Sponsored
Home / Uncategorized / yennil uraiyum uyir nee – 6

Sponsored

yennil uraiyum uyir nee – 6

உயிர் : 6

 

“என்ன ராம் வேலைக்கு போக மாட்டேன்னு சொல்றியாமே? இது உன் படிப்புக்கு ஏத்த ரொம்ப நல்ல வேலை… சம்பளமும் அதிகம்… அப்படி இருந்தும் போக விருப்பம் இல்லைன்னு சொல்றது சரியில்லையே ராம்?” எங்கோ வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்த ராமின் அருகில் வந்து அமர்ந்த ஆரன் அவனுக்கு அறிவுரை கூற…

 

“எனக்கு வெளிவுலகத்தை பார்க்கவே வெறுப்பா இருக்குண்ணா…?” ராமின் கண்களில் தெரிந்த வலியை ஆரனால் உணர முடிந்தது. ஏனெனில் ஒரு காலத்தில் அவனும் இந்த மாதிரி ஒரு வலியை அனுபவித்தவன் ஆயிற்றே.

 

“ராம்… உன் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக நீ இப்படியே இங்கேயே இருந்துவிட முடியுமா? நமக்காக கஷ்டப்படும் அய்யாவை கொஞ்சம் யோசித்து பார்”

 

“நீங்க சொல்றது புரியுதுண்ணா… ஆனா இந்த உலகம் எனக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லையே”

 

துரோகம்… அதிலும் நம்பிக்கை துரோகம்… அதுவும் தன் மனதுக்கு நெருங்கியவர்களால் ஏற்படும் நம்பிக்கை துரோகம் நாம் சாகும் வரை நம்மால் மறக்க இயலாது. ராமை போலவே ஆரனும் அது மாதிரி நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டு இன்று வரை அதை மறக்க இயலாமல் மனதுக்குள் வைத்து கொண்டு புழுங்கி கொண்டிருக்கிறானே. இதில் அவன் எங்கே ராமுக்கு ஆறுதல் கூறுவது? ஆரன் ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி தன் வேதனையை விழுங்கி கொண்டவன் பின்பு ராமிடம் பேசலானான்.

 

“ராம்… என் கதை உனக்கு தெரியும் தானே? உனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்… அய்யா சொல்லாமல் இருக்க மாட்டார். உதாரணம் காட்டுகிறேன் பேர்வழின்னு என்னை தான் ஏதோ ஹீரோ போல் உதாரணம் காட்டுவார்” நல்லசிவத்தின் அன்பில் அவன் முகம் மலர்ந்தது. அதை கேட்ட ராமின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

 

“அந்த மாதிரி நம்பிக்கை துரோகத்தை சந்தித்து வந்த நானே இந்தளவு இருக்கிறேன்னா… உனக்கு என்னடா ராம்?” ஆரனின் வேதனையை அவனின் குரல் அப்படியே பிரதிபலித்தது.

 

“அண்ணா…”

 

“நீ வேலைக்கு போகணும் ராம்… நம்மை மாதிரி இருக்கும் மற்றவர்களுக்கு நீ ஹெல்ப் பண்ணனும். அய்யா ஒருத்தர் மட்டும் எல்லா சுமையையும் தாங்கி கொண்டிருக்க முடியுமா? அவரின் சுமையை நாம் ஏற்று கொள்வதன் மூலம் தான் அவருக்கு நாம் பட்ட நன்றி கடனை திருப்பி செலுத்த முடியும். நமக்கு துரோகம் செய்த இந்த சமுதாயத்தின் முன் நாம் தலை நிமிர்ந்து நிற்க வேணாமா? கொஞ்சம் யோசித்து பார் ராம்…” ஆரனின் வார்த்தைகள் சரியாய் வேலை செய்தது.

 

“நீங்கள் சொல்வது சரி தான்ண்ணா… நான் வேலைக்கு போறேன்”

 

“இப்போது தான் நீ கம்பீரமான ஆண்மகன்…” ஆரன் அவனை கட்டி கொண்டான். தன்னை போல்… ராமை போல்… இருக்கும் பலரின் வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஆழமாய் விழுந்தது.

 

***********************************************

 

“மிஸ். மயூரி… வெல்டன்… குட் ஜாப்… கீப் இட் அப்…” உயரதிகாரியின் பாராட்டில் மயூரியின் முகம் பூவாய் மலர்ந்தது.

 

“தேங்க்யூ சார்…” என்ற மயூரி அவரின் அறையை விட்டு வெளியில் வந்தாள். ஏதோ மேக கூட்டத்தின் மீது நடப்பது போல் இருந்தது அவளுக்கு. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் மிதந்தாள் அவள்.

 

அவள் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. முதன்முறையாய் அவளின் திறமைக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்த பாராட்டுக்கு அவள் மட்டுமா சொந்தக்காரி… இல்லையே அவனும் அல்லவா… அதற்கு சொந்தக்காரன்! எத்தனையோ முறை வேலை புரியாமல் அவள் விழித்த போது… அவன் தானே அவளுக்கு தெளிவாய் புரியும் படி எடுத்து சொன்னான். அவளை மேலும் கணினி வகுப்பிற்கு செல்ல வைத்தான். அவளின் திறமையை மட்டுமா அவன் வெளி கொணர்ந்தான்? அவளின் மனதினில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் விதைத்து அவளை புது மனுசியாய் அல்லவா வெளி கொணர்ந்திருக்கிறான்.

அன்றொரு நாள் அவள் வேலை புரியாமல் முழித்து கொண்டிருந்த போது… அவன் அவள் முகத்தை வைத்தே அவளின் பிரச்சினையை புரிந்து கொண்டு அவள் அருகில் வந்தான்.

 

“என்ன பேபி… திருவிழாவில் தொலைஞ்சு போன குழந்தை மாதிரி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க?” அவளின் அருகே நாற்காலியை இழுத்து போட்டு சாவகாசமாய் அமர்ந்தவன் அவளை பார்த்து கேட்டான்.

 

அவனிடம் என்னவென்று சொல்வது? ‘எனக்கு வேலை தெரியவில்லை… புரியவில்லை’ என்று அவனிடம் எப்படி சொல்வது? என்று தெரியாமல் தலையை குனிந்திருந்தாள்.

 

“என்னடா… வேலை கஷ்டமாயிருக்கா?” அவளின் கைவிரல்களை ஒவ்வொன்றாய் பிடித்து விட்டபடி அவன் கேட்ட போது அவளுக்கு இதமாய் தான் இருந்தது.

 

அவளின் கணினியை தன் பக்கம் திருப்பியவனுக்கு என்ன பிரச்சினை? என்பதை ஒரு நொடியில் புரிந்துவிட்டது. ஆனாலும் அவன் அதை சரி பண்ணாமல் அவளுக்கு புரியும்படி சொல்லி கொடுத்து… அவளை விட்டே அதை சரி செய்தான். அவன் சொன்னதை வேதவாக்காய் எடுத்து கொண்டு அவளும் அதை கவனத்துடன் செய்ய… சில மணித்துளிகளில் வேலையை வெற்றிகரமாய் முடித்துவிட்டாள்.

 

“பார்த்தியா இவ்வளவு தான்… இதுக்கு போய் நீ யோசித்து கொண்டு இருந்தாயே? உனக்காக இந்த வேலையை நானே முடித்திருப்பேன்… ஆனால் நீ இதை புரிந்து செய்ய வேணும்ன்னு தான் பேசாமல் இருந்தேன்” என்றவன், “பேபி உன்னிடம் உள்ள இந்த பயத்தை விட்டு விடு… அப்புறம் உன் திறமைகள் ஒவ்வொண்ணாய் தானாய் வெளிவரும்” என்றவனை நன்றியுடன் பார்த்தாள்.

 

இன்று அதை நினைத்து பார்த்தவளுக்கு ஏனோ அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் போல் தோன்றியது. அவனின் அறை கதவை அனுமதிக்காக அவள் தட்ட… அவன் வர சொன்னதும் அவன் முன் போய் நின்றாள்.

 

“வா பேபி…. நீ வருவேன்னு எனக்கு தெரியும்?” அவளுக்கு கிடைத்த பாராட்டு பற்றி அவனுக்கு முன்னமே தெரியும். அதான் அவள் எப்படியும் தன்னை பார்க்க வருவாள் என்று அவன் ஊகித்திருந்தான். அதே போல் அவனின் நம்பிக்கையை பொய்க்காமல் தன்னவள் தன்னை தேடி வர அவனுக்கு சந்தோசமாய் இருந்தது.

 

“தேங்க்ஸ்… நீங்க இல்லாம என்னால் இந்தளவுக்கு வந்திருக்க முடியாது ” தன் நன்றியை உண்மையாய் மனப்பூர்வமாய் அவள் சொல்ல… அவனோ எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் அச்சத்தோடு அறை கதவை நோக்க…

 

“என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது” அவளுக்கு பதில் கூறியவன்…

 

“இவ்வளவு பெரியவளா வளர்ந்திருந்தும் தேங்க்ஸ் எப்படி சொல்லணும்ன்னு உனக்கு தெரியலையே பேபி” அவளுக்கு நேரெதிரே வந்தவன் அவளின் இதழை பார்த்து கொண்டு பேச… அவளின் இதயம் தொண்டை வழியாய் வெளியே வந்துவிடுவது போல் வேகமாய் துடித்தது.

 

அவனோ அவளின் அச்சத்தை கண்டு கொள்ளாமல் அவள் முகம் நோக்கி குனிய… அவளோ அடுத்து என்ன நடக்க கூடும் என்பதை ஊகித்தவளாய் பயத்தில் கண்களை மூடி கொள்ள… அதை கண்டு அவன் மனதுக்குள் நகைத்து கொண்டான். தன் ஆள்காட்டி விரல் கொண்டு அவள் முகத்தில் நெற்றியிலிருந்து நேர் கோடாய் கோலம் போட்டவன் கடைசியில் ரோஜா பூவிதழ் போல் மென்மையாய் இருந்த அவளின் மெல்லிய இதழில் வந்து தங்கியவன் அதை மெல்ல வருடி கொண்டே…

 

“தேங்க்ஸ் எப்படி சொல்றதுன்னு நம் கல்யாணத்துக்கு பின் சொல்லி தர்றேன்… இப்போ வேணாம் பேபி…” அவன் மெதுவாய் கூற… அவள் வியப்புடன் கண்களை திறந்தாள்.

 

“சரி அதை விடு… உனக்கு நான் இவ்வளவு செய்திருக்கிறேனே… எனக்கு ஏதும் கிப்ட் கிடையாதா?”

 

“என்… என்ன வே… வேணும்?” அவனின் அருகாமையில்… தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்ளாய் அவளின் வார்த்தைகள் அவஸ்தையாய் தொண்டைக்குள் சிக்கி கொண்டு தவித்தது.

 

“என்ன கேட்டாலும் தருவாயா?” அவள் கண்ணுக்குள் தன் கண்ணை கலந்து கேட்டவன்,

 

“வேறு என்ன கேட்க போகிறேன்… நான் உன்னை காதலிப்பதாய் சொல்லி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நீ இன்னமும் எனக்கு பதில் சொல்லல. எனக்கு உன் காதலை தவிர… இந்த உலகத்தில் வேறென்ன வேணும்?” அவன் அவளிடம் கேட்ட காதல் யாசகம் அவளின் மனதை பிழிந்தது. அன்று தான் முதன் முதலாய் பார்ப்பது போல் தன் முன் நிற்கும் அவனின் முகத்தை பருகுவது போல் பார்த்தாள்.

 

‘இவனுக்கு என்ன குறை? என்னை போன்ற ஒரு பெண்ணின் பின்னால் ஏன் தொங்கி கொண்டு அலைகிறான்? அவனின் கடைக்கண் பார்வைக்காக பல பெண்கள் தவமிருக்க… இவன் என் பார்வைக்காக தவமிருப்பது ஏன்? என்னை இந்தளவுக்கு காதலிக்கிறானா? தாய் பறவை தன் சேய் பறவையை பொத்தி பாதுகாப்பது போல் என்னை பாதுகாக்கும் இவனை விட வேறு யார் என்னை பாதுகாக்க முடியும்? என்னுள் நம்பிக்கை விதையை விதைத்து… தைரியத்தை ஊட்டி என்னை ஒரு மனுசியாய் ஆக்கிய இவனை விட வேறு யார் எனக்கு தோழனாய் இருக்க முடியும்?’

 

‘இதையெல்லாம் விட… வேறு யாரை கண்டும் எழும்பாத என்னின் உள்ளத்து உணர்வுகளை தட்டி எழுப்பி என்னை பெண்ணாய் உணர செய்ய இவனால் மட்டுமே முடியும். வேறு யார் கணவனாய் வந்தாலும் இவனை போன்று என் உணர்வுகளை மதித்து நடப்பார்களா? என்னை புரிந்து கொண்ட… என் உணர்வுகளை மதித்து நடக்கும் இவனின் காதலை ஏற்பதில் இன்னமும் எனக்கு என்ன தடை?’ அவள் மனதில் யோசித்து கொண்டிருக்க…

 

அவனோ அவளின் முகத்தில் தோன்றிய பலவித உணர்வுகளை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான். “என்னம்மா… உனக்கு குழப்பாய் இருக்கா? இன்னமும் டைம் வேணுமா? பரவாயில்லை… டேக் யுவர் ஓன் டைம்…” அவளுக்காக அவன் அப்படி கூறினாலும்… தன் காதலை அவள் ஏற்று கொள்ளாததில் ஏற்பட்ட வலி அவனின் குரலில் தெரிந்தது.

 

தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவன் வேதனை படுவதா? ம்ஹும்… கூடவே கூடாது? அதற்கு மேல் அவளால் தன் மனதை மறைக்க முடியவில்லை.

 

“ஆரன்…” அவனை ஆரத்தழுவி கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள் அவள். அவனோ அவளின் செய்கை தந்த பிரமிப்பில் அப்படியே அசையாது நின்றான். பின் மெல்ல அவளின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி, “உண்மையாவா?” அவனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை.

 

“ம்… ஐ லவ் யூ ஆரன்…” என்றவள் அவன் முகம் காண வெட்கி கண்களை மூடி கொண்டாள்.

 

அவனோ அவளின் வார்த்தையில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாலைவனத்தில் சுடுமணலில் தாகத்தில் தொண்டை வறள சுற்றி திரிந்தவனுக்கு பாலைவன சோலையாய் அவனை குளிர்வித்தது அவளின் வார்த்தைகள். வாழ்க்கையை வெறுத்து போய் ஏதோ உயிரோடு இருக்கிறோம் என்று நடை பிணமாய் வாழ்ந்து கொண்டிருந்தவன் வாழ்க்கையில் அவனின் உயிர் மூச்சாய் வந்தவளை கண்டு அவனின் கண்களில் நீர் துளிர்த்தது.

 

அவனின் கண்ணீர் துளி அவளின் மூடிய இமையின் மேல் விழ… அவள் என்னவென்று கண் திறந்து பார்க்க… அங்கே அவன் கண்களில் கண்ணீர் துளிர்க்க நின்றிருந்ததை கண்டு பதறி போனாள். எப்போதும் கம்பீரமாய், எளிதில் தன் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்காத, ஆண்மையின் இலக்கணத்திற்கு உதாரணமாய் இருக்கும் அவனை காதல் கோழையாக்குவதா? அதற்கு அவளும் காரணமாய் இருப்பதா? அவள் பதட்டத்துடன்,

 

“ஆரன்… என்ன இது? ம்ஹும்… அழ கூடாது… நான் இருக்கிறேன் உங்களுக்கு…” அவனின் கண்ணீர் துளியை அவள் துடைக்க… அவளின் செயலில் மனம் நெகிழ்ந்து போனவனாய் அவளின் கையை இறுக பற்றி கொண்டான்.

 

இத்தனை வருடங்களாய் தனது மன மகிழ்ச்சியையோ, கோபத்தையோ அல்லது அழுகையையோ யாரிடமும் காட்ட முடியாமல் தனக்குள் வைத்து கொண்டு அவன் வெந்து செத்து கொண்டிருந்தான். ‘இல்லை இல்லை உனக்காய் நானிருக்கிறேன்…’ என்று இறந்தவனுக்கு அவள் உயிர் கொடுப்பதை கண்டு அவன் உள்ளம் உருகியது.

 

“போதும் பேபி… எனக்காக நீ இருக்கிறாய்ன்னு… நீ சொன்னதே எனக்கு போதும். இந்த நொடி என் உயிர் போனால் கூட நான் நிம்மதியாய் செத்து போவேன்” உணர்ச்சி பெருக்கில் அவன் கூற… அவனின் வார்த்தையில் அவளுக்கு கண்கள் கலங்கியது.

 

“இன்னமும் நாம வாழவே ஆரம்பிக்கல… அதற்குள் சாவை பத்தி ஏன் பேசுறீங்க?” விம்மினாள் அவள். அவள் சொன்ன பிறகே அவனுக்கு உறைத்தது… தான் அதிகப்படியாய் உணர்ச்சிவசப்பட்டு அவள் மனதை நோகடித்து விட்டோம் என்று.

 

“சாரி… சாரி… பேபி. ஏதேதோ நினைவுகள்… அதில் உன்னையும் சேர்த்து கஷ்டப்படுத்திட்டேன்” என்றவன் நொடிக்குள் தன் உணர்வுகளை மறைத்து கொண்டான். அவளையும் இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு,

 

“நம் காதலுக்கு அச்சாரமாய்…” அவன் குறும்பாய் நிறுத்த…

 

“அச்சாரமாய்…?” என்ன கேட்க போகிறானோ என்ற அச்சத்தில் அவள் கண்கள் பெரியதாய் விரிய,

 

“இங்கே ஒண்ணே ஒண்ணு கொடுக்க கூடாதா?” தன் கன்னத்தை காட்டி அவன் கேட்க… அதில் அவள் நிம்மதியடைந்தவளாய், அவனின் கையை பிடித்து புறங்கையில் தன் இதழை பதிக்க,

 

“இது சீட்டிங் பேபி…” அவன் செல்லமாய் சிணுங்க… அவள் அவனை விட்டு தள்ளி நின்றவள்,

 

“அதெல்லாம் இதற்கு அப்புறம் தான்…” தன் கழுத்தில் கை வைத்து தாலி கட்டுவது போல் அவள் சைகை செய்ய… அதை கண்டவன் மனம் அடைந்த உவகைக்கு அளவே இல்லை.

 

“நிச்சயம் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் உனக்கு தாலி கட்ட தான் போகிறேன். அப்போது வச்சிக்கிறேன் என் கச்சேரியை…” சிரித்தபடி அவன் கூற,

 

“அதை அன்னைக்கு பார்ப்போம்…” என்றவள் பழிப்பு காட்டி விட்டு அறைக் கதவை நோக்கி செல்ல,

 

“பிள்ள பூச்சி மாதிரி இருந்த நீ… இப்போ இந்த வாய் அடிக்கிற? ஆரா… ஆழம் தெரியாமல் கால் வைச்சிட்டியோ?” அவளிடம் கேட்டவன்… பின் பாதியை தனக்கு தானே கேட்டு கொண்டான்.

 

“அப்போ நான் வெறும் மயூரி…”

 

“இப்போ…” கேள்விக்கு விடை தெரிந்தாலும் அவள் வாயால் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

 

“இப்போ…” இழுத்தபடி நாணியவள், “மிசஸ். ஆரனாக்கும் நான்…” முகம் சிவக்க கூறியவள் கதவை திறந்து கொண்டு வெளியில் செல்ல…

 

அவளின் வார்த்தைகள் அவன் மனதில் முழுமையாய் இறங்கி அவன் மனதை இறகை போல் லேசாக்கியது. தன் இருக்கையில் அமர்ந்தவன் கண்களை மூடி கொண்டு பின்னால் சாய்ந்தான். அவள் கூறி சென்ற வார்த்தைகளை அவன் மனம் மெல்ல அசை போட்டது. அதுவே அவனுக்கு சுகமாய் இருந்தது.

 

****************************************

 

“சிறு சிட்டிகையாய் பாசம் பெரும் கடலாய் மாற

மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர

மழை தாரையாய் உள்ளம் பிசுபிசுப்பை பேண

எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண

 

நீ ராதை இனம் சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம் உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன் உன் விரலை பிடித்து

நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்”

 

மயூரியின் மனக்கண்ணில் கல்யாண மேடையில் ஆரனின் கையை பிடித்து கொண்டு அக்னியை வலம் வரும் காட்சி வலம் வர…  அந்நாள் இன்றே அமையாதோ…? அப்படியே அவனின் கையை பிடித்து கொண்டு எங்கேயாவது சென்று விட மாட்டோமா? என்று அவள் மனம் அவனின் அருகாமைக்காக ஏங்கியது.

 

“உயிர் எதையோ தேடும் மனம் அதையே நாடும்

தனி தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள் எதிர் எதிராய் மெய்கள்

எது எதுவாய் ஆகும் விடை கடந்தே போகும்

 

கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்

முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்

உன்னாலே பூரிக்கிறேன் உன் சிரிப்பு சரத்தில்

மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்

 

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்ல கண்ணனே வா

தித்தித்ததை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா”

 

ஆரனின் காதலில் வீழ்ந்திருந்த மயூரியின் மனம் தனது பாவனைகளில் தன் மனதை மறைக்காது வெளிப்படுத்தியது. காதலில் கனிந்திருந்த மனம் அவளின் முகத்தை பூவாய் மலர செய்திருந்தது. அவளின் மனம் முழுவதும் அவனின் எண்ணங்களே ஆக்கிரமித்திருந்தது.

 

“வாவ் எக்ஸ்சலன்ட் மயூ…” மஞ்சரி அவளை கட்டி கொண்டாள்.

 

“உன் கண்கள் என்னமாய் காதலை வெளிப்படுத்துது…” என்று அக்காவின் நடனத்தை சிலாகித்தவள், “மயூ உன் மனதை கவர்ந்தவன் யாரு? அன்னைக்கு புட் கோர்ட்ல பார்த்தோமே அந்த ஹேண்ட்சம் மேனா?” கண்சிமிட்டி கேட்ட தங்கையை கண்டு அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

 

“போடி… எதையாவது உளறாதே…” என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்.

 

“நீ சொல்லலைன்னா போ… நானே கண்டுபிடிக்கிறேன்…” மஞ்சரியின் வார்த்தைகள் அவளை துரத்தியது.

 

தங்கைக்கு பதில் சொல்லாமல் மயூரி மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கு காலை நேர காற்று இதமாய் வீசி அவளுக்கு இதத்தை கொடுத்தது. அவளின் மனம் போலவே அவளின் முகமும் பூரிப்பில் இருந்தது. காலை கதிரவனை பார்க்கும் போது அவளுக்கு ஏனோ ஆரனின் நினைவு வந்தது. அன்று இந்த சூரியனை போல் சுட்டெரிக்கும் பார்வையுடன் இருந்தவன்… இன்று காதலில் வீழ்ந்து அந்த நிலவை போல் அவன் குளிர்ந்து போனதை எண்ணி அவள் மனம் வியப்புற்றது. காதலுக்கு இவ்வளவு சக்தியா? அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் அலைப்பேசி அழைத்தது.

 

“இப்ப தான் உங்களை நினைச்சேன்… நீங்களே ஃபோன் பண்றீங்க. சொல்லுங்க ஆரன்…” அவளின் உற்சாகம் அவனையும் தொற்றி கொண்டது.

 

“நீயாவது இப்ப தான் நினைச்ச… ஆனா நான் உன்னை நினைக்காத நொடி இல்லை” ஏக்க குரலில் கூறியவன், “இன்னைக்கு உன்னை நான் பார்க்க முடியுமா?”

 

“இன்னைக்கு லீவ் நாளில் எப்படி? என்ன காரணம் சொல்லிட்டு நான் வெளியில் வர்றது?” அவள் தவிப்பாய் மறுக்க…

 

“ம்ஹும்… அதெல்லாம் தெரியாது… ஈவ்னிங் பைவ் ஓ க்ளாக் நான் உன் வீட்டு தெரு முனையில் வெய்ட் பண்றேன். நீ கிளம்பி வா” என்றவன் அலைப்பேசியை அணைக்க…

 

‘எல்லாமே ஆர்டர் தான்… நான் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்க கூடாதா?’ என்று போலியாய் அவள் சலித்து கொண்டாலும்… எப்போதடா மணி ஐந்து ஆகும்… எப்போது ஆரனை பார்க்கலாம் என்று அவளின் மனமும் அவனுக்காய் தவிக்க தான் செய்தது.

 

மாலையில் ஏதேதோ பொய் காரணங்களை கூறி அவள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது. எங்கேயும் தனித்து செல்லாதவள் இன்று தனியே செல்கிறேன் என்றால் அனைவருக்கும் சந்தேகம் வாராதா என்ன? ராகவன் தான் அவளை தைரியமாய் அனுப்பி வைத்தார். அவளின் குற்றமுள்ள நெஞ்சம் தந்தையின் நம்பிக்கையில் சிறிது குறுகுறுக்க தான் செய்தது. எல்லாம் அவனை பார்க்கும் வரையில் தான்… அவனை பார்த்த பின்போ அவனுக்காய் பொய் என்ன… எதையும் செய்யலாம் என்று அவளுக்கு தோன்றியது.

 

“இங்கே உட்காரலாம்…” ஆரன் சொன்ன இடத்தில் மயூரி அமர, அவளுக்கு அருகில் அவன் அமர்ந்தான். இருவரும் கடற்கரைக்கு தான் வந்திருந்தனர். தூரத்தில் அலையில் விளையாடி கொண்டிருந்தவர்களை பார்த்து கொண்டிருந்தவள் ஆரனின் மௌனத்தில் அவனை திரும்பி பார்த்தாள்.

 

“என்ன பேசாம இருக்கீங்க?”

 

“பேபி… உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்… அதே மாதிரி என்னை பத்தி உனக்கு…” அவன் முடிக்காமல் அவள் முகத்தை கேள்வியாய் பார்க்க…

 

“உங்களை பத்தி என்ன தெரியணும்? உங்க பேர் ஆரன்… ரொம்ப திறமையானவர்… நல்லவர். அதிலும் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத உத்தம புத்திரன். இந்த சீதைக்கு ஏற்ற ராமன்…” என்றவள் பெருமையாய் அவன் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டாள்.

 

அவளின் வார்த்தையில் அவன் அடைந்த சந்தோசத்திற்கு எல்லையே இல்லை. அவனின் நிம்மதியை சொல்ல வார்த்தைகள் கிடையாது. அவனுக்கு தான் என்ன மாதிரியான நிம்மதியை கொடுத்திருக்கிறோம் என்பதை உணராமல் அவள் அவனை பார்த்து வெகுளியாய் சிரித்தாள்.

 

‘இன்று என்னை எனக்காய் விரும்பும் நீ… நாளை என்னை பற்றி முழு விவரமும் தெரிய வரும் போதும் இதே போல் காதலிப்பாயா பேபி… அப்போதும் எனக்காய் நீ இருக்கிறாய் என்பதை உணர்த்துவாயா பேபி? இந்த உலகமே என்னை வெறுத்தாலும் கவலையில்லை… ஆனால் நீ என்னை வெறுத்து ஒற்றை பார்வை பார்த்தால்… அந்த கணம் நான் என்னாவேனோ பேபி… எனக்கே தெரியவில்லை?’ அவன் மனம் ஊமையாய் புலம்பியது. அந்த காட்சியை கற்பனையில் கூட அவனால் காண முடியவில்லை. தலையை குலுக்கி தன்னை சமன் செய்தவன்,

 

‘ம்ஹும்… உன்னை யாருக்காகவும்… எதுக்காகவும் நான் விட்டு கொடுக்க மாட்டேன். நீயே என்னை வெறுத்து ஒதுக்கினாலும்… நான் உன்னை விட்டு போக மாட்டேன்… போகவே மாட்டேன்’ மனதுக்குள் உறுதியாய் நினைத்தவன் அவளின் கையை இறுக பற்றி கொண்டான்.

About lavender

Check Also

Shenba _Ninnai Saranadainthen 3

அத்தியாயம்-3   தீபக்குடன் தன் மாமா வீட்டிற்கு வந்து இறங்கிய மது வாசலிலேயே தன் ஸ்கூட்டி நிற்பதை பார்த்துவிட்டு. “ஒ..! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *