Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen / Shenba _Ninnai Saranadainthen 3

Sponsored

Shenba _Ninnai Saranadainthen 3

அத்தியாயம்-3

 

தீபக்குடன் தன் மாமா வீட்டிற்கு வந்து இறங்கிய மது வாசலிலேயே தன் ஸ்கூட்டி நிற்பதை பார்த்துவிட்டு. “ஒ..! தீபக் அத்தான் ரொம்ப தாங்க்ஸ். உங்களுக்குத்தான் நான் கொஞ்சம் வேலை வைத்துவிட்டேன்” என சிரித்துக்கொண்டே சொன்னாள்.

 

“என் அருமை அத்தை மகளின் வாகனத்தை என் கையால் சரிசெய்யும் பாக்கியம் கிடைக்க, இந்த அடிமை எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும்” என நாடக பாணியில் வசனம் பேச மதுவிற்கு சிரிப்பு பொங்கியது.

 

“இப்போ எதுக்கு நீ இப்படி சிரிக்கிறாய்?” என தீபக் கேட்டான்.

 

“இல்ல இந்த வண்டிக்குப் பஞ்சர் ஒட்டும் வேலையை, இந்த ஊர்ல சைக்கில் கடையில் வேலை செய்யும் சின்ன பையனே செய்வான். இதுக்கா நீங்க ஆஸ்திரேலியா போய் எம்.டெக் படித்துவிட்டு இங்கே ஒரு பெரிய கார் கம்பெனியில் வேலை செய்றீங்கன்னு நினைத்தால் சிரிப்பு வந்தது அதான் சிரித்தேன் “எனச் சொல்லிக்கொண்டே மீண்டும் சிரித்தாள்.

 

“உனக்கு இந்தக் கொழுப்பு கொஞ்சம் கூட குறையல, உங்க ஆபிஸ்ல இருந்து நடந்தே வாடின்னு நடக்க வச்சு உன் கொழுப்பை கரைச்சி இருக்கணும். போனா போகுதேன்னு அம்மா சொன்னதால வந்தேன். வண்டியை சரி பண்ணி எடுத்துட்டு வந்தா, திமிரா பேசற பேசு பேசு. உன் மைக்கை எப்போ? எப்படி?ஆப் பண்ணறதுன்னு எனக்கு தெரியும் அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை ஞாபகம் வைத்து கொள்” என  சிரித்துக் கொண்டே சொல்ல மது அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டுச் சிரிக்க தீபக்கும் மதுவுடன் இணைந்து நகைத்தான் .

 

பைக் சத்தம் கேட்டு இவ்வளவு நேரம் ஆகியும் காணவில்லையே என்று வெளியில் வந்த ராஜி, மது வாய்விட்டுச் சிரிப்பதையே பார்த்துக்கொண்டு நின்றார்.

 

தன் அத்தை  ராஜி வந்து நிற்பதை கண்ட மது சந்தோஷமாக,“அத்தை”  என அழைத்துக்கொண்டே ஒடிவந்து ராஜியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

 

“வா மது” என்று சொல்லிவிட்டு மதுவின் கைகளை விலக்கிவிட்டு ராஜி திரும்பி வீட்டுக்குள் செல்ல ஆரம்பித்தார்.

 

மது தீபக்கை நோக்கி, “என்ன அத்தான் அத்தை கோபமாக இருப்பது போல தெரியுது?” என்றாள் ரகசிய குரலில்.

 

தீபக்கும் “ஆமாம். நீதான் இங்கே வந்து 10 நாளைக்கு மேலே ஆகிவிட்டதே. அதான், அம்மா உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க. நீயே போய் உன் மாமியாரை சமாதானப்படுத்து”என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

 

வீட்டின் உள்ளே சென்ற மது கண்களால் வீட்டை ஒரு முறை அளந்தாள். வீட்டில் யாரையுமே காணவில்லையே? அம்மாவும் அப்பாவும் வரேன்னு சொன்னாங்களே ! எங்கே காணோம்?அம்மா இருந்தாலாவது எதாவது சொல்லி கொஞ்சம் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. இப்போ என்ன செய்வது? என யோசித்துக்கொண்டு இருக்க சமையலறையிலிருந்து கமகமவென காஃபி வாசனை மூக்கைத் துளைத்தது.

 

நேராக சமையலறைக்குச் சென்ற மது, ராஜியை பின்னாலிருந்து கட்டிக்கொண்டாள்.

 

“ஆஹா..! அத்தை இந்த மாதிரி காபி போடுவதை எங்கே இருந்து கத்துக்கிட்டீங்க? யாராலயும் உங்களை மாதிரி காபி போட முடியாது. காபின்னா… அது ராஜிஸ் காபிதான்” எனச் சொல்லி ஐஸ் வைத்துவிட்டு ஒரு கப்பை எடுத்துக்கொண்டு மது தன் அத்தையை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

 

ராஜி அப்போதும் எதுவும் பேசாமல் இன்னொரு கப் காபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றார்.மதுவும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டுத் தன் அத்தையின் பின்னாலேயே ஹாலுக்கு வந்தாள்.

 

ரெப்ரெஷ் செய்து கொண்டுவந்த தீபக்கிடம் காபி கப்பை கொடுத்துவிட்டு அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தார் ராஜி.

 

காப்பி குடித்துக்கொண்டே தீபக், மதுவை நிமிர்ந்து பார்த்தான். மது முகத்தை சிணுங்குவது போல வைத்துக்கொண்டு ராஜிக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். தீபக்கிற்குப் பார்க்க பாவமாக இருந்தது.

சிரித்துக்கொண்டே மதுவை புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்? மதுவும் கண்களை உருட்டி  அத்தை தன் மேல் இன்னும் கோபமாக இருப்பதை காட்டினாள்.

 

“என்னம்மா நீங்களும், உங்க  மருமகளும் இன்னும் சமாதானமாகலையா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

 

“ஆமாம்டா… அத்தை  நீங்க எனக்குப் பேருக்குத்தான் அத்தை. ஆனா, எனக்கு இன்னொரு அம்மான்னு வசனம் பேசினா போதுமா? இல்லை நாம மட்டும் பாசம் வைத்தால் போதுமா?”என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “ஐய்யோ! அத்தை நான் உங்க மேல் பாசம் இல்லாமல் இருக்கேன்னு நினைக்கின்றீர்களா?” என்று கவலையுடன்  கேட்டாள் மது.

 

“பின்னே, உனக்குப் பாசமிருந்தா இந்த அத்தையை பார்க்க வரணும்னு 10 நாளைக்கு மேலே மறந்து இருப்பாயா? உங்க அம்மா சொல்லித்தானே உனக்கு ஞாபகம் வந்தது” என்று சொல்ல,

 

‘ஆஹா..! அம்மா அத்தைக்கிட்ட போட்டு கொடுத்துட்டு இப்போ எங்க போய் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள்?’ என நினைத்துக்கொண்டே, “சாரி அத்தை! வேலை கொஞ்சம் அதிகம் அதான் வரமுடியவில்லை. ப்ளீஸ் அத்தை நான் வேண்டுமென்று செய்வேனா?” என்று கொஞ்சலாக சொல்லிக்கொண்டே, ராஜியின் காலடியில் உட்கார்ந்து அவரது மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

 

ராஜி மதுவின் தலையை தடவிக்கொடுக்க மதுவிற்குப் பழைய ஞாபகத்தில் கண்கள் கலங்கியன. ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

 

ராஜிக்கோ மதுவை பார்க்க பார்க்க எப்படி பட்டாம்பூச்சி மாதிரி சந்தோஷமாக திரிந்தவளை இப்படி சிறகொடிந்த பறவையாக மாற்றிவிட்டாயே..!!! என கடவுளிடம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருந்தார்.

 

சிறிதுநேரத்தில் சமாதானமான மது எழுந்து அமர்ந்தாள்.

 

இருவரும் ஒருவரை பார்த்து மற்றவர் சிரித்துக்கொள்ள, “சரி மது உனக்கு இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும் சொல்லு?”என கேட்க,

 

“எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால், சாப்பிடுவது போல செய்யுங்கள் அத்தை” என கிண்டலுடன் சொல்லிவிட்டுச் சிரிக்க,

 

ராஜியும், “ஆனால், உனக்கு இன்னும் இந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட குறையவில்லை” எனச் சொல்லி தன் மருமகளை அணைத்துக் கொண்டார்

 

“வித்யாவும் கோவிலுக்கு வரேன்னு சொன்ன இங்கே பார்த்தால் ஆளையே காணோம். இந்த ராஜேஷ் அண்ணாவ சொல்லணும். 6மாசமா பொண்டாட்டிய இங்க விட்டுட்டு us போய் உட்கார்ந்திருக்கார். யாரும் எதுவும் கேட்பதில்லை. கல்யாணத்துக்கு வரட்டும் உனக்கு இந்த வேலையே வேண்டாம் நீ இங்கேயே இருன்னு பிடிச்சுவச்சிக்கணும்” என தனக்குள் புலம்பிக்கொண்டே தன் அத்தைக்கு உதவியாக சமையலறையில் வேலை செய்ய நுழைந்தாள்

 

“வித்யா, அம்மா, அப்பா, மாமா எங்கே அத்தை..?”என்று கேட்டாள்.

“வித்யா அவ ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருக்கா. மாமா எதோ மீட்டிங்னு போய் இருக்கிறார். உங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் பக்கத்தில் யாரையோ பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்கள். மது நீ என்ன கோவிலுக்கு கிளம்பவில்லையா..?” என்று ராஜி கேட்க,

“ம்… போகணும் அத்தை! இது 6வது வாரம் அடுத்த வாரம் ஒரு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடிக்கணும்” என மது பேசிக்கொண்டே தன் அத்தைக்கு உதவியாக சமையலறையில் வேலை செய்துகொண்டு இருந்தாள்.

 

“அத்தை, நேற்று அண்ணா, அதான்  உங்கள் அன்பு மாப்பிள்ளைஃபோன் பண்ணினார். கல்யாணத்துக்கு 1 வாரம் முன்னாடி தான் வர முடியுமாம். நான் கூட திட்டினேன் தங்கைக்குக் கல்யாணம். நீதான் மாப்பிள்ளை தோழன், வீட்டுக்கு ஒரே மாப்பிள்ளை. நீயே இப்படி லெட்டா வந்தா அத்தையும், மாமாவும் எப்படி எல்லா வேலையையும் கவனிப்பார்கள்? என்று கேட்டேன். அதெல்லாம் காண்ட்ராக்டில் விட்டு விடலாமென்று கூலா சொல்லிவிட்டார்”என்று அபிநயத்தோடு சொல்லி முடித்தாள்.

 

“சரி அத்தை நான் கோவிலுக்கு கிளம்புகிறேன். வித்யாவுக்காக வெய்ட் பண்ணா லேட் ஆகிவிடும்” என சொல்லிக்கொண்டே கோவிலுக்குச் செல்ல ஆயத்தமானாள்.

 

“மது நான் வேண்டுமானால் உன்னுடன் துணைக்கு வரட்டுமா?”என்ற தீபக்கிடம் இல்லை நான் போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு நான் வித்யாவுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போகிறேன். இந்த அத்தான் ஏதாவது திட்டி என் வண்டி ஏதாவது மக்கார் பண்ணா…” எனச் சொல்லிக்கொண்டே தீபக்கை பார்த்து தலையை சிலுப்பி கொண்டு சோழிங்கநல்லுாரில் உள்ள ப்ரத்தியங்கரா தேவி கோவிலை நோக்கி சென்றாள்.

 

அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு மது கோவிலுக்கு வந்து சேர்ந்தாள். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

 

சித்தார்த்தின் அம்மா தேவகி தன் மருமகள் மீராவுடன் அதே கோவிலுக்கு வந்திருந்தார். பிரகாரத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவகியும் மீராவும் வெளி மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். பிரகாரத்தில் இருந்த மது  கிளம்புவதற்காக எழுந்து வெளியே வந்தாள்.

 

தேவகியும் மீராவும் கிளம்புவதற்காக காரின் அருகில் வந்து நிற்க கார் டிரைவரை காணாமல் கண்களைச் சுழற்றி நாலாபுறமும் சுற்றி தேடிக்கொண்டிருந்தனர்.

 

அந்த காரின் நேர் எதிரில் மது தன் ஸ்கூட்டியை கிளப்பிகொண்டு இருந்தாள்.

 

மதுவை பார்த்த தேவகி, “மீரா நான் சொன்னேனே காலையில் கோவிலில் ஒரு பெண்ணைப்பார்த்தேனென்று! அதோ எதிரில் நிற்கிறாளே… சந்தன கலர் புடைவையில் அந்தப்பெண் தான்” என்று சொல்லவும் மதுவை திரும்பி பார்த்த மீரா, “நல்ல அழகாக இருக்கா அத்தை. நல்ல உயரம், லேசா சுருட்டை முடி  வேற எவ்….வளவு…! நீட்டு முடி?” என்று மீரா பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தாள்.

 

அத்தை மணி ஒன்பது ஆகுது . இந்த டிரைவர் இப்போ பார்த்து எங்கே போய்விட்டார்?” என மீரா புலம்பிக்கொண்டு இருக்கும் போதே டிரைவர் ஒடிவந்தார்.

 

“மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா தெரிந்தவர்கள் வந்து இருந்தார்கள் அது தான் பேசிக்கொண்டு இருந்தேன். உங்களை பார்த்துவிட்டு ஒடிவந்தேன்” என விளக்கம் அளித்துக்கொண்டே காரை எடுத்தார்.

 

கார் ஈ.சி.ஆர். ரோட்டில் திரும்பி திருவான்மியூரை நோக்கி பறக்கத்தொடங்கியது. சாலை கொஞ்சம் வெறிச்சோடி இருந்தது. சற்று தூரத்தில் மது தன் ஸ்கூட்டியில் வேகமாக சென்று கொண்டிருந்தாள்.

 

“அத்தை அங்கே பாருங்க அந்தப் பொண்ணு” என்று மீரா சுட்டிக்காட்ட தேவகி மதுவை பார்த்தார்.

 

“டிரைவர் அண்ணா அந்த பொண்ணு பின்னாலேயே போங்கள்”என்று மீரா சொல்லவும் டிரைவர் “சரிம்மா” என்று சொல்லிவிட்டு மதுவை பின்தொடர ஆரம்பித்தார்.”ஏன் மீரா அந்த பொண்ணு பின்னலேயே போக சொல்கிறாய்?” என்றார் தேவகி. “அந்த பொண்ணு எங்கே இருக்கான்னு தெரிந்து கொள்ளத்தான் அத்தை” என்றாள் மீரா. அதற்கு மேல் தேவகி மீராவை ஏதும் கேட்கவில்லை அவருக்கு தெரியாதா? தன் மருமகளை பற்றி சிரித்துக்கொண்டே பேசாது இருந்தார்.

 

மீராவுக்கு மதுவை பார்ததிலிருந்து சித்தார்த்துக்கு இவளை போன்ற பெண் தான் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. மது கொட்டிவாக்கம் செல்லும் சாலையில் சென்றாள்.

 

“அந்த பொண்ணு பின்னால் போகவா அம்மா….?” என்றார் டிரைவர்.

 

“இல்லை, வேண்டாம் நீங்க வீட்டுக்கு போங்க” என்று தேவகி சொல்ல சரி என கார் திருவான்மியூரை நோக்கி சென்றது.

 

தீபக் வீட்டின் வெளி கேட்டை திறந்து வைத்துக்கொண்டு மதுவை காணாமல் கேட் அருகிலேயே நிலைக்கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். சற்று நேரத்தில் மது வருவதை பார்த்ததும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

 

கேட்டை மூடிவிட்டு உள்ளே வந்த தீபக்  “ஏன் மது நான்தான் உன்னுடன் வரேன்னு சொன்னேனே, பாரு இப்போ எவ்வளவு நேரமாகிவிட்டது….? “என்றான் தீபக்.

 

“முதலில் நிறுத்து. ஒரு முதலாளி அம்மா வரேன் நீ எனக்கு ஒரு சல்யுட் கூட அடிக்கல” என தீபக்கை சீண்டினாள். அவளது சீண்டலை உணர்ந்த தீபக் “ரொம்ப நினைப்பு தான் உனக்கு.

 

“சூப்பரா ஒரு பிகர் போச்சு. அதான் இங்கயே நின்னு பார்த்துட்டு இருந்தேன்” எனச் சொல்லிவிட்டு, மதுவை பார்க்க மது வயிற்றை பிடித்துக்கொண்டுச் சிரித்துகொண்டிருந்தாள்.

 

என்னடா இது இவளை கொஞ்சம் கடுப்படிக்கலாம்முன் பார்த்தா இப்படி சிரிக்கிறாள் என் பார்த்தான்.

 

“ஏய் என்ன..? உனக்கு இவ்வளவு சிரிப்பு” என கேட்க சைட் அடிக்க குடும்பத்தோட வாசல்ல உட்கார்ந்து இருக்கும் ஆளை இப்போ தான் பார்க்கிறேன் எனச் சொல்லிக்கொண்டே போர்டிகோவை நோக்கி சென்றாள்.

 

“வா மது!” என்றாள் வித்யா.

 

“பார்த்தீர்களா பார்த்தீர்களா யாராவது என்னை வான்னு கூப்பிட்டீர்களா?” ஆனால், என் அண்ணி தான் என்னை உள்ளே கூப்பிட்டார்கள்” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “எனக்குப் பசிக்குது மது” என்றாள் வித்யா.

“அடிப்பாவி, என்னை இப்படி காலைவாரி விட்டுட்டியே. நீயெல்லாம் ஒரு அண்ணன் பொண்டாட்டியாடி” என முகத்தை சுளித்துக்கொண்டு வித்யாவின் தலையில் ‘நறுக்’ கென ஒரு குட்டு வைத்தாள் மது.

 

“என் அண்ணன் ரொம்ப பாவம் உன்னை எப்படிதான் சமாளிக்கிறாறோ? நான் நினைக்கிறேன், உனக்குப் பயந்து தான் அண்ணன் அப்பப்போ வெளிநாட்டுக்கு போறேன்னு போய்விடுகிறார் போல” என மது சொல்லவும்.

 

“ஆமாண்டியம்மா உங்க அண்ணன் சின்னக் குழந்தை எனக்குப் பயந்துக் கொண்டு ஒடிபோய் ஒளிந்துகொள்ள” என இருவரும் மாற்றி மாற்றி பேசிகொண்டிருக்க, நடுவில் புகுந்த தீபக் “உன்னை எப்படி மது உங்க ஆஃபிஸ்ல சமாளிக்கிறார்கள்?” என்றான்.

 

“நான் ஆஃபிஸ் போகாட்டி எல்லோரும் ரொம்ப அப்செட் ஆகிடுவாங்க அப்படி யாராவது தவித்தால் என்னோட லிட்டில் ஹார்ட் தாங்காது அதான் நான் முடிந்தவரைக்கும் லீவே போடுவதில்லை. இப்போ கூட அத்தை கல்யாண வேலைக்கு தனியா கஷ்டபடுவாங்கன்னு தான் லீவ் போட்டுட்டு வந்தேன்”என தன் பெருமையை சொல்லிகொண்டு இருக்க தீபக் மதுவிற்குப் பின்னால் நின்றுகொண்டு கைகளால் ரீல் சுற்றுகிறாள் என்று செய்து காட்டினான்.

 

எல்லோரும் அதை பார்த்து சிரிக்க திரும்பி பார்த்த மது தீபக் செய்ததை பார்த்து கோபம் பொங்க, “நான் யாருக்கும் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு யாருடனும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

 

அதை பார்த்த மதுவின் தந்தை,  “மதும்மா உங்க புது எம்.டி எப்படி?” என்று கேட்டதும் தான் தாமதம்.

 

மலர்ச்சியுடன், “அடடா..! நான் அந்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டேனே. எங்க புது எம்.டி பேர் சித்தார்த் அமெரிக்காவில் படித்தார். அங்கேயே கொஞ்சம் நாள் வேலை செய்தார். அப்புறம், கம்பெனி டெல்லியிலிருந்த அவங்க கம்பெனிக்கே மாற்றிக்கொண்டு வந்துவிட்டார். இப்போ ஃப்ரெண்ட் சொன்னதுக்காக, எங்க கம்பெனியிலேயே பார்ட்னரா சேர்ந்திருக்கார்” என தன் கண்களை விரித்து மகிழ்ச்சியுடன் சித்தார்த்தை பற்றி சொல்லிகொண்டிருந்தாள்.

 

இந்த முக மலர்ச்சியால் தனக்குப் பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்.

 

அவள் முக மலர்ச்சியை யார் கவனித்தார்களோ இல்லையோ தீபக் நன்றாகவே கவனித்தான்

 

“எனக்குத்தான் அவரை பார்த்தாலே கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்.

 

“மண்டைல ஒன்னும் இல்லாதவர்களுக்கு மூளை இருக்கிறவர்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றும்” என தீபக் சொல்ல அவன் என்ன சொல்ல வந்தான் என புரியாமலே,“அப்படித்தான் போல” என்று தலையை குலுக்கிகொண்டாள்.

 

பெரியவர்கள் புன்னகையுடன் பேசாமல் இருக்க வித்யாவும்,தீபக்கும் மதுவின் பதிலை கேட்டு ‘களுக்’ கென சிரித்துவிட அப்போது தான் மதுவிற்கு தீபக் கேட்ட கேள்வியும் தான் சொல்லிய பதிலும் புரிந்தது. பெரியவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எனக்கா மண்டைல ஒன்னும் இல்லை நான் ஸ்கூல், காலேஜ் எல்லாத்திலேயுமே outstanding  ஸ்டுடென்ட் தெரியும் தானே”என்றாள் பந்தாவாக.

“அதுதான் எனக்கு தெரியுமே நான் பார்க்கும் போதெல்லாம் நீ உங்க கிளாசுக்கு வெளியே நிற்பாயே அந்த outstanding தானே”என சொல்லிவிட்டுத் தீபக் மதுவின் முகத்தை பார்க்க, அவள் முகத்தில் கோபம் பொங்கியது.

 

பெரியவர்களை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவர்களும் சிரிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை பார்த்த மது,“ஒஹோ..! இன்னைக்கு என்னை காமெடியனாக்கி நடுவில் நிற்க வைத்து நீங்க எல்லோரும் சுற்றி நின்று கும்மி அடிக்கிறீர்களா?’என்று சொல்லிக்கொண்டே உணவருந்திவிட்டு எழுந்து சென்றாள்.

 

தீபக்கின் பார்வை மதுவையே தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தனை நாளுக்குப் பிறகு இவள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிய என்ன காரணம்? என யோசனையாக இருந்தான்

 

அங்கே சித்தார்த் வீட்டில் மீரா மதுவை பற்றி அத்வைதிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.அத்வைத் ஐய்யோ..! பாவமாக மீராவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

 

மீராவாகவே நிறுத்துவாள் என்று இருந்த அத்வைத் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,”ஏன் மீரா என்னை பார்த்தா உனக்குப் பாவமா இல்லையா?”என கேட்க

 

“ஏன் உங்களுக்கு என்ன? என்றாள் நிதானமாக.

 

“அடிப்பாவி ஒரு மனுஷனை கொடுமைப்படுத்த ஒரு அளவு இல்லையா? நீயும் வீட்டுக்கு வந்தது முதல் அந்த பொண்ணைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே, மணி இப்போ பதினொன்று நீயும் நிறுத்துவாய், நிறுத்துவாய்ன்னு பார்த்தா என்னமோ தலைவர்கள் மேடையில் பேசுவது மாதிரி பேசுகிறாயே?”என்றான் சற்று எரிச்சலாக.

 

“நான் ஏன் அந்த பொண்ணை பத்தி உங்களிடம் சொன்னேன் தெரியுமா?” என கேள்வியோடு நிறுத்த என்ன என்பது போல கேள்வியோடு மீராவை பார்த்தான் அத்வைத்.

 

“எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. என் மனசுக்கு ஒன்று தோன்றினால் அது சரியாதான் இருக்கும். அந்த பொண்ணை இந்த வீட்டு மருமகளாக்கனும்னு ஒரு எண்ணம். அதான் அவங்க எந்த ஏரியால இருக்கங்க என்று பார்த்துவிட்டு வந்தோம்” என முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னாள்.

 

அவளுடைய தீவிரமான முகத்தை பார்த்தபடியே, “என்னமோ பாங்கை கொள்ளை அடிக்க போறா மாதிரி தீவிரமா பேசுகிறாயே?”என கிண்டலடிக்க மீரா பற்களை கடித்தாள்.

 

“சரி சரி கோபித்துக்கொள்ளாதே மீரா, இந்த விஷயத்தை நீயே தனியா முடிவு பண்ணிட்டியா எங்க சம்மதம் எல்லாம் வேண்டாமா?” எனச் சொல்லிவிட்டு மீராவின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

 

“மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு நினைத்து பார்த்தாயா? சரி போனா போகுதுன்னு அந்தப் பொண்ணு ஒத்துக்கிட்டாலும் கல்யாணத்துக்குப் பிறகு எப்படி ஒண்ணா இருக்க முடியும்? நீயும் குழதைகளும் என்ன செய்வீங்க?” என்று தீவிரமான முகபாவத்துடன் பேசிக்கொண்டிருந்த அத்வைதை பார்த்த மீரா“ஏன் கல்யாணத்துக்குப் பிறகு நான் என்ன செய்யவேண்டும்?”என சொல்லிக்கொண்டு இருக்கும் போதுதான் மீராவுக்கு, அவன் சொன்ன விஷயம் புரிந்தது.

 

கோபத்தோடு கண்களை உருட்டியபடி, “ ஒ..! கதை அப்படி போகுதா நீங்க மட்டும்தான் இந்த வீட்டில் பிள்ளையா? நான் நம்ம சித்தார்த்துக்குத்தான் இந்த பொண்ணை பார்க்கலாம் என்று சொன்னேன். உங்களுக்கு இந்த மாதிரி வேறு எண்ணம் இருக்கா?எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அப்படியே உங்க கழுத்தை நெரித்து கொன்றுவிடுவேன்” என பற்களை கடித்துக்கொண்டு கழுத்தை பிடிப்பது போல செய்யவும் அத்வைத்துக்கு சிரிப்பாக வந்தது.

 

“ஹேய் மீரா! நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்” என சொல்லிவிட்டுச் சிரித்தான்.

 

“ஐயோ, ரொம்ப அழகுத்தான் எனக்கு தெரியாதா…? நீங்க சொன்னது தமாஷ் என்று, நீங்க நடிக்கும் போது நானும் கொஞ்சம் நடிக்கலாம்னு அப்படி பேசினேன். நீங்க காலேஜில் படிக்கும் போதே என்னை தவிர யாரையும் திரும்பிக்கூட பார்க்க மாட்டீங்களே”  என கொஞ்சலாக சொல்லி விட்டு வெட்கத்துடன் சிரித்தாள்.

 

“அடடா இன்னைக்கு என் பொண்டாட்டி நல்ல மூடில் இருக்காங்க போல, முதலில் நாம் சித்தார்த் கல்யாண விஷயத்தை பேசி முடிச்சுட்டு, அதன் பிறகு நம்ம விஷயத்துக்கு வரலாம்” என தன் மனைவியின் முக சிவப்பை ரசித்துக்கொண்டே அத்வைத் மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்.

 

“நீ சொன்னதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் நம்ம சித்தார்த்துக்கு ஏற்ற பொண்ணாக தான் இருக்கும். சரி அடுத்து என்ன ப்ளான்?” என்றான் அத்வைத். “வீடு கொட்டிவாக்கத்தில் இருக்கு. முதலில் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய் அந்த பொண்ணை ஃப்ரெண்ட் பிடிக்கணும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனா மாதிரி தெரியவில்லை.

 

ஆனாலும் கல்யாணம் முடிவாகி இருக்கா என்று தெரியனும். முதலில் இந்த விஷயத்தை நல்லபடியா முடிச்சுட்டு, அப்புறம் நம்ம சித்தார்த், மாமா எல்லோரிடமும் பேசி கல்யாணத்தை முடிக்க வேண்டியது தான்” என மிகவும் சுலபமாக முடியும் விஷயம் என்று எண்ணிக்கொண்டு மீரா திட்டத்துக்கு மேல் திட்டம் போட்டாள்.

 

ஆனால், நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன…???

About ladys wings

Check Also

Shenba Ninnai Saranadainthen -epilogue 2

EPILOGUE—II   ****************ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு**************   காலையில் எழுந்து குளித்து பூஜையை முடித்துகொண்டு  தங்கள் அறைக்கு வந்த மது, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *