எனச் சொன்னதும், “எல்லாம் நீங்க ஆரம்பித்து வைத்தது தானே”, என்றாள். குழந்தைகள் இருவரும்  பாலை குடித்ததும், “ஓகே கச்சேரி ஸ்டார்ட் பண்ணலாமா?” என சித்தார்த் கேட்டதும், அவன் பாதி பாலை குடிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்த மது குடிக்கலையா? என ஜடையில் கேட்க, “நீ பாதி நான் பாதி கண்ணே” என மெல்ல முணுமுணுக்க, மது சிரிப்புடன், “பெரிய காதல் மன்னன்” என வாய் அசைக்க, “அது உண்மை தானே” என குர்தாவில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

மது தன் இனி,ய குரலால்,முதல் இரண்டு வரி  பாட, சித்தார்த் அடுத்த இரண்டு வரிகளைப் பாட என பாடி முடிக்க, இருவரும் பார்வைகளாலேயே தொட்டும் வருடியும் இவ்வளவு நாள் அனுபவித்த  காதலின் இனி,மையையும் சேர்த்து பாடிக்கொண்டிருந்தனர். குழந்தைகள் இருவரும், ஏறக்குறைய உறங்கி இருந்தனர்.

 

சித்தார்த் எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை போட்டான். மது குழந்தைகளை நேராக படுக்கவைத்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட, சித்தார்த் இருவர் தலையையும் வருடி கொடுத்துவிட்டுத் தங்கள் அறைக்குச் செல்லும் கதவை  திறந்துவிட்டு மதுவைப் பார்த்து லேசாக தலையைக் குனிந்து வா என்பது போல கையை அசைத்ததும், மதுவும் சிரித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

 

அவள் பின்னோடு வந்து கதவை மூடியவன் எட்டி மதுவின் கையை பிடித்து சுண்டி இழுத்தான். பூவை போல தன் மீது மோதியவளை தன் இருக்கைகளில் ஏந்திக்கொண்டு மூக்குடன் மூக்கை உரசி கட்டிலில் இட்டவன், தன் பிடியை மட்டும் தளர்த்தவில்லை. அறைக்குள் நுழைந்ததும் வந்த கலவையான பூக்களின் வாசம் இருவருக்கும்  மயக்கத்தை கொடுக்க, சித்தார்த் மதுவின் இதழ்களை சிறைசெய்தான்.

சித்தார்த் மதுவை விடுவித்ததும், மது எங்கிருந்து இவ்வளவு வாசம் வருகிறது என சுற்றி பார்க்க அதை உணர்ந்த சித்தார்த் எழுந்து சென்று மின்விசிறியைப் போட அதிலிருந்து பூக்கள் சாராலாய் மதுவின் மீது விழத்தொடங்கின. தன் மீது பூக்கள் விழுவதை ஆச்சரியமும், சந்தோஷமுமாக பார்த்த மதுவையே பார்த்து சிரித்தபடி நின்றிருந்த தன் காதல் கணவனைப் பார்த்தவள் கட்டிலிலிருந்து இறங்கி ஓடி சென்று தன் கணவனை அணைத்துக்கொண்டாள்.

தன் காதல் மொத்தத்தையும் அவனுக்கு வெளிபடுத்துவது போல அவளது அணைப்பு அத்தனை இறுக்கமாக இருந்தது. அவளது நெகிழ்ச்சியை உணர்ந்தவன், அவள் முதுகை வருடி கொடுத்தான்.அணைத்தபடியே கட்டிலுக்கு அழைத்துவந்தவன், கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு  தன் மீது சாய்த்துக்கொண்டான்.

அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் கண்களில் கண்ணீரை கண்டதும், “மது எதுக்கு இப்போ அழுகை? முதலில் கண்ணை துடை” என அன்பும், பரிவும் கலந்து சொல்ல, “இல்லைங்க இது கவலையில் வந்த கண்ணீர் இல்லை,சந்தோஷத்தில்  வந்த கண்ணீர்” என்று சொன்னவளால் அதற்கு மேல் பேசமுடியாமல் அவன் மார்பில் சாய்ந்தாள்.

 

“மேடம், நோ எமோஷனல் பீலிங்க்ஸ், அண்ட் நோ வொர்ரீஸ்” எனச் சொல்ல “சித்து…” என அவன் மார்பில் தன்னை மேலும் புதைத்துக்கொள்ள முயன்றவளை சிரித்துக்கொண்டே அவள் கழுத்தில் தன் முகம் புதைத்தான்.

 

தன் மேல் வந்து விழும் பூக்களிலும் சித்தார்த்தின் அன்புச் சாரலிலும் நனைந்த மது இன்ப அதிர்ச்சியுடன், “என்ன சித்து இது இவ்வளவு பூக்களை எப்படி மேல கொண்டுவந்தீங்க? எப்போ இந்த வேலையெல்லாம் செய்தீர்கள்” என ஆச்சர்யமாக கேட்டாள்.

 

“நீ  கிச்சன் பக்கமே சுத்திசுத்தி வந்தாயே அப்போ அடுக்கினேன்” என்று முத்தங்களுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டவாறே சொன்னான்.

“இவ்வளவு பூவையும் எப்படி பிடிச்சீங்க?” என்றாள். சித்தார்த், “ஸ்விட்சர்லாந்துக்கே  அவ்வளவு பூ கொண்டு வந்தேனே இங்கே இருக்கற நம்ம வீட்டுக்கு வரவழைக்க முடியாதா? யாருக்கும் தெரியாம கொண்டு வந்தது அய்யாவோட சாமர்த்தியம் இப்போ இந்த விளக்கமெல்லாம் தேவையா மது?” என்றவாறே அவள் இதழ்களில் ஒட்டியிருந்த பூவை விலக்கி என்னோட இடத்தில் உனக்கென்ன வேலை என்று அவன் இதழ்களைப் பதித்தான்.

மாறி மாறி இருவர் முத்தங்களும் போட்டியைத் தொடங்க யார் தோற்கிறார்கள் வெல்கிறார்கள் என்பது தெரியாமல் போக சித்தார்த் மெல்ல அவளை முழுவதுமாகத் தன் மார்பில் கிடத்திக் கொண்டு “மது இவ்வளவு பூக்கள் எதுக்குத் தெரியுமா? காலைல எனக்கு விதவிதமா கலர் பூசி என்னை அதோடு ஒப்பிட்டுச் சொன்னாயே அப்பவே நானும் சொல்லவேண்டும் என நினைத்தேன், இப்போ இந்த பூவோட சொல்றேன்” என்றான்.

மது அவன் கன்னத்தோடுத் தன் கன்னத்தை பொருத்தியவாறு, ?என்ன சொல்லப் போறீங்க இப்போதானே இந்த விளக்கமெல்லாம் தேவையான்னு கேட்டீங்க?” என்று கேட்க சித்தார்த், அவளை மேலும் இறுக்கி “இப்போ வேண்டாம் அப்புறம் சொல்லச்சொல்கிறாயா? எனக்கு எது என்றாலும் ஓகே” என்று அவள் இடையைத் தடவிக் கொடுத்தான்.

மது முகம் சிவந்தவாறு, “உங்க இஷ்டம் சித்து” என்று சொல்ல சித்தார்த், “என்னோட இஷ்டம் என் மதுவை எப்பவும் இப்படியே சந்தோஷமா வச்சுக்கறதுதான். சுத்தியிருக்கற இவ்வளவு பூக்களும்  வாடினாலும் என் மது வாடாம இருக்கணும்” என்றான்.

மது அவன் பதிலில்  பெருமிதம்  தோன்றி சித்தார்த்தை அணைத்துக்கொண்டாள். சித்தார்த், “இந்த தாமரை இதழ் எதுக்குத் தெரியுமா செல்லம்?” என்று தாமரைப்  பூவின்  இதழ்களை  மெல்ல அவள் முகத்தில்  வருடியவாறு  கேட்டான் .

மது தலையை  அசைக்க  அவள் இதழ்களில் முத்தமிட்டு  “காலையில் எழுந்து  என்னைப்  பார்த்ததும்   தாமரை மாதிரி மலர்கிறாயே அதுக்குத்தாமரை” என மது அவன் கன்னத்தில் கொலமிட்டவாறு, “அப்போ மற்ற நேரத்தில் நான் உங்களைப் பார்த்து மலர்வது இல்லையா?” என கேள்வியாக கேட்டதும்,

சித்தார்த், “அதற்குதானே செல்லம் எல்லா நேரத்தில பூக்கற பூவையும் சேர்த்திருக்கேன். இரவு நேரத்தில் சந்திரனைக் கண்டு மலரும் அல்லிப்பூ என்று அதையும் எடுத்துக் காட்டி  இந்த  அல்லிராணிக்கு  அல்லிப்பூ இன்னைக்கு இருக்கற  மூட்ல  நான் கொடுப்பதை எல்லாம்   கொடுத்தா  காலைல  சிவந்து  இந்த  அல்லி  செந்தாமரை  ஆயிடும்”  என்று மெல்ல  இதழ்களை  ஒற்றத்தொடங்கினான்.
“உன்னோட கள்ளமில்லா மனசுக்கு இந்த மல்லிகை, உன்னோட அன்பாலே எங்கள் இதயங்களை எல்லாம் கட்டிப்போட்டு அரசாலும் என்னோட இதய ராணிக்கு இந்த இருவாட்சி, எந்த சூழ்நிலையிலும்  மனம் தளராமல் இத்தனை வருஷமாக எனக்கு எல்லா விதத்திலும் பக்கபலமாக இருக்கும் உன்னோட அந்த தைரியத்துக்குச் சம்பங்கி, வீட்டில் இருப்பவர்களை மட்டும் இல்லாமல் மற்றவர்களிடமும் உன்னோட அன்பைக் கொடுத்து அனைவரின் அன்பையும் சேர்த்து வைத்திருக்கும் இந்த பாசமான இதயத்துக்கு நித்தியமல்லி, இத்தனை குணமும் சேர்ந்த உன்னுடைய காதல் மனதை எனக்கு கொடுத்திருக்கிறாயே அதற்கு  இந்த ரோஜா” என ஒவ்வொரு பூவையும் அவள் குணத்துடன் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே அந்த உதிரி பூக்களை எடுத்து அவள் மீது தூவினான்.

 

“அத்தனை பூக்களும் சேர்ந்து இருக்கும் நந்தவனம் போல இத்தனை குணங்களும் சேர்ந்த நீ எனக்கு கிடைத்திருக்கிறாயே அதற்கு இந்தக் கதம்ப மாலை” என அனைத்து பூக்களையும் சேர்த்து கட்டிய கதம்ப மாலையை  எடுத்து மதுவின் கழுத்தில் போட்டான்.

 

அவன் காதல் கடலின் ஆழத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டவளால் நீந்தி கரை சேரமுடியாமல் தத்தளித்து அதிலேயே மூழ்க விரும்பியவள்  பேச வார்த்தையின்றி அமர்ந்திருந்தவளை, “ஹலோ மேடம் என்ன ஆச்சு?” என அவள் முகத்தின் முன்பு கைகளை ஆட்டினான்.

“சி..சித்து…!!” என தடுமாறியவள் அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் தாவி அணைத்துக்கொண்டு “உங்களுடைய காதல் எவ்வளவு உயர்ந்த காதல். என்னுடைய ப்ளஸ் மட்டுமே சொல்லி இருக்கீங்களே?” என்றாள்.

 

“மது காதலில் வெறும் ப்ளஸ் மட்டும்தான் தெரியும், அப்படியே மைனசாக இருந்தாலும் அதையும் நான் ப்ளஸ் ஆக மாற்றிவிடுவேன். ப்ளஸ்  மைனஸ் ரெண்டையும் சேர்த்து ஏற்றுக்கொள்வதுதான், காதல். தெரியுமா?” என ரகசியமாக அவள் காதில் சொன்னான்.
அவள் கரமாலையை  அவன்  கழுத்தில்  போட்டு  மலர்  மாலையாய்  அவன்  மார்பில்  சாய்ந்தவள், “ஆனாலும் உங்க அளவுக்கு எனக்குப் பரந்த மனம் கிடையாது சித்து” என்றாள்.

 

“யார் சொன்னது மது உன் மனமும் பரந்த மனம் தான் தன்னலம் இல்லாத மனம், நீ ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, எத்தனை துன்பம் வந்த போதும் அதையல்லாம் எதிர்த்து போராடி, இன்று வெற்றி மங்கையாக வலம் வருகிறாயே” என்றான்.

 

“அதற்கெல்லாம் காரணம் நீங்க தான். நீங்க மட்டும் என் வாழ்கையில் வரவில்லை என்றால், என்னை சுற்றி இருப்பவர்களுடைய சந்தோசம், நிம்மதி எதையும் பார்த்திருக்க முடியாது, உன்னை சரணடைந்ததால் தான் எனக்கு இன்று இத்தனை உயர்வும்” என்றாள்.

“நீ என்னை சரணடைந்தாய், நான் உன்னிடம் சரணடைந்தேன், இப்போது உன்னில் நான் என்னில் நீ. நீ பாதி நான் பாதி” எனச் சொல்லிக்கொண்டே இருவரும் ஒருவரிடம் ஒருவர் சரணடைந்துக்கொண்டிருந்தனர்.

நீ பாதி  நான்  பாதி  கண்ணே
அருகில்  நீயின்றி  தூங்காது  கண்ணே
நீ  இல்லையே இனி,  நான்  இல்லையே
உயிர்  நீயே  ..

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -61

Download WordPress Themes and plugins.Free Download Nulled WordPress Themes and plugins.அத்தியாயம்—61   காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *