Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba Ninnai Saranadainthen -61

Sponsored

Shenba Ninnai Saranadainthen -61

அத்தியாயம்—61

 

காலையிலிருந்து அனைவரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, மது மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். தேவகியும், ராம மூர்த்தியும், வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்து சென்றனர். “அக்கா ஒரு வழியா பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிவு செய்துட்டீங்க” என ராஜி சொல்ல. “எல்லாம் கடவுள் செயல் ராஜி, விமலா வாங்க இப்படி உட்காருங்க. வாம்மா வித்யா, மேகலா எப்படியிருக்கீங்க? செக்அப் போய் வரீங்களா?” என விசாரித்துக் கொண்டிருந்தார்.

 

“பெரியம்மா மது எங்கே?” என்றாள் வித்யா. “மேல அவ ரூம்லயிருக்காம்மா போய் பாரேன்” என வித்யாவையும் மேகலாவையும் அனுப்பி வைத்தார்.

 

“சித்து பேசாம நில்லுங்க சித்து, நீங்க என்ன சின்ன குழந்தையா? இன்னைக்கு என்னவோ புதுசா என்னை டைக் கட்டிவிட சொல்றீங்க?”என்றாள். மது சித்தார்த்திற்கு டைக் கட்டிக்கொண்டிருக்க சித்தார்த் மதுவின் இடையை பற்றி அணைத்தபடி நின்றிருக்க மது புலம்பிக்கொண்டே டையைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

 

டையைக் கட்டி முடித்ததும் விலக முயன்றவளை விடாமல் அவள் இடையில் சித்தார்த்தின் கரங்கள் விளையாட, “என்னங்க இது, எல்லோரும் வந்திடுவாங்க. கிளம்பியாச்சு இல்ல, நல்ல பிள்ளை இல்ல. கீழே போங்க. நான் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்” என அவன் தாடையை பிடித்து கொஞ்சியபடி சொன்னாள்.

 

“ஹே … ஏஞ்சல் இன்னைக்கு என்னவோ தெரியலைடா அப்படியே உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கு. என் கைக்குள்ளேயே  வைத்திருக்கணும் போலிருக்கு. என்ன மாயம்டா செய்த, என்னை இப்படி மயக்கி வச்சிருக்க?” என்றான் கிறக்கமாக.

 

உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தவளின் முகத்தைப் பற்றி அருகில் இழுத்தவன், “மது….மை….ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல்” என கிறக்க குரலில் கொஞ்சிக்கொண்டே அவள் முகமெங்கும் இதழ் பதித்தான். தன் முகம் சிவக்க வாங்கிக்கொண்டு அவனுக்குப் பதில் கொடுத்துக்கொண்டிருந்தவள் நிலைமையை உணர்ந்து, “சித்து எல்லோரும் வந்திடுவாங்க கிளம்பி போகணும் சித்து” எனச் சொன்னாலும் குரல் வெளியே வராமலும், அவனிடமிருந்து விலகாமலும் சொன்னாள்.

 

அவனும் அவளை விலக்காமல், “போவதென்றால் போ” என்றான்.

 

“போ போன்னு சொல்லிட்டு இப்படி என்னை விடாமல் பிடித்திருந்தால் என்ன அர்த்தம்?” என பேசிக்கொண்டே தன்னாலும் அவனிடமிருந்து தன்னை மீட்டுக்கொண்டு வர முடியாமலும், அவனது அன்பின் வேகத்தில் கட்டுண்டு,  தன் இரு கைகளையும் மாலையாக கோர்த்து அவன் கழுத்தை சுற்றி போட்டவள்……

 

“அச்சச்சோ….., அய்யோ…!! ஐயம் சாரி” என்ற வார்த்தைகளால் திடுக்கிட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, மேகலாவும், வித்யாவும், கதவை மூடிக்கொண்டு வெளியே செல்வதைப் பார்த்ததும், மது வெட்கத்திலும், சித்தார்த் ஒருவிதமான தவிப்பிலும் இருக்க, சமாளித்த சித்தார்த், “மது நான் கீழே போறேண்டா, நீ சீக்கிரம் வா” என கட்டிலில் அம்ர்ந்திருந்தவளின் கரத்தை பிடித்து அழுத்திவிட்டுக் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே சென்றான்.

 

வெளியே மேகலாவும், வித்யாவும், மனம் நிறைய மதுவின் மாற்றம் குறித்து சந்தோஷத்துடனும், இப்படி அவர்களின் அந்தரங்கத்தில் அத்து மீறி நுழைந்துவிட்டோமே என சற்று கவலையுடனும் நின்றிருக்க, வெளியில் வந்த சித்தார்த் சாதாரணமாக இருவரையும் விசாரித்து விட்டு, “உள்ளே போங்க” எனச் சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.

 

உள்ளே சென்ற இருவரும், மதுவின் அருகில் சென்று நிற்க மது எழுந்து நின்றதும் வித்யா , “சாரிமா நாங்க ரெண்டுத் தடவை கதவை தட்டினோம் ஆனால், குரலே இல்லை அதனால் தான்….” என விளக்கம் சொல்ல நிமிர்ந்து இருவரையும் பார்த்த மது, “பரவாயில்லை” என நாணப்புன்னகை புரிய மேகலா, “அத்தான் சரியா சொல்லி இருந்தார் மது, மது சீக்கிரமே மனம் மாறிவிடுவாள், சித்தார்த் அவளைப் பார்த்துப்பார். பொறுப்பான கைகளில் நாம் மதுவை ஒப்படைத்துவிட்டோம் எந்தக் கவலையும் நமக்கு வேண்டாம் அப்படின்னு. அது இன்னைக்கு உண்மையாக ஆகிடுச்சி”.

 

“உங்க அண்ணன் இதை கேட்டால் எப்படி சந்தோஷப்படுவார் தெரியுமா? எங்களுடைய இத்தனை நாள் வேண்டுதல் வீண் போகவில்லை. சரி கீழே போகலாமா?” என ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளை கேட்டதும், “ம்ம்…” என்று சொல்லிக்கொண்டே என்னோட சந்தோஷம் எத்தனைப் பேரை சந்தோஷபட வைக்கிறது. ஆனால், இவ்வளவு பாசமாக இருப்பவர்களை நான் எவ்வளவு,கவலைப்பட வைத்திருக்கிறேன்’என எண்ணிக்கொண்டே கீழே வந்தவள் அங்கிருந்த தன் உறவினர்களை எல்லாம் பார்த்து சகஜ நிலைக்குத் திரும்பினாள்.

 

சற்றுநேரத்தில், ஜீவா, சுரேஷ், ரமேஷ், அவன் அம்மா, கீதா, சம்மந்தி வீட்டினர், மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருக்க,அத்வைதும், ஹரியும், ஸ்ரீயை அழைத்துவர சென்றுவிட, சித்தார்த், அஷ்வந்த் இருவரும் வீட்டில் இருந்து அனைவரையும் வரவேற்று,உபசரித்துக்கொண்டிருந்தனர்.

 

ஸ்ரீ ராமும் வந்து விட நிச்சய தாம்பூலம் சிறப்பாக நடந்து முடிந்தது. மதுவும், மீராவும், வீட்டு மருமகள்களாக எல்லாவற்றையும் பொறுப்பாக செய்துக்கொண்டிருந்தனர். இடையிடையே சித்தார்த்தும், மதுவும், கண் ஜாடையிலேயே பேசிக்கொள்ளவும் தவறவில்லை. அது மற்றவர் கண்களுக்கும் தவறவில்லை.

 

ஸ்ரீ ராம் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றதும், நண்பர்கள் கூட்டம் முழுதும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழே அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்க, நேரம் ஓடிக்கொண்டிருந்தது, அஷ்வந்த் வழக்கம் போல தன் ஜோக்குகளால் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

 

பேச்சு திசை மாறி திசை மாறி, கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சனைகளை பற்றி வந்து நின்றது. ஆண்கள் அனைவரும் பிரச்சனைகளுக்கு முழுக்காரணமும் பெண்களே என்று சொல்ல, பெண்களோ ஆண்களே என சூடாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

 

அஷ்வந்த், “இங்க பாருங்க. பெண்கள் எல்லோரும் வெளிய கிளம்ப சொன்னால் அவ்வளவு தான் நாளைக்குப் போறதுக்கு நாம் இன்னைக்கே சொல்லணும். நீங்களே ‘லேடி’ன்னு தமிழ்ல எழுதிட்டு அதை ரிவேர்ஸ்ல படிங்க ‘டிலே’ ன்னு வரும் என்றதும், “டேய் அஷ் எப்படில்லாம் திங்க் பண்றடா. மேதைடா நீ” என்றான் சுரேஷ்.

 

“நன்றி தலைவா” எனச் சொல்லிவிட்டுச் சிரித்தான்.”போதும்டா ரம்பம், கொஞ்சம் உன் வாயை மூடு. உனக்கு வரப்போறா பாரு ஐயோ பாவம் அந்த மகராசி எங்கே இருக்காளோ” என வானத்தைப் பார்த்து கையைத் தூக்கி சொன்னாள்.

 

“உனக்கே ஒரு ஸ்ரீ ராம் கிடைக்கும் போது எனக்கு ஒரு ஸ்ரீ தேவி கிடைக்க மாட்டாளா?” என பந்தாவாக கூற, தீபக்கும், மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். “என்ன அண்ணி இப்படி மர்மமா சிரிக்கிறீங்க? என்ன விஷயம்?” என்றான்.

 

“உங்க அண்ணிக்கு நானும் அவளும் சின்ன வயசுல போடும் சண்டையெல்லாம் ஞாபகம் வந்துவிட்டதாம்.” என்றான் தீபக்.

 

“மது போடாத சண்டையா நாங்க வாங்காத அடியா? அப்பா இப்போ நினைத்தாலும் அப்படியே நடுங்குது உடம்பு” என்றான் சுரேஷ்.

 

“போதும் போதும் அப்படியே பேசி வேற டாபிக் போய்டாதீங்க. முதலில் விஷயத்தை முடிங்க. மது நீ சொல்லுடி உன்னோட கருத்தை” என கீதா சொன்னதும், மது , “என்னைப் பொறுத்த வரைக்கும் பிரச்சனை வர ரெண்டு பேருமே தான் காரணம்” என்றதும், சுரேஷ், “மது நீ நியாயவாதி எப்படி உண்மையை சொல்ற பாரு?” என்றான்.

 

“ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டு பேருக்கும் எதனால் பிரச்சனை வருது? ரெண்டு பேரும் முதலில் மனம் விட்டு பேசுவது கிடையாது. ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கை வைக்கணும். தெரியாமல் செய்யும் தவறை பெரிசு பண்ணக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையாக ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வராது. இது தான் என்னுடைய கருத்து” எனச் சொன்னதும் அனைவரும் மதுவின் கூற்றில் உண்மை இருப்பதாக சொல்லிக்கொண்டனர்.

 

மது சித்தார்த்தை திரும்பிப் பார்க்க அவன் முகமோ கலவையான முக பாவத்தை வெளிப்படுத்தியது. குழப்பம் நிறைத்து காணப்பட்டது. அன்று சுபா வீட்டில் இருந்த போது சித்தார்த்தின் முகம் இதே போல தானேயிருந்தது. இவனுக்கு என்ன பிரச்சனை. இன்று கட்டாயம் என்ன விஷயம் என கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அவன் நிம்மதி தான் தான் வாழ்க்கை என நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

 

இரவு அனைவரும் கிளம்பி சென்றுவிட, அனைவருமே அசதியிலிருந்தனர். சுபா, மது, மீரா மூவரும் சமையலறையை சீர் படுத்திக்கொண்டிருந்த போது அங்கே வந்த தேவகி, “போதும்மா மூணு பேரும் போய்ப் படுங்க. நேரம் ஆகுது. காலையில் எழுந்து மற்ற வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம். இந்தா மூணு பேரும் பாலை எடுத்துக்கொண்டு கிளம்புங்க. சொன்னா கேட்க மாட்டீர்கள்” என மூவரையும் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.

 

அறைக்கு வந்த மது கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தவள், “என்னங்க இப்படி தீவிர சிந்தனையிலிருக்கீங்க?” என்றாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தவனின் கையை பிடித்து பாலை அவனிடம் கொடுத்தவள் “நீங்க குடிங்க. நான் போய் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்” எனச் சொல்லிவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே குளியலறைக்குச் சென்றாள்.

 

அலுப்பு தீர நன்றாக குளித்துவிட்டு வந்தவள் தான் கொடுத்துவிட்டுச் சென்ற பாலை குடிக்காமல் எங்கே சென்றுவிட்டான் என பால்கனியில் எட்டிப்பார்த்தவள் தலையை அழுந்த கோதிக்கொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தவனைக் கண்டதும், அருகில் சென்றவள் பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொண்டு அவன் முதுகில் தான் கன்னத்தைப் பதித்துக்கொண்டாள்.

 

சித்தார்த் கண்களை மூடிக்கொண்டு நின்றிருந்தான். அவளை விலக்கவும் இல்லை. அணைக்கவும் முயலவில்லை. ஒருவிதமான தடுமாற்றத்துடனேயே இருந்தான். அவனிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததில் மது அவன் எதிரில் வந்து நின்றாள். ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் சென்றவனை, குழப்பத்துடன் பின் தொடர்ந்தாள்.

 

இரு கைகளிலும் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவன் எதிரில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.”என்னங்க என்ன ஆச்சு உங்களுக்கு? நானும் இந்த இரண்டு வாரமாக பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். நீங்க அடிக்கடி ஏதோ யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். என்ன ஆச்சு உங்களுக்கு? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? ஆனால், அதுக்கெல்லாம் நீங்க இப்படி அப்செட் ஆகமாட்டீங்கலே? எதாவது சொல்லுங்க. எனக்கு உங்களை இந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை.” என கெஞ்சலாக சொன்னதும் அவளை அருகில் அமரவைத்து அவள் கையை பற்றிக்கொண்டான்.

 

“எனக்கு உன்னிடம் இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை மது? என்னை நினைத்து, என் செயலை நினைத்து நானே தினம் வேதனையிலிருக்கிறேன். பல முறை உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணுவேன் ஆனால், என்னால் முடியவில்லை.” அவன் சொல்ல சொல்ல மதுவின் மனதில் ஒரு பயம் சூழ ஆரம்பித்தது.

 

“அதுவும் நீ இன்னைக்குப் பேசியதை கேட்டதும், இனியும் உன்னிடம் மறைக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை” என்றவன் ஒரு முடிவுடன் எழுந்து சென்று தன் பீரோவைத் திறந்து அடியில் வைத்திருந்த அந்த டைரியை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான்.

 

“மது இந்த டைரியை படி என்னுடைய் இந்த நிலைக்கான விளக்கம் உனக்கு கிடைக்கும். நான் ஒரு ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன்”என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் நடுங்கும் விரல்களால் அந்த டைரியைத் திறந்தாள்.

 

முன்னால் சில பக்கங்கள் வெற்றுத்தாளாக இருந்தது. திருப்பிக்கொண்டே வந்தவளின் கண்கள் ஓரிடத்தில் நிலைத்தது. சித்தார்த்தின் அழகிய கையெழுத்தில்,எழுதி இருந்த கவிதை

 

“பெண்ணே நீ என் தேவதை

பார்த்தவுடன் என் நெஞ்சில்

நிறைந்த தாரகை

நீயா அல்லி ராணி

இல்லை இல்லை

என் இதய வீட்டில்

குடியிருக்கும் என்

இதய ராணி …..

என் இதய சிம்மாசனத்தில்

அமர்ந்திருக்கும்

உன்னை நான்

மாலைசூட்டி ஆக்குவேன்

என் பட்டத்து ராணி…..”

 

இந்தக் கவிதையை வாசித்தவள் மெதுவாக திருப்பியவள் அங்கிருந்த போட்டோவை கண்டதும் நம்ப முடியாமல் விழி அகல பார்த்தாள். ஒவ்வொரு பக்கமாக படித்துக்கொண்டே வர அவள் நெஞ்சில் தோன்றிய உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவள் நெஞ்சக்கூட்டுக்குள் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள் அலை மோதின

 

மொத்த டைரியும் படித்தவள் அப்படியே பொத்தென சோஃபாவில் அமர்ந்தாள். ஒன்றரை மணி நேரமாக மனக்கலக்கத்துடன் பீச்சில் அமர்ந்திருந்த சித்தார்த் வீட்டை நோக்கி நடந்தான். தன் அறைக்கதவைத் திறந்தவன், கண்களை மூடி உதடுகளை இறுக மூடியபடி, தன்னைக் கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தவளை நெருங்கிய சித்தார்த், “மது” என அவள் தோளில் கையை வைத்ததும்  சரேலென்று அவனை நிமிர்ந்து பார்த்த அவள் விழிகளில் தோன்றிய பாவம் இன்னதென்று சித்தார்த்தால் சட்டென்று வரையறுக்க முடியவில்லை.

 

அவ்வளவு நேரமும் தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவளால் தன் எதிரில் இருந்தவனைக் கண்டதும், “நீங்களா..? நீங்களா..? என்னை சந்தேகப்பட்டிங்க சித்து!!!” என மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே அவனிடமிருந்து விலகி பின்னாலேயே சென்றுக் கொண்டிருந்தவளை,இரண்டே எட்டில் அணுகியவன், “இல்லடா மது….” என பேசத்தொடங்கியவனை “வேற வேற யார் சந்தேகபட்டிருந்தாலும்  பரவாயில்லை. நீங்க…நீங்க…நீங்க எப்படி சித்து சந்தேகப்படலாம்? அதும் என்னை… என்னைப்போய்…” என கத்திக்கொண்டே  பாய்ந்து அவன் சட்டையை உலுக்கியபடி கேட்க, அடிபட்ட மானின் கதறலாய் அவள் வார்த்தைகள் அவன் காதில் நுழைந்தது. ‘இதற்கு என்ன பதில் சொல்வேன் கடவுளே!!!’ என்று அவன் மனம் அரற்ற தொடங்க அதற்கு மேல் அவள் கதறல் வார்த்தைகள் அவன் காதில் நுழைந்தாலும் கருத்தில் பதியவில்லை.

 

“மது ப்ளீஸ்டா… அழாதே” எனச் சொன்னதும் அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் அவன் மார்பிலேயே சாய்ந்து கதறினாள், “ஏன் ..ஏன் .? சித்து நீங்க என்னிடம் இருந்து மறைச்சீங்க. நீங்க என்னைக் காதலித்ததை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? எதுக்காக சொல்லாமல் என்னிடமிருந்து விலகி போனீர்கள்? நீங்க அன்னைக்கே என்னிடம் சொல்லி இருந்தால், அர்ஜுன்னு ஒருவன் என் வாழ்க்கையில் வராமலேயே போயிருப்பானே. வேற ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, உயிரோடு இருந்திருப்பானே. என் வாழ்க்கையும் திசை மாறி போகாமல் இருந்திருக்குமே. நாமும் சந்தோஷமாக இருந்திருக்கலாமே? ஏன் சித்து நீங்க முதலிலேயே சொல்லவில்லை? நீங்க என்னை சந்தேகப்பட்ட போதாவது நேரடியாக வந்து என்னிடம் பேசி இருக்கலாமே? ” என தன் மீது சாய்ந்துக்கொண்டு புலம்புபவளை தேற்ற வழி தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

 

அவன் மனதில் மீண்டும் மீண்டும் நீ என்னை சந்தேகபட்டாயே? என்ற அந்த ஒரு கேள்வியே சுற்றி சுற்றி வந்து அவனை சுட்டேரித்துக்கொண்டிருக்க அவள் புலம்பிய மற்ற எதுவும் அவன் மனதில் பதியவில்லை. மனம் நிறைய வலியுடன் ஒன்றும் பேசாமல் அவளை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தான். தான் இவ்வளவு தூரம் கத்தியும் அவனிடம் இருந்து ஒரு பதிலும் வராததால், நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் ஒரு நிமிடம் திகைத்தாள். உலகத்தின் அத்தனை சோகத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டவனைப் போன்ற அவன் முகபாவனை அவளைத் திகைக்க வைத்தது. அவள் வாயிலிருந்து மேலும் வெளிவர துடித்த வார்த்தைகள் அப்படியே அடங்கின.

 

மெல்ல தன் அணைப்பிலிருந்து விலகத்தொடங்கியவளை சித்தார்த்தின் கரங்கள் அவளை விலகவிடாமல் இறுகப்பற்றியது. தன்னை மறந்து மீண்டும் அவன் மார்பில் ஒண்டியவள் கண்களில் இருந்து ஆறாய் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

 

அந்த ஆற்றில் கலக்க துடிக்கும் அருவி நீர் போல் அவன் கண்களில் இருந்தும் கண்ணீர் வெளிவர ஆரம்பித்தது. தன் மேல் விழுந்த முதல் இரண்டுத் துளி கண்ணீரை உணர்ந்த மது, அவனை நிமிர்ந்து பார்க்க, கலக்கிய இருவரின் கண்களிலும் அடுத்தவர் உருவம், பனித்திரையின் ஊடே பார்பதுபோல்தான் தெரிந்தது.

 

தன்னை மறந்து கத்தியதால் எழுந்த உணர்ச்சி வேகத்தில், அவள் உடல் தள்ளாடுவதை உணர்ந்த சித்தார்த், அவளை மெல்ல நடத்தி, கட்டிலில் அமர வைத்தான். பயத்தில் இருக்கும் புறாவின் சிறகுகள் போல், அவள் உடல் நடுங்கவும் அவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டான்.

 

சிறு குழந்தையைத் தேற்றுவது போல் அவன் விரல்கள் அவளை வருடிக்கொடுத்தன. ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை அவனுடைய அந்த வருடல் தந்தது. அவளது அழுகை மெல்ல விசும்பலாகி, ஓய்ந்து போய் அவள் தூங்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது.

 

எதிலிருந்தோ அவளைக் காப்பாற்றத்துடிப்பவன் போல் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு இறுக அணைத்திருந்த சித்தார்த், தூக்கத்தில் அவள் தளர்வதைக் கண்டதும், அலுங்காமல் அவளை படுக்கையில் படுக்க வைத்தான்..

 

தூக்கத்திலும் விசிக்கும், அவள் நிலைக் கண்ட அவன் நெஞ்சம் உலைக் கலனாய் கொதித்தது. என் மதுவை இனி, கண் போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேனே ஆண்டவா? இன்று அந்தக் கண்ணில் வழியும் கண்ணீரைக்கூட என்னால் துடைக்க முடியவில்லையே?? அதற்குரிய தகுதியும் எனக்கில்லையே, அவள் கேட்ட ஒரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லையே?? என்று தன்னைத்தானே நொந்து கொண்டவன்.

 

தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர், காய்ந்து இருப்பதையுணர்ந்து, போய் குளிர்ந்த நீரை அடித்து, முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவன்,அந்த அறையில் மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். மது நல்ல உறக்கத்தில் இருப்பதை தெளிவு படுத்திக்கொண்டவன். ஒரு பெருமுச்சுடன்,தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு ஒரு வேகத்துடன் கிளம்பினான்.

 

மதுவின் கண்ணீர் துளிகள் பட்டு, கறையாகியிருந்த அவனுடைய சர்ட், கண்ணில் பட்டாலும் அது அவன் கருத்தில் எட்டவில்லை, ஒரு வருத்தமான பாவனையில், தலையைக் குலுக்கியவன், காரை இயக்கி அங்கிருந்து கிளம்பினான்.

 

விவரம் தெரிந்த நாளில் இருந்து காரை இயக்கிக் கொண்டிருப்பதால், அனிச்சை செயலாக கைகளும் கால்களும் ஒத்துழைக்க கார் சாலையில் போய் கொண்டிருக்க, அவன் மனம் மதுவின் வார்த்தைகளிலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும், தன் காதுகளில் ஒலித்த அவள் கதறல் ஒலி மட்டுமே அவனை ஆக்கிரமித்திருந்தது.

 

வெளிக்காற்று முகத்தில் பட்டு, சிறிதே சமநிலை அடைந்த அவன், சடாரென்று காரை நிறுத்தினான். ‘ஓ மது நீ என்ன சொன்னாய்’, இது வரை அவள் கதறல் ஒலி மட்டுமே காதுகளையும் மனதையும் அடைத்திருக்க, அந்த நொடியில்தான் அவளுடைய வார்த்தைகளின் அர்த்தம், கதறல் ஒலியை கிழித்துக்கொண்டு அவன் மனதில் நுழைந்தது.

 

ஏன் ஏன் ஏன், சித்து நீங்கள் உடனே வந்து சொல்லவில்லை??’ அவளுடைய வார்த்தைகளின் முழு அர்த்தம் முழு வீச்சில் புரிந்ததும்,கோடிப்ரகாசம் அவன் கண்களில் தோன்றியது. அந்த நொடி வரை தன்னை உலகதிலேயே அதிகம் சபிக்கப்பட்டவனாய் உணர்ந்தவன் இப்போது, உலகத்திலேயே அதிகம் ஆசிர்வதிககப்பட்டவனாக உணர்ந்தான்.

 

மது இந்த நிலையிலும் நீ என்னை வெறுக்கவில்லை. உனக்கு என் காதலை உன்னிடம் சொல்லாதது தான் வருத்தமா? அப்படியானால் நான் உன்னைத் தவறாக புரிந்துக்கொண்டதை நீ மன்னித்துவிட்டாயா? நான் தான் நீ சொன்னவற்றின் முழு உண்மையையும் அறியமுடியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தேன். அவ்வளவு நேரமும் மனதில் இருந்த இறுக்கம் மறைந்தது. மனதில் உற்சாகம் பிறந்தது.

 

இதோ வந்துவிட்டேன் என் உயிரே, இனி, என்னையும் உன்னையும் பிரிப்பதற்கு இந்த உலகத்தில் எதற்கும் சக்தியில்லை என்று கூறியபடி,தன் மனம் முழுதும் உற்சாகம் பெருக்கெடுக்க தன்னவளை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் முழு வேகத்தில் அவன் வந்த பாதையில் அவன் காரைத் திருப்பிய போது…..????

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மது, “சித்து…..” என்ற கூக்குரலுடன் அலறித்துடித்து எழுந்தாள்.

About lavender

Check Also

Shenba Ninnai Saranadainthen -62

அத்தியாயம்—62   தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்த மது ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முகம் முழுதும் வியர்க்க, அனிச்சை செயலாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *